ட்ரம்ப்பைத் துவைத்தெடுத்தார் ஜனாதிபதி ஒபாமா

ஜனநாயகக் கட்சியின் 2004ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டின்போது, அப்போது இலினொய்ஸ் மாநிலத்தின் செனட்டின் உறுப்பினராக இருந்த 42 வயதான பராக் ஒபாமா, மிகச்சிறந்த உரையொன்றை ஆற்றினார். அந்த உரை தான், பராக் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கையை உண்மையில் தொடக்கி வைத்தது என்று சொல்வர்.

அந்த உரையின் பின்னர், அமெரிக்க செனட்டின் உறுப்பினராக ஒபாமா தெரிவானதோடு, அவ்வாறு தெரிவாகி மூன்றே ஆண்டுகளில், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற வரலாற்றை அவர் படைத்திருந்தார்.

12 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவை மாபெரும் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மீட்ட, சுகாதாரத் துறையில் புதிய திட்டங்களைக் கொண்டுவந்த, ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையை ஏற்படுத்திய, ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட ஆயுததாரிகளைக் கொன்ற, வெளிநாட்டுக் கொள்கையில் மிதவாதப் போக்கைக் கடைப்பிடித்த ஜனாதிபதியாக, ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ஒபாமா தோன்றினார்.

இம்முறை, அதிக அழுத்தங்களைச் சந்தித்துள்ள தனது கட்சியைச் சேர்ந்தவரும் 2008ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான போட்டியில் தான் தோற்கடித்தவரும் பின்னர் தனக்குக் கீழ் இராஜாங்கச் செயலாளராகப் பணியாற்றியவருமான ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவளிப்பதற்காக அவர் தோன்றினார்.

தனது உரையின் ஆரம்பத்தில், 12 ஆண்டுகளுக்கு முன்னர் உரையாற்றிய தனது அனுபவத்தையும் அதன் பின்னர் ஜனாதிபதியாகிய அனுபவங்களையும் பகிர்ந்த ஜனாதிபதி ஒபாமா, தனது ஜனாதிபதிப் பதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அடைவுகளை, மிகச்சுருக்கமாகப் பட்டியலிட்டார்.

அதன் பின்னர், இவ்வளவு அடைவுகளை அடைந்துள்ள போதிலும், இன்னமும் ஏராளமான பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அவர், அதன் காரணமாக, நவம்பரில் இடம்பெறவுள்ள தேர்தல், முக்கியமானதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக, இரு தரப்பினருமே அடிக்கடி மோதிக் கொள்வர். அத்தோடு, குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களே, ஜனாதிபதி ஒபாமாவுக்கெதிரான தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டமையும், அவருக்கெதிரான தனிப்பட்ட தாக்குதல்களைக் கண்டுகொள்ளாத நிலைமையும் காணப்பட்டது.

ஆனால், கடந்த வாரம் கிளீவ்லன்டில் இடம்பெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் இடம்பெற்றமை, குடியரசுக் கட்சியோ அல்லது பழைமைவாதக் கொள்கையோ கிடையாது எனத் தெரிவித்த ஜனாதிபதி ஒபாமா, தனது கோபத்தை டொனால்ட் ட்ரம்ப் என்ற தனிநபர் மீது வெளிப்படுத்தினார்.

“டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார். திட்டமிடும் நபரல்லர் அவர். உண்மையை நம்பும் நபருமல்லர். வணிக நபர் என அவர் தன்னை அழைக்கிறார். அது உண்மை தான், ஆனால் ஏராளமான வணிக நபர்களை எனக்குத் தெரியும். வழக்குத் தாக்கல்கள், சம்பளம் வழங்கப்படாத ஊழியர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என எண்ணாத மக்கள் ஆகியவற்றைத் தடமாக வழங்காமல் அவர்கள், வெற்றிகளைப் பெற்றார்” எனத் தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் “அமெரிக்காவை மீண்டும் அதிசிறந்ததாக்குவோம்” என்பதை விமர்சித்த ஜனாதிபதி ஒபாமா, “அமெரிக்காக ஏற்கெனவே அதிசிறந்தது. அமெரிக்கா ஏற்கெனவே பலமானது. எங்களுடைய பலமும் எங்களுடைய சிறப்பும் , டொனால்ட் ட்ரம்பில் தங்கியிருக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன். உண்மையில் அது எந்தவொரு நபரிலும் தங்கியிருக்கவில்லை. அது தொன் இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வேறுபாடாக இறுதியில் மாறலாம் – எங்களுடைய ஜனநாயகத்தின் அர்த்தம்” என்றார்.

அமெரிக்கா என்பது, பல்வகைமிக்க அனைத்துத் தரப்பினரும் ஒரு நாடு என்பதை வெளிப்படுத்திய ஜனாதிபதி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய அடுத்த ஜனாதிபதி, ஹிலாரி கிளின்டனே எனத் தெரிவித்தார். ஒசாமா பின்டேலனைக் கொல்வதற்கு எடுத்த முடிவு போன்ற கடினமான முடிவுகளின்போது, தன்னுடன் ஒரே அறையில் இருந்து முடிவுகளை எடுத்தவர் என்ற அடிப்படையில், கடினமாக முடிவுகளை எடுப்பதற்கு ஹிலாரி பழக்கப்பட்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “இதற்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதிப் பதவிக்கு பொருத்தமானவராக எந்தவோர் ஆணோ அல்லது பெண்ணோ – நானுமில்லை, பில் கிளின்டனுமில்லை, வேறு எவருமில்லை – ஹிலாரி கிளின்டனை விட யாரும் இருந்ததில்லை” எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஒபாமாவின் உரையின் முடிவில், அந்த மேடையில் ஹிலாரி கிளின்டன் தோன்றியிருந்தார். அத்தோடு, ஜனாதிபதி ஒபாமாவுக்கு முன்னதாக, உப ஜனாதிபதி ஜோ பைடன், நியூயோர்க்கின் முன்னாள் மேயர் மைக்கல் புளூம்பேர்க் ஆகியோரும், ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவான தங்கள் உரைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.