நாடு ஓரளவு மூச்சுவிட 8 மாதம் செல்லும்!

அவர் சொல்வதைப்பார்த்தால் இப்போதைக்கு இந்த நாட்டை மீட்பதற்கு அவரைவிட்டால் வேறு யாரும் இல்லை என்றே தோன்றுகிறது. அவருக்கு நிதி அமைச்சு பொருத்தமா என்று ஊடக நண்பர்கள்கூட கேள்வி எழுப்பி இருந்தார்கள். பௌத்த தேரர் ஒருவர்கூட சிங்களவர்கள் முட்டாள்கள் என்று சொல்லி இருந்தார். நேற்று அந்த தேரர் அமைச்சரின் பேட்டியைக் கேட்டிருந்தால் அசந்து போய் இருப்பார்.

எங்கெங்கு கடன் பெற முடியுமோ அங்கெல்லாம் கடன் பட்டு மீளச் செலுத்த முடியாமல் நாடு திணறிப் போய் இருக்கிறது. எரிபொருள், காஸ், மின்சாரம் போன்ற துறைகள் இறுதி மூச்சு வாங்குகின்றன. நூலறுந்த பட்டம்போல் டொலர் உயர உயர சென்றுகொண்டு இருக்கிறது. சர்வதேச நாணய நிதிய உதவி கிடைக்க பல மாதங்கள் செல்லலாம்.

அப்படி உதவி கிடைக்காவிட்டால் என்ன நடக்குமென்று சொல்ல முடியாது. வேறு நாடுகளின் கடனைச் செலுத்த முடியாது என்று அறிவித்தமை மகா தவறு. இது ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாகிவிடலாம் என்பதால்தான், இலங்கை ச.நா நிதியத்திற்குச் செல்வதை சீன அரசாங்கம் விரும்பவில்லை. இப்போது வேறு நாடுகளுக்குச் செலுத்த வேண்டிய கடனை மீளச் செலுத்தும் முறையை மீள் ஒழுங்குபடுத்திக்கொண்டு வருமாறு ச.நா நிதியம் சொல்லி இருக்கிறது.

தற்போது சீனா ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவும் நம்மை கைவிடாது. 1985-1986 காலத்து இந்தியா அல்ல தற்போதைய இந்தியா. அது எல்லாத் துறையிலும் முன்னேறிவிட்டது. இந்த பிராந்தியத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும்தான் ஜனநாயகம் வாழ்கிறது. எனவே, நமது ஸ்திரத்தன்மைகு இந்தியா நிச்சயம் உதவும்.

அரசியலமைப்பு பாதுகாக்கப்படவும்தான் ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடியதாக உள்ளது. அரசியலமைப்பு எங்காவது ஓர் இடத்தில உடையுமானால், நாடு சீரழிந்துவிடும். இந்த யதார்த்தத்தை மக்களும் அரசியல்வாதிகளும் உணர்ந்து நடக்க வேண்டும், என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் இதனைத்தெரிவித்தார்.

வரி வருமானத்தை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 .5 கோடி மக்களில் சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள். நிதி அமைச்சை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. அதனால் நான் முன்வந்து ஏற்றேன். எடுத்தபின்தான் ஆபத்து புரிகிறது. இப்போதும் யாராவது முன்வந்தால் ஒப்படைத்துவிடுவேன்.

நான் சிங்களம், தமிழ், முஸ்லீம் என்று பார்ப்பவன் இல்லை. எனக்கு உழைப்பதற்கு தொழில் இருக்கிறது. எனவே, இந்த நெருக்கடியான காலகட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறி உள்ளது. அரசியல் நெருக்கடி தீர்ந்தால் பொருளாதார நெருக்கடி தீரும் என யாரவது சொன்னால் அது முட்டாள்தனம்.

நான் பிரபலத்திற்காக எதையும் சொல்லமாட்டேன். மக்கள் புரிந்து நடந்து கொள்ளுங்கள். அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்குமோ என்று எனக்கே தெரியாது என்று நாட்டு நிலவரத்தை விளக்குகிறார் அமைச்சர் அலி சப்ரி!

அவர் சட்டத்தரணிதான், பிரபலம் அல்லாதவர்தான் ஆனால், நாட்டின் பொருளாதார உடல் நலத்தை முழுமையாக அறிந்துகொண்டுள்ள நிபுணத்துவமிக்க ஒரு நிதி அமைச்சர் என்பதையம் நேற்று புரிய வைத்திருக்கிறார்.