பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்?!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள், நால்வரையும் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா உத்தரவிட்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தன் [பிள்ளையான்], எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா [பிரதீப் மாஸ்டர்], கனகநாயகம் [கஜன் மாமா] ராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 திகதியன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை [பிள்ளையான்] கைதுசெய்திருந்தனர். இதேவேளை, சிவநேசத்துரை சந்திரகாந்தனால் பிணைமனு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.