புகலிடம் கோரும் 1,333 பேர் நாட்டில் உள்ளனர்

“அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி வருகைத்தந்த 1,333 பேர், ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் பொறுப்பின் கீழ் இலங்கையில் உள்ளனர்” என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். “கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரையிலும் புகலிடம் கோரியோரின் எண்ணிக்கையே இதுவாகும்” என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இலங்கையில் தங்கியுள்ளவர்களில் 728 பேர் அகதிகளாக உள்ளனர். மேலும் 605 பேர், அரசியல் தஞ்சம் கோரி உள்ளனர்” என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். “அரசியல் தஞ்சம் கோருவோர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையகம் ஆராய்ந்து வருவதுடன், அவர்களுக்கு அரசியல் தஞ்சம் தேவையென கருதினால் பொருத்தமான நாட்டுக்கு அவர்களை அனுப்பிவைக்கவும் அல்லது அவர்களை தாய் நாட்டுக்கே மீள அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதன்போது தெவித்தார்.

“இவ்வாறு இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் பாகிஸ்தானிலிருந்து வருகைதந்த 1,037 பேர் உள்ளனர். அதேவேளை, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 190 பேரும்,ஈரானைச் சேர்ந்த 18 பேரும், மாலைத்தீவைச் சேர்ந்த 11 பேரும் உள்ளனர்” என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

“அதுமட்டுமன்றி, மியன்மாரிலிருந்து வருகைத்தந்த 36 பேரும், பாலஸ்தீனைச் சேர்ந்த 10 பேரும், சோமாலியாவைச் சேர்ந்த 14 பேரும், சிரியாவிலிருந்து வருகைத்தந்த ஒருவரும், டியுனிசியாவிலிருந்து வருகைத்தந்த ஒருவரும், யேமனிலிருந்து வருகைத்தந்த 13 பேரும், மற்றும் நைஜீரியாவிலிருந்து வருகைத்தந்த இருவரும் உள்ளனர்” என அமைச்சர் குறிப்பிட்டார்.