புலிகளிடம் இருந்து தப்பியவர் சாகும்வரை உண்ணாவிரதம்

விடுதலை புலிகளினால் 290 பொலிஸார் கொல்லப்பட்ட திருக்கோவில் ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில், அந்தசம்பவத்துக்கு முகங்கொடுத்து அதிலிருந்து தப்பிவந்த பொலிஸ் சார்ஜன், தனது மனைவி பிள்ளைகள் மூவருடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை 9 மணியிலிருந்து ஈடுபட்டுள்ளார். மனோஜ் பிரியந்த சிறிவர்தன எனும் பெயர் கொண்ட இந்த அதிகாரி 1990ஆம் ஆண்டு கல்முனை பொலிஸில் சேவையாற்றியவர் ஆவார்.

1990ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் திகதி புலிகள் அமைப்பினரால் கடத்தப்பட்டு கொலை கஞ்சிக்குடிச்சாறு, ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டனர். அதிலிருந்து இந்த பொலிஸ் அதிகாரி மாத்திரம் தப்பியிருந்தார். இந்நிலையில், இவர் 10 நாட்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தாக்கல் செய்த வழக்கு, 13 வருடங்களாகியும் எந்தவித தீர்வும் இன்றி கிடப்பில் உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இந்த சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

அன்று, தான் உள்ளடங்கிய பொலிஸாரை கொலை செய்ய நடவடிக்கை எடுத்த கருணா அம்மான், இன்று சுதந்திரமாக வாழ்கின்ற நிலையில் அதிலிருந்து உயிரைக் காப்பாற்றி தப்பிச்சென்ற தான், அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவிதமான பயனும் இல்லை என்பதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

‘எனக்கு மீண்டும் வேலை தேவை நான் சேவையில் இருந்தபோது ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது நாட்டுக்காக கடமையை நீதியாகச் செய்தேன். நாட்டுக்காக உழைத்த நான் வேலை இல்லாது 13 வருடங்களாக 3 பிள்ளைகளுடன் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றேன்.

எனவே, எனக்கு நீதிவேண்டும். கடமையில் இருந்து விலகிய காலம் தொடக்கம் வேதனம் வழங்கி மீண்டும் வேலை வழங்கவேண்டும். அதுவரை மனைவி பிள்ளைகளுடன் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுபடபோகின்றேன்’ என அவர் மேலும் கூறியுள்ளார்.