மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

கடந்த ஒரு வாரமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். காரில் இருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்த கருணாநிதியை, கோபாலபுரம் இல்லத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் வரவேற்றனர். சிகிச்சை நிறைவடைந்து உடல்நிலை தேறியுள்ள நிலையில், கருணாநிதி முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், பார்வையாளர்களைச் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், பூரண குணமடையும் வரை அவருக்கு வீட்டில் இருந்தே மருத்துவர்கள், செவிலியர்கள் குழுவைக் கொண்டு அடுத்த சில வாரங்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்ததால் கடந்த 7-ம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி இரவு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்படவே உடனடியாக காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 16-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தொண்டை, நுரையீரல் தொற் றால் கருணாநிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே, மூச்சு விடுவதை எளிதாக்கும் டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக் கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 17-ம் தேதி கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதிமுக சார்பில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.