முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறியது சரியே – டொனால்டு ட்ரம்ப்

ஜெர்மனி, துருக்கியில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதல்களின் மூலம், முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற தனது திட்டம் மிகச் சரியானது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகளை முன்வைத்தார். முஸ்லிம்களுக்கு தனி பதிவேடு, அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் குடியேறத் தடை விதிப்பது போன்ற அவரின் பல திட்டங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

எனினும் தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், புளோரிடாவில் உள்ள தனது மார்-அ-லாகோ எஸ்டேட்டில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், அண்மையில் துருக்கி மற்றும் ஜெர்மனியில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை கண்டித்தார்.

அப்போது, ‘ஐரோப்பா, துருக்கியில் நிகழ்ந்திருப்பது பயங்கரமான சம்பவம். மிக மிக பயங்கரமானது. நம்முடைய உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாலும், மனிதாபிமானத்தின் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதலை சகிக்க முடியவில்லை’ என்றார்.

இச்சம்பவங்களால், முஸ்லிம்கள் தொடர்பான உங்களின் திட்டங்களை மறுஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், ‘என் திட்டங்கள் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவிலும், துருக்கியிலும் இப்போது நடந்திருப்பதைப் பார்க்கும்போது, என் யோசனை 100 சதவீதம் சரி என்பது நிரூபணமாகிறது’ என்றார்.

இந்த பேட்டியைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிப்பது உள்ளிட்ட தனது திட்டங்களில் ட்ரம்ப் உறுதியுடன் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடத் தொடங்கிவிட்டன.