“யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவு தான்” – ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் சரமாரியாக பாய்ந்து தாக்குவதால் உச்சக்கட்ட பதற்ற நிலை உருவாகியுள்ளது.

உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என ஜனாதிபதி புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன், ‘உக்ரைனை ஆக்கிரமிப்பது ரஷ்யாவின் நோக்கமல்ல. அங்கு அமைதியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். நேட்டோவில் உக்ரைனை சேர்க்க கூடாது என்ற எங்கள் கோரிக்கையை அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஏற்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், நேட்டோ கூட்டணி நாடுகளின் தலைவர்களுடனும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.