லண்டன் (கனடா) துயர்!

அக்குடும்பத்தினர் 14 வருடங்களுக்கு முன்னர் நல்வாழ்வுக்காகப் பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். இப்படுகொலைச் சம்பவத்தில் இடம் பெற்றவர்கள் விபரங்கள் வருமாறு: ஜும்னா அஃப்சால் (Yumna Afzaal, 15), மடிகா சல்மான் (Madiha Salman, 44), தலாட் அஃப்சால் (Talat Afzaal, 74) & சல்மான் அஃப்சால் (Salman Afzaal, 46). படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஃபயெஸ் ( Fayez, 9).

மிகவும் துயர்மிகுந்த திட்டமிடப்பட்ட இப்படுகொலைகளால் கனடாவின் அனைத்துச் சமூகத்தினரும் அதிர்ச்சியும், துயருமடைந்துள்ளனர். கொரோனா என்னும் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் இதுபோன்றதொரு செயல் நடந்துள்ளது. இச்சம்பவத்தால் கனடாவின் சிறுபான்மைச் சமூகங்கள் தம் எதிர்கால வாழ்க்கை பற்றி அச்சம் அடைந்துள்ளனர்.

இத்துயர் நிறைந்த சூழலில் இப்படுகொலைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தவர்கள், சமூகத்தவர்கள் அனைவர்தம் துயரினை நாமும் பகிர்ந்துகொள்கின்றோம்.இத்துயர்நிறைந்த சூழலிலும் நம்பிக்கைதரும் விடயமொன்றுமுள்ளது. அது இந்நாட்டில் வாழும் பல்லின மக்களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் தந்துள்ளது.

அது: காவல்துறையினர் தொடக்கம் அரசியல்வாதிகள், சமூகக் குழுக்கள், மக்கள் அனைவரும் இப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்துள்ளார்கள். அரசியல் வேறுபாடுகளற்று குரல் கொடுத்துள்ளார்கள். சந்தேகநபரான நதானியல் வேல்ட்மனைக் (Nathaniel Veltman) கைது செய்து விசாரித்த பொலிசார் உடனடியாகவே இப்படுகொலைகள் திட்டமிட்டு முஸ்லிம் மக்களுக்கெதிராக நடத்தப்பட்டவை. இதனைப்புரிந்தவர் நான்கு முதற்தரக்கொலைகளையும் , ஒரு கொலைமுயற்சி ஆகிய குற்றங்களையும் புரிந்துள்ளார் என்றும் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்கள்.

லண்டன் நகர முதல்வர் Ed Holder தொடக்கம், ஒண்டாரியோ மாகாண முதல்வர் Doug Ford, கனடியப்பிரதமர் Justin Trudeau வரை அனைவருமே இப்படுகொலைளைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இது ஒரு பயங்கரவாதச் செயற்பாடு என்றும் தெரிவித்துள்ளார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு மேலும் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படுவதுடன், பல்லினக் கனடிய மக்கள் மத்தியிலான புரிந்துணர்வை மேலும் அதிகரிக்கும் வகையில் கல்விச்சாலைகள், பணியிடங்கள் ஆகியவற்றில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இன, மத, மொழி, நிறவாதங்களுக்கெதிராக அனைவரும் குரல்கொடுப்பதுடன் , செயற்பட வேண்டுமென்பதையே லண்டன் படுகொலைகள் வேண்டி நிற்கின்றன. அதே சமயம் குற்றவாளையை விரைவாகக் கைது செய்து, விசாரணைகளைத் துரிதப்படுத்தி இப்படுகொலைகள் திட்டமிட்டு , முஸ்லிம் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட படுகொலைகள் என மக்களுக்கு அறிவித்த காவல் துறையினர் பாராட்டுக்குரியவர்கள்.