‘வடக்கில் கடற்படை வேண்டும்’ – மனோ கணேசன்

‘தென் இந்தியர்களின் அத்துமீறிய மீன்பிடிப்பை தடுப்பதற்கு, இலங்கை கடற்படையினர் வடக்கில் இருக்க வேண்டும் என்பதே வட பகுதி மக்களின் விருப்பம்’ என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு அறிமுக விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ‘வட பகுதியில் கடற்படையினர் இருக்க வேண்டும் என்று வட பகுதி மக்கள் என்னிடம் கூறினர். நான் சமீபத்தில் வடக்குப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, இலங்கை கடற்பரப்புக்குள் இருக்கும் மீன்கள், இந்திய மீனவர்களால் திருடப்படுவதை தடுப்பதற்கு, கடற்படையினர் வடக்கில் இருக்க வேண்டும் என்று மக்கள் என்னிடம் கூறினர். வட பகுதி மக்களின் இவ்வகையான உணர்வுகள் குறித்து நம் நாடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.

‘இதேவேளை, பாதுகாப்பு படையில் இருந்துகொண்டு தவறு செய்தோருக்கும் தண்டனை வழங்கப்படல் வேண்டும். எந்தவொரு நாட்டிலுள்ள பாதுகாப்பு படையினரும் யுத்தத்தின் போது தவறிழைக்கும். இந்தியாவின் அமைதி காக்கும் படையும் தவறிழைத்தது. அதேபோன்று இலங்கைப் பாதுகாப்புப் படையும் யுத்தத்தின் போது தவறிழைத்தது. அதனால் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படல் வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.