மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு!

இயற்கைவள கடற்தொழில் முறைகள் இருந்தாலும், பண்ணைமுறைகளையும் உலக நாடுகள் நடைமுறைப் படுத்தித்தான் வருகின்றன.

நாங்கள் இப்போதுதான் பண்ணைமுறை அபிவிருத்தியைக் கையில் எடுத்திருக்கின்றோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இவை மிகவும் தேவைப்பாடனதுமாகும்.

இதில் எனக்கு ஏற்படும் விசனம் என்னவெனில்,

இந்தப் பண்ணைமுறைத் திட்டங்களை நாம் சரியான, தோதான இடங்களில் அமைக்க வேண்டும் என்பதுதான்.

உதாரணமாக வடக்கில் அட்டைப் பண்ணைகளை அமைக்கும் இடங்கள் சரியாகத் தேர்வு செய்யப் பட வேண்டும்.

ஏனெனில் வடக்கிலுள்ள கடல் நிலப்பரப்பானது பல ஆயிரம் களக்கடல் மீனவர்களின் ஆதாரங்களாகும்.

இந்தக் களக்கடலை நம்பித்தான் பல்லாயிரம் கரையோரக் குடும்பங்கள் வாழ்கின்றன.

உதாரணத்துக்கு,

எனது கிராமத்தை மட்டும் நான் இங்கே தரவுகளோடு முன் வைக்க நினைக்கின்றேன்.

மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் அட்டைவளர்ப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு தேர்வு செய்யப் பட்டுள்ள களக்கடற் பரப்பானது முற்றிலும் தவறானது.

பன்நெடுங்காலமாக இந்தப் “புறவாய்” என்று சொல்லப் படுகின்ற களக்கடலை நம்பித்தான் துறையூர், சுருவில், மெலிஞ்சிமுனை, ஊறுண்டி, பருத்தியடைப்பு ஆகிய கிராமங்களின் மீனவர்கள் வாழ்கிறார்கள்.

அதாவது நரையாம்பிட்டியிலிருந்து கிழக்காக வேலணை-புங்குடுதீவு வீதி வரை உள்ள பிரண்டையாற்றுச் சரிவு, மற்றும் நரையாம்பிட்டியிலிருந்து தெற்காக பல்லதீவு வரையுமுள்ள களக்கடல்கள்.

இந்த இடங்கள் தீவகக் குடாக்கடலின் உயிரினங்கள் மேய்ச்சலுக்காகவும், இனவிருத்திக்காகவும் விளங்கும் இடங்களாகும்.

இத்தகைய இயற்கை வளம் மிக்க சிறப்பான இடங்களை அடைத்து நாம் அட்டைப் பண்ணைகள் அமைப்போமானால் மேலே சொல்லப்பட்ட அத்தனை இயற்கை அம்சங்களும் தடைப்பட்டு, அற்றுப் போய்விடும்.

இந்த வளங்களை மட்டுமே நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பட்டினிச் சாவுக்குள் தள்ளப் படுவார்கள்.

மேற்படி அட்டைப் பண்ணை அமைப்பதற்கான மாற்றுத் திட்டங்களும் எம்மிடம் இல்லாமலில்லை. இருக்கிறது.

கடந்த காலங்களில் தாணையமுறைத் தொழில், வாடிமுறை மீன்பிடி என தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றன.

குறிப்பாக, மெலிஞ்சிமுனைத் தொழிலாளர்கள் கடலட்டைத் தொழிலுக்காக கல்முனை, கவுதாரிமுனை, வலைப்பாடு, பள்ளிக்குடா, நாச்சிக்குடா, தேவன்பிட்டி, மண்டைக்கல்லாறு, குமுழமுனை, அரிப்புத்துறை, சிலாவத்துறை, பளுக்காத்துறை என பருவகாலத் தாணையங்கள் அமைத்துத் தொழில் செய்தவர்கள்தான்.

மேற்படி அட்டைப் பண்ணைகளை பாலைதீவு, கற்கடதீவு போன்ற ஆழ்கடலுக்கு நகர்த்துங்கள். அட்டையின் வளர்ச்சியும், நிறையும், தரமும்கூட இந்த இடங்களில் பண்ணைகள் அமைப்பதால் மிகவும் அதிகமானதாகவும் இருக்கும்.

மெலிஞ்சிமுனைக் களக்கடலில் வளர்த்தெடுக்கப்படும் அதே அட்டைகள் மேற்சொல்லப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்வோமானால் வருவாய் மூன்று மடங்காக ஆகுவதற்கான முழுச் சாத்தியங்களும் உண்டு.

ஏனெனில், கடலட்டையின் உணவு மண்தான். மெலிஞ்சிமுனைக் களக்கடலில் காணப்படுவது சதுப்பு நிலமும், கறுப்புச் சேறுமாகும்.

அதேவேளை, பாலைதீவு, கற்கடதீவு நிலப்பரப்பானது பெருமணலைக் கொண்டவையாகும். எப்போதும் பெருமணற்பரப்பில் காணப்படும் அட்டைகள் வைரமானதும், நிறையானதும், முதலாம் (SFO)தரமானதுமாகும்.

எனவே எனது மதிப்புக்குரி தோழரே,

எமது மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை ஆழ்கடல் நோக்கி நகர்த்துங்கள்.

இந்தக் குடாக்கடல் அட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு முற்றிலும் தோதானதல்ல.

20தனிநபர்கள் சம்பாதிப்பதற்காக ஆயிரக்கணக்கான குடும்பங்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ள முடியாது.

தோழமையோடு இதனைப் புரிந்து கொண்டு, தகுந்த நடவடிக்கையை மேற்கொள்வீர்களென நம்புகின்றேன்.

என்றும் நாம் மக்களுக்கே!

தோழமையுடன் தமயந்தி (குட்டி)