’முழு நாடுமே ஒன்றாக’ வட மாகாண நிகழ்ச்சி

மேலும், ஒரு சமூகமாக மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றவும், அதற்காக ஒரு பாரிய பாதுகாப்பு அரணாக ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு தீவிர பங்களிப்பை வழங்கிய வட மாகாண முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.  

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் மாத்திரமன்றி, அதற்கு ஆளான பிள்ளைகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்பயிற்சி வழங்கி, கிராமத்திற்கும் நாட்டிற்கும் பயன்மிக்க பிரஜைகளாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டமாகும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் முதல் முறையாக, தெற்கு மற்றும் வடக்கு மக்களால் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரத்தை இழந்த இனவாத குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சித்தாலும், நாட்டில் மீண்டும் எந்த இனவாத போக்கும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகளின் அபிவிருத்திக்காக கடந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தி மக்கள் அந்த அபிவிருத்திப் பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.