‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’

அடுத்த தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை அரசியல் நாற்காலியில் இருந்து கீழ் இறக்க செயற்படவுள்ளதாக கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்ப ட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம், 21ஆவது நாளாகவும் நேற்றுத் தொடர்ந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், நேற்றுச் சந்தித்தார். இதன்போது, நேற்றைய கலந்துரையாடலில் சில விடயங்கள் மாத்திரமே ஆராயப்பட்டது. கால நீடிப்பு வழங்குவதற்கு தாம் தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டு வந்ததாகவும் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தால், அவரிடமே அதைக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு, அடுத்த தேர்தலின்போது இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை, அரசியல் நாற்காலியில் இருந்து கீழ் இறக்குவதற்காக செயற்படவுள்ளதாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, “வலிகளைச் சுமந்த எமது பிள்ளைகளுக்கு இடமளித்து, அரசியலில் வயது முதிர்ந்தவர்கள் ஓய்வுபெற வேண்டும்” என்ற கோரிக்கையையும், மக்கள் முன்வைத்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற, இலங்கை 2 வருட கால அவகாசம் கோரியுள்ளது. இக்கால அவகாசத்தை வழங்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பலரும் எதிர்ப்புகளை வெளியிட்ட நிலையில், இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய கால அவகாசம் வழங்குவது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், தீர்மானம் ஒன்று நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன், குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வவுனியாவில் கறுப்பு கொடிகளை அசைத்தவாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.