ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைகள் நிறுத்தம் பயணிகள் பாதிப்பு

குறிப்பாக சுமார் ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னதாக, இந்த விமான சேவையில் தமது பயணத்தை மேற்கொள்வதற்காக முற்பதிவுகளை மேற்கொண்டிருந்த ஐக்கிய இராஜ்ஜியத்தில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தம்பதியினர், ஜெட் எயார்வேய்சினால் முறையான முன்னறிவித்தல், மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்படாததால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 15ஆம் திகதி இலங்கையிலிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவையில் கொழும்பிலிருந்து மும்பை ஊடாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு பயணமாகவிருந்த நிலையில், இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறித்த பயணிகளுக்கு முன்னறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு மாற்றீடாக பிரிதொரு விமான சேவை வழங்குநரினூடாக 19ஆம் திகதி ஓமானின் மஸ்கட் ஊடாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு பயணிப்பதற்கு மாற்று ஏற்பாட்டை ஜெட் எயார்வேய்ஸ் மேற்கொண்டிருந்ததாக அறிவித்து, குறித்த விமான சேவையின் பயணிகள் ஏறும் அனுமதிச்சீட்டையும்
(Boarding pass) வழங்கியிருந்தது.

19ஆம் திகதி காலை பண்டாரநாயக்க விமான நிலையம் சென்ற குறித்த பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த விமான சேவையை வழங்கும் நிறுவனம் தமக்கு எவ்விதமான அறிவித்தலும் வழங்கப்படவில்லை என பயணிகளுக்கு தெரிவித்து அவர்களை தமது விமான சேவையில் பயணிக்க அனுமதிக்கவில்லை.

இது தொடர்பாக ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவையுடன் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அந்த முயற்சி கைகூடவில்லை. ஏனெனில் 18 ஆம் திகதி முதல் ஜெட் எயார்வேய்ஸ் சேவைகள் அனைத்தும் முழுமையாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக பண்டாரநாயக்க விமான நிலையத்தின் விமான பயண சேவைகளுக்கு பொறுப்பாக கடமையாற்றிய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “ஜெட் எயார்வேய்ஸ் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் முற்பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறு முன்பதிவுகளை மேற்கொண்டு, மாற்று விமான சேவைகளில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட மேலும் சில வெளிநாட்டு பிரஜைகளுக்கும் இவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. இந்த மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில், குறித்த விமான சேவையை வழங்கும் நிறுவனத்துக்கு ஜெட் எயார்வேய்ஸ் முறையாக அறிவிக்காததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த மாற்று பயண ஒழுங்கை வழங்க முன்வந்த விமான சேவை நிறுவனத்தை குறைகூற முடியாது. விமான சேவையின் பயணிகள் ஏறும் அனுமதிச்சீட்டை (Boarding pass) எந்த விமான சேவை நிறுவனத்தினாலும் வழங்க முடியும். ஆனாலும், அது தொடர்பாக முறையான அறிவித்தல்கள் மாற்று விமான சேவை வழங்குநருக்கு வழங்கப்பட வேண்டும். அதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், இவ்வாறான மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்ட ஏனைய பயணிகளையும் தமது பிரயாணத்துக்கு முன்னதாக, குறித்த சேவையை வழங்கும் விமான சேவை நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி, தமது பயணத்தை மீண்டும் உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த தம்பதியினர் மாற்று விமான சேவையொன்றில் தமது பயணத்தை மேற்கொள்வதற்கு மீண்டும் பதிவுகளை மேற்கொண்டு தமது பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜெட் எயார்வேய்ஸ் ஊழியர்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு கடந்த டிசெம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாமையினால், அவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். சிலர் மாற்று வேலை வாய்ப்புகளை தேடிக் கொண்டனர்.

இந்நிலையில் இந்தியாவில் தேர்தல் இடம்பெறுவதை காரணம் காட்டி, ஜெட் எயார்வேய்ஸ் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கு அவசியமான நிதி உதவிகளை இந்தியாவின் அரச வங்கிகளிலிருந்து மோடி அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக் கட்ட மீட்பு பேச்சு வார்த்தை முயற்சிகளும் தோல்வியல் முடிவடைய, நிறுவனத்தின் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்படுவதாக சர்வதேச செய்திச் சேவைகள் அறிவித்திருந்தன.

1992ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பை நகரில் நிறுவப்பட்ட ஜெட் எயார்வேய்ஸ் நிறுவனத்தின் சர்வதேச விமான சேவைகள் 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2019 பெப்ரவரி மாதம் முதல் இந்த விமான சேவை நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருந்ததுடன், 2019 மார்ச் 25 ஆம் திகதி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக செயலாற்றிய நரேஷ் கோயால் தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார். 2019 ஏப்ரல் 12ஆம் திகதி முதல் தனது சர்வதேச விமான சேவைகளை நிறுவனம் முற்றாக நிறுத்தியிருந்தது.

நிறுவனத்தின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அவசர நிதித் தேவையாக காணப்பட்ட 400 கோடி இந்திய ரூபாய்களை திரட்டிக் கொள்ள முடியாததன் காரணமாக, ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் தனது சகல செயற்பாடுகளையும் ஜெட் எயார்வேய்ஸ் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தில் சுமார் 23000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

சம்பளம் வழங்கப்படாமையை எதிர்த்தும், நிறுவனத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவது குறித்து முன்கூட்டியே தமக்கு அறிவிக்கப்படாததை எதிர்த்தும் ஜெட் எயார்வேய்ஸ் ஊழியர்கள் மும்மை மற்றும் நியுடெல்லி நகரங்களில் ஜெட் எயார்வேய்ஸ் நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜெட் எயார்வேய்ஸ் ஊழியர்களுக்கு ஏனைய விமான சேவை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும் என இந்திய சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் ஜயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஜெட் எயார்வேய்ஸ் நிறுவனத்தின் சுமார் 24 சதவீதமான பங்குகளை எதிஹாட் எயார்வேய்ஸ் தன்வசம் கொண்டுள்ளது. ஜெட் எயார்வேய்ஸின் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்களை குத்தகைக்கு கொள்வனவு செய்வதற்கு ஸ்பைஸ் ஜெட் மற்றும் எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற விமான சேவைகள் கோரிக்கைவிடுத்துள்ளன.