மெத்தப் படித்தவர்கள் தலைமையில்! வடக்கு மாகாண சபையின் நிலை? [நீட்சி-2]

1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி, திருமலை நகரசபை மண்டபத்தில், ஆளுநர் முன் இடம்பெற்ற சத்திய பிரமாண வைபவம் என் கண்முன் விரிகின்றது. மேடையில் ஆளுநர், அன்றைய அரச அதிபர் மற்றும் மேலதிக அரச அதிபர் அமர்ந்திருக்க, உறுப்பினர்களான நாம் அனைவரும் கீழே வரிசையாக தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் போல் அமர வைக்கப்பட்டோம். மேலதிக அரச அதிபர் மேடையில் ஒலி வாங்கி முன் நின்று சத்திய பிரமாண வாசகங்களை வாசிக்க நாமும் கோரசாக அதனை தொடர்ந்தோம். பின்பு பேரவை தலைவர், மற்றும் பிரதி பேரவை தலைவர் பெயர்கள் முன்மொழிந்து, வழிமொழியப்பட போட்டி இன்றிய தெரிவாக அது நிறைவேறியது. அப்போது அம்பாறையில் இருந்து தெரிவான 1 யு என் பி உறுப்பினரும், திருமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் இருந்து தெரிவான 17 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சமூகமளிக்கவில்லை.

பேரவை தலைவராக போட்டி இன்றி தெரிவானதால் ஆளுநர் முன் பதவி பிரமாணம் செய்யவே நான் மேடைக்கு அழைக்கப்பட்டேன். மேடைக்கு செல்லும் போது மானிப்பாய் வெஸ்லி, இணுவில் காலிங்கன், நெல்லியடி மகாத்மா, கிளிநொச்சி சண்முகா தியேட்டர்கள் என் கண்முன் விரிந்தன. காரணம் களவாக படம்பார்க்கும் போதெல்லாம் கலரி வரிசை தான் எனக்கு வசதி. திருமலை நகரமண்டப முன்வரிசையில் இருந்து மேடைக்கு சென்றதும் என்னை கலரியில் இருந்து, பேரவை தலைமைக்கு முந்தி இருக்க விடுத்த அழைப்பாகவே எண்ண ஓட்டம் மனதில் ஏற்பட்டது. அன்றே மந்திரிசபை முதலாவது அமர்வும் நகரசபை கட்டிட மேல்மாடி அறையில் கூடியது. அந்த அறை தான் முதல்வர் காரியாலயமாக இறுதிவரை இருந்தது. அதன் எதிர்ப்புற அறைதான் பிரதம செயலாளர் அலுவலகமாகியது. கீழ் இருந்த ஒரு அறை பேரவைதலைவர் காரியாலயம் ஆகியது. பின் நாளில் அருகில் இருந்த திருமலை நூலகம் பேரவை செயலகமாக மாறியது.
அந்த நிகழ்ச்சி கூட சற்று விசனத்தை தந்தது. வழமைபோல எனது உத்தியோக அறையுள் நுழையும் வேளை வாசலில் நால்வர் கால்கடுக்க நின்றிருந்தனர். உள்ளே அழைத்து விசாரிக்க, தம் உறவுகளை பறிகொடுத்தது போல கண்ணீர் மல்கினார். காரணம் கேட்டபோது தாம் நூலக பொறுப்பாளர் மற்றும் ஊழியர்கள் என்றும், நேற்று மாலை திடீரென வந்த திருமலை மாகாணசபை உறுப்பினர் ஜோர்ஜ் தவராஜா தம்பிராஜா, தாம் இந்த கட்டிடத்தை மாகாண சபைக்கு பொறுப்பு எடுப்பதால் பழைய நூலக கட்டிடத்துக்கு அவர்களை இடம் பெயர சொல்ல, அவர்கள் மறுத்ததால் தன் பாணி நடவடிக்கையில் அத்தனை புத்தகங்கள், ஆவணங்களை சாக்கு மூட்டைகளில் கட்டி, இரவோடு இரவாக பழைய நூலக கட்டிடத்தில் குவித்து விட்டார் என்றனர். அவரின் செயலின் பின்னணியில் யார் இருப்பர் என்பதை அறிந்திருந்த நான் வந்தவர்களிடம், பழைய நூலகத்தை செயல்ப்படுத்த என்ன உதவி தேவை என கேட்டேன்.
நிலைமை புரிந்த அவர்கள் மின்விசிறிகள் மற்றும் சிறிய நீர் இறைக்கும் இயந்திரம், நீர்தாங்கி என்பன வாங்கி தந்தால், தாம் மாணவர்கள் பயன்படுத்த கூடியவாறு பழைய நூலகத்தை சீர் செய்யலாம் என்றனர். அதற்கான செலவு பணத்தை பேரவை செயலக நிதியில் இருந்து வழங்க முடியுமா என பேரவை செயலாளரை கேட்க அவரும் விரைந்து செய்து கொடுத்தார். இந்த இடத்தில் பேரவை செயலராக தானே முன்வந்து பணிபுரிந்த திரு கிருஸ்ணமூர்த்தி பற்றி குறிப்பிட விரும்புகிறேன். பேரவை தலைவராக ஆளுநர் முன் உறுதி எடுத்தபின் தேநீர் விருந்து நேரத்தில் என்னை அணுகிய ஒருவர் சேர் நான் தான் உங்கள் செயலாளர் என்றார். கடித்த வடை வாயில் தங்க அவரை அதிசயமாக பார்த்தேன். காரணம் அவர்தான் அப்போதைய திருமலை மேலதிக அரச அதிபர் திரு கிருஷ்ணமூர்த்தி. சற்று நேரத்துக்கு முன் அனைவரின் பதவி பிரமாண பத்திரத்தை தமிழில் வாசித்தவர், இப்போது என் செயலாளர் என்கிறார். விதிமீறல்கள் அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்ட மணியின் நகைச்சுவையை என் மனதில் சோகமாக ஒலிக்க செய்தது.

காரணம் பல்கலைகழகம் வரை சென்ற நான் அதன் பின் படிப்பை தொடராது தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகிவிட்டேன். அரசியல் விபத்து இன்று பேரவை தலைவராக்கி விட்டது. எனக்கு செயலாளராக வர விரும்புபவர் ஸ்ரீலங்கா நிர்வாகசேவை அதிகாரி. தற்போது திருமலை மாவட்டத்தின் மேலதிக அரச அதிபர். என்னால் எதுவும் கூற இயலாது சற்று திகைத்து நின்றவேளை, திருமலை உறுப்பினர் ஜோர்ஜ் தவராஜா தம்பிராசா எம்மை நோக்கி வந்தார். திரு கிருஷ்ணமூர்த்தியை பார்த்து என்னிடம், இவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இன்று இந்த பதவி ஏற்பு நிகழ்வை நடத்த சிரமப்பட்டிருப்போம் என்றவர், இரவிரவாக அந்த மண்டபத்தை ஊழியர்களுடன் இணைந்து கழுவி சுத்தம் செய்ததுமுதல் அவர் தந்த பங்களிப்பை விபரித்தார். நான் முடிவை அந்த கணமே திரு கிருஷ்ணமூர்த்திக்கு நிபந்தனையுடன் தெரிவித்தேன். நீங்கள் தான் பேரவை செயலாளர் ஆனால் தயவு செய்து என்னை சேர் போட்டு அழைக்க வேண்டாம், செயமன் என அழையுங்கள். காரணம் உங்களை போன்ற நிர்வாக அதிகாரியாக என்னால் வர முடியாது. ஆனால் நீங்கள் எந்த பதவிக்கும் ஏற்புடையவர். எனவே என்னை பதவி பெயர் கொண்டே அழையுங்கள் என்றேன்.
உண்மையில் நான் பேரவை தலைவராக மாகாண சபையை விட்டு விலகும் வரை திறம்பட செயல்ப்பட்டதாக பெருமை கொள்ள காரணமானவர், திரு கிருஷ்ணமூர்த்தி தான் என்றால் அது மிகை இல்லை. எள் என்றால் எண்ணையாக, நேரகாலம் பாராது பங்களிப்பு செய்தவர். பேரவை செயலகத்துக்கு ஊளியர்கள் வர தயங்கிய போது, புலிகள் பற்றிய பயம் நீங்கி அவர் மீது கொண்ட ஈர்ப்பால் தான் ஆரம்ப ஊழியர் வரவு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்றாலும் திருமலை அவர் உள்ளங்கையில் இருந்ததால் எதனை எங்கிருந்து பெறலாம் என்ற தகவல் அறிந்தவர். பதவி பிரமாண நிகழ்வின் பின் பேரவை தலைவராக நான் மேடையிலும், உறுப்பினர்கள் படம் பார்ப்பவர் போல கீழே வரிசையாகவும் அமர்ந்திருக்க எனது பேரவை தலைவர் உரையை முடித்து சபையை ஒரு மாத கால தவணையில் ஒத்திவைத்து வந்தவேளை, திரு கிருஸ்ணனமூர்த்தி மதிய உணவு 7 ஐலன்ட் ஹோட்டலில் ஏற்பாடாகி இருப்பதாக கூறினார். அவரையும் கூடவே அழைத்து சென்று உணவு வரும்வரை பேரவை செயலகம் மற்றும் மினி பாராளுமன்ற அமைப்பு பற்றி கலந்துரையாடினேன்.
மனம்விட்டு புகழ்வேன் அன்று அந்த பெருமகன் தந்த ஒத்துழைப்பு தான், பின்னாளில் ஸ்ரீலங்கா பாராளுமன்ற சபாநாயகராக இருந்த மர்ஹூம் எம் எச் முகமட் அவர்கள், எமது மினி பாராளுமன்றம், பேரவை செயலகம், உறுப்பினர் தங்கும் விடுதி என்பனவற்றை பார்வையிட்டதும் வியப்பில் வாயடைத்து ஜனாதிபதி பிரேமதாசாவிடம், அவர்கள் ஒரு தனி அரசே நடத்துகிறார்கள் என சிலாகித்து பேசவும், அது பிரேமதாசவுக்கு சினத்தை ஏற்படுத்தவும் காரணமாயிற்று. மத்திய அரசால் ஒரு மேசை கதிரை கூட தரப்படாத காலம். உறுப்பினர்கள் அமரும் வசதி. பேரவைத்தலைவர் பீடம். பார்வையாளர் அமர்விடம் [Public Gallery ] விசேட பிரதிநிதிகள் அமர்விடம் [Speakers Gallery } அத்தனையும் பார்த்து பார்த்து செய்ய தோளோடு தோள் நின்வரை நன்றியுடன் நினைவு கூருகிறேன். அந்த வேளையில் முதல்வரின் பிரத்தியேக செயலராய் பணி புரிந்த அவரின் மாமனார் வேதநாயகம் அவர்கள் வேடிக்கையாக, ராம் பொட்டர் நடராஜா போல பாராளுமன்றம் கட்டுது என கூறினார். பொட்டர் நடராஜா ஐயா மாவட்ட அபிவிருத்தி சபை தலைவராக இருந்தவர். தமிழருக்கு கிடைப்பதை எல்லாம் தட்டிப்பறிக்கும் ஜே ஆர் அதனையும் செயல்படவில்லை என்பது சரித்திரம்.
ஆரம்பத்தில் பேரவை செயலகம் மிக சிறிய இடவசதியுடன் தான் இயங்கியது. திரு கிருஸ்ணமூர்த்தி தன்னுடன் அழைத்து வந்த மரியதாஸ் சற்று சுட்டித்தனம் உள்ளவர், பேரவை செயல்பட தொடங்கிய முதல் மாதமே ஹன்சாட் பதிவு பற்றிய தன் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவரின் முன் முயற்சியில் சுருக்கெழுத்து, தட்டெழுத்து ஊளியர்கள் உள்வாங்கப்பட்டு, அவர்கள் தட்டச்சு செய்வதை திரு நல்லரட்ணம் என்ற ஊழியர் [ திருமலை தருமன் என்ற ஈ பி ஆர் எல் எப் உறுப்பினரின் தந்தை] இரவிரவாக றோணியோ செய்யும் பணி புரிந்து முதல் மாத முடிவில், ஹன்சாட் வெளிவந்து எனக்கு பெருமை சேர்த்தது. எண்ணம் மரியதாசுக்கு உரித்து, உழைப்பு சுருக்கெழுத்து மற்றும் தாட்டெழுத்து செய்த பெண்களுக்கு உரிமம், இரவு துஞ்சாது உழைப்பு நல்கியது நல்லரட்ணம் ஆனால் பேரும் பாராட்டும் எனை நாடி வந்தது. அப்போது பேரவை செயலகத்தில் பெரும்பான்மை வேலைகள் சுருக்கெழுத்து தட்டெழுத்து சார்ந்ததாய் இருந்ததால் கூடுதலான பெண்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.
அதை கூட நக்கலாக கூறியவர்கள் செயமன் குமரிக்கோட்டம் நடத்துகிறார் என கதை பரப்பினார். அதற்கு காரணம் அவர்கள் அங்கு மலர் பறிக்க முனைய நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்ற அவர்களின் ஆதங்கம். இட நெருக்கடியில் ஒரு கதிரையில் இருவர் அமர்ந்து பணியாற்றிய காலம் அது. இட நெருக்கடியை சமாளிக்க பழி சுமந்த மேனியனாய் திருமலை மாணவர்களின் திட்டுதலுடன் ஜோர்ஜ் கைப்பற்றிய நூலகத்தை பேரவை செயலகமாக மாற்றும் என் முடிவுக்கு தலை சாய்த்து பழியில் பங்கேற்றவர், திரு கிருஸ்ணமூர்தி. அவரை செயலாளராக நியமிக்க நான் முடிவெடுத்த வேளை, என்னை அழைத்து நான் உங்களுக்கு சட்டம் தெரிந்த செயலாளரை தருகிறேன் என கூறியவரிடம் நான் உறுதியாக, எனக்கு சட்டம் தெரிந்தவரை விட சமூகத்தை அறிந்தவர் போதும் என்றேன். குறை நிறைகளுக்கு அப்பால் தன்னை நிரூபித்த திரு கிருஸ்ணமூர்த்தி பின்னாளில் வடக்கு கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளராக தொடர்ந்தார்.
பிரிப்பின் பின் உருவான கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபை கட்டிடம் முதல் தளபாடங்கள் வரை மத்திய அரசின் அனுசரணையில் நடந்தது. ஆனால் வடக்கு கிழக்கு மாகாண சபை நாமே கூலி, நாமே சமையல்காரர், நாமே மந்திரம் சொல்லும் ஐயர், நாமே மணமக்கள் என்ற நிலையில் தான் உருவானது. ஆக்கிய சோற்றில் கைவைக்கும் பாய்க்கியம் அன்று எமக்கு கிடைக்கவில்லை. நாமே ஆக்கி நாமே படைக்கும் சவாலுக்கு முகம் கொடுத்தோம். அதை சாதிக்க உதவியவர்கள் அந்த தன்னலமற்ற சமூக அக்கறை கொண்ட முதல் தர செயலாளர்கள் என்றால் மிகையாகாது. மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதியதாக இல்லை என்பதால் தேவைகளை கூடியவரை சுருக்க அல்லது செலவுகளில் சிக்கனம் பேணவேண்டிய நிலை. உறுப்பினர்கள் பாவனைக்கான மேசை/கதிரைகளின் விலை அதீதம் என தயங்கிய வேளை திரு கிருஸ்ணமூர்த்தி உள்ளூர் மரவேலை நிபுணரை அழைத்து வந்தார் [மன்னிக்கவும் அவர் பெயர் நினைவில் வரவில்லை]
அற்புதமான மனிதர். மரங்கள் அவர் கைக்கு கட்டுப்படும். என்ன வேண்டும் என கோடிட்டால் போதும் மிக சிறப்பாக செய்து தருவார். அதுவும் குறுகிய காலத்தில். அவர் தந்த ஒத்துழைப்பில் மிக குறுகிய காலத்தில் பேரவை மண்டபம் அழகுற மிளிர்ந்தது. மேலும் அழகூட்ட நிலத்தில் செங்கம்பளம் விரிக்கும் என் எண்ணத்தை செயல்படுத்த கொழும்பு சென்றேன். அந்த நாட்களில் நான் என்னை அவையத்து முந்தியிருக்க செய்த கல்லூரியை விற்று பிழைத்த காலம். ஆம் எங்கு சென்றாலும் நான் ஒரு றோயல் கல்லூரி மாணவன் என்றே என்னை அறிமுகப்படுத்தி காரியம் சாதிப்பேன். காரணம் எங்கும் உயர் பதவியில் ஒரு ரோயலிஸ்ட் இருப்பார். செங்கம்பளம் வாங்க சென்ற நிறுவனத்தின் இயக்குனரும் ஒரு ரோயலிஸ்ட் என்பதால் அதி கூடிய விலைக்கழிவில் பெறமுடிந்தது. அவரே இதனை நிலத்தில் பதிக்கும் தொழில் நுட்பம் தெரிந்தவர் திருமலையில் உண்டா எனக்கேட்டு, அந்த துறை சார்ந்த தன் ஊழியரை அழைத்தார்.
அனைவரும் சிங்கள சமூகத்தவர். திருமலை என்றதும் தலையை தொங்கப்போட்டனர். நிலைமை புரிந்த நான் அவர்களிடம் சிங்கள மொழியில் உரையாடி, என்னை நம்பி வாருங்கள் நானே உங்களை அழைத்து சென்று சகல வசதியும் செய்து மீண்டும் இங்கு கூட்டிவருவேன் என உறுதியளிக்க, ஒரு தமிழ் பயங்கரவாதி பேசிய சிங்களம், அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க சம்மதம் என்றனர். பேரவை தலைவர் என்ற எந்த பிடரி கனமும் இல்லாது எனது பஜரோவை நானே செலுத்த, அந்த நால்வர் அணி என்னுடன் திருமலை பயணித்தது. பயண நடுவில் ஒரு இடத்தில் மட்டும் வாகனம் நின்றது. அது வெளிநாட்டு மது விற்பனை நிலையம். அவர்களின் சாராயம் தழுவும் நாக்கை விஸ்கி மெருகேற்றட்டும் என்ற என் மேட்டுக்குடி சிந்தனை. [ இந்த மேட்டுக்குடி சிந்தனை உள்ளவன் நான் என என்னை பற்றி ஒருவர், அண்மையில் இணையத்தில் அபஸ்வரநயனமாக விமர்சித்தது நினைவில் வருகிறது].
மதிய உணவின் பின் தம் திறமையை காட்டியவர்கள், முன்னிரவே மண்டபத்தை செந்நிற கம்பளத்தால் மிளிரவைத்தனர். நீண்ட காலம் நட்சத்திர விடுதிகளில் பணியாற்றியபின், எனது உத்தியோக சமையலராக பணி புரிந்த திரு வீரையாவின் கை பக்குவத்தில் ஊர்வன, பறப்பன எல்லாம் இரவு உணவாக மாற, விஸ்கியும் பியரும் தாராளமாக புழங்க புளகாங்கிதம் அடைந்தவர்கள் விடுத்த விண்ணப்பம் ‘’அப்பிட்ட மெத்தன வென வட முகுத் நத்த’’ [எங்களுக்கு இங்கு வேறு வேலை இல்லையா?] என்பதே. தேவைப்பட்டால் அழைப்பேன் என்ற உறுதி மொழியுடன் மறுநாள் காலையில் அவர்களுடன் கொழும்பு பயணித்தேன். பேரவை அமர்வுகளின் போது உறுப்பினர் பேசுவதை ஒலிவாங்கிகளோ, ஒலி பெருக்கிகளோ அல்லது பதிவு செய்யும் சாதனங்களோ, இன்றியே ஆரம்ப அமர்வுகள் அமைந்தன. அப்போது திருமலையை சேர்ந்த ராஜா என்பவரை செயலர் அறிமுகப்படுத்த அவரை வேலைக்கு அமர்த்தும் அனுமதியை வழங்கினேன். அவர் கூறிய தகவல்ப்படி என் பயணம் கொழும்பு ரொபேர்ட் ஏஜன்சி வாசலில் முடிந்தது. அது ஒலி வாங்கி, ஒலி பெருக்கி, மற்றும் பதிவு சாதனம் விற்கும் விற்பனை நிலையம். உரிமையாளர் சாவகச்சேரி வாசி, புலிகளை நேசிப்பவர். இங்கு கழிவும் கிடைக்காது என் கல்லுரியும் விலை போகாது.
அவர் கூறிய விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை. வாங்கினேன். இன்று பேரவை தலைவர்களாய் பெருமிதம் காட்டும் பெருமக்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன், அன்று வீதியில் அலைந்து தான் நாம் அத்தனையும் சாதித்தோம். காரணம் நாம் சார்ந்த இயக்கம், அரசியல் கட்சி. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்ததற்கு இன்றும், என்றும் என் இறுதி நாள் வரை, பெருமை கொள்வேன். இடை செருகல்கள் செய்த செயலால், இழிவுபட்ட போதும் நான் அதன் புனிதத்தை போற்றுவேன். நம்மிக்கெட்ட தோழர்கள், நடுத்தெருவுக்கு வந்த தோழிகள் நிலைக்கு காரணம், நாபாவின் படுகொலை. நாபவை நான் என்றும் புனிதன் என கூறமாட்டேன். அவரும் மனித பலவீனம் கொண்ட சாதாரணமானவர். என்றாலும் அவர் துரோகங்களுக்கு துணை போகாதவர், அரசவசதி / பதவிகளுக்கு ஆசைப்படாதவர். அந்த நண்பன், தோழன், தலைவன் கீழ் நானும் ஒருவனாய், இராமர் பாலத்துக்கு உதவிய அணில், முதுகில் மூன்று கோடு வாங்கிய நிகழ்வாய், பேரவை தலைவராய் தேர்வு செய்யப்பட்டதை நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
இந்த பேரவை தலைவர் பதவி கூட விபத்தா? விதியா? என்ற கேள்வி எனக்கு இன்றளவும் உண்டு. காரணங்களை பட்டியல் இட்டால் எம் பல்லை நாமே குற்றி மணக்கும் செயலை, நான் செய்ய வேண்டிவரும். அதனால் நான் இணைந்த இயக்கம், பின் என் பங்களிப்பில் அரசியல் கட்சியாக உருவான கட்சி பற்றி எழுதக் கூடாது என, என் தன்மானம் தடுக்கிறது. உண்ட சட்டியை அசிங்கப்படுத்த யார் தான் விரும்புவர்?. முன்பு நான் குறிப்பிட்டது போல ஆளுநர் முன் கோரசாக நாம் உறுதி மொழி எடுத்த பின் தேநீர் இடைவேளை என்னை தேடி வந்தார் அமீர் எனும் சிவகுமார். ஒரு துண்டு சீட்டை என்னிடம் கொடுத்து இதனை தான் நீங்கள் வாசிக்க வேண்டும் என்றார். அருகில் வந்த யோகசங்கரி நீங்கள் தான் பேரவை தலைவர் என்றார். அதுவரை சாவகச்சேரி இளங்கோ [ரவீந்திரன்] தான் பேரவை தலைவர் என கூறப்பட்டது. ஏன் இந்த திடீர் மாற்றம்?. இளங்கோவிடம் கேட்க அவர் தன்னால் மூன்று மொழிகளிலும் சபையை நடத்த முடியாது என கூற, கட்டை பனையில் நெட்டை பனையான என்னை தெரிவு செய்ததை அறிந்தேன்.
றோயல் கல்லூரி சிறந்த பேச்சாளர் போட்டி, விவாதக்குழு உறுப்பினன், நாடக மற்றும் தமிழ் இலக்கிய மன்றம் என்பவற்றில் பங்கேற்றவன், கொழும்பு பல்கலை கழகத்தில் நான் எழுதி இயக்கி நடித்த நாடகத்துக்கு சிறந்த நடிகர் உட்பட ஐந்து பரிசுகளை என்வசமாக்கியன் கையில், எதை வாசிக்க வேண்டும் என்ற குறிப்பு தரப்பட்டதும் விதியின் பாற்பட்டதே. இங்கு இன்னொரு நிகழ்வும் விதி வயப்பட்டதே. வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் வியூகம் வகுத்த இந்திய தூதுவர் ஜே ஏன் டிக்சித், வடக்கில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால், உறுப்பினர்களை போட்டியின்றி தெரிவு செய்யும் சூத்திரத்துக்கு வழிசமைத்தார். அதன்படி வடக்கின் உறுப்பினர்களை ஈபி ஆர் எல் எப், ஈ என் டி எல் எப், டெலோ தமக்குள்ள பகிர்ந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்தார். [நீட்சி 3ல்]