அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 4

எங்கள் வயல் காணிகளுக்கு போக முடியல, குட்டி குட்டி தம்பிகள் வந்து,
கையில ஒரு வாட்டசாட்டமான தடியுடன் வந்து “டேய் காக்கா அம்பதாயிரம் குடு”
என்றார்கள்.எண்ட வாப்பா ரொம்ப மவுனமாக முப்பத்தஞ்சாயிரம் ருவாவும்,
மீதிக்கு உம்மாட நகைகளையும் கொடுத்தபோது எங்கட கையாலாகாத்தனத்தை
நினைத்து வெம்பி வெடித்திருக்கின்றோம்.

வயலுக்கு அறுவடைக்கு போன சாச்சா, பெரியப்பாட மகன்,மற்றும் ஊரவர்கள் எல்லாம்
ஏரியா பொறுப்பாளர்களால் விரட்டப்பட்டு, நெல்லும் வேணாம், பதறும் வேணாம்
என உயிரை கையில புடிச்சுக்கிட்டு ஓடிவந்ததை பார்த்து பதறி இருக்கின்றோம்.

எங்க மாடுகளை கூட்டம், கூட்டமாக, சாரி, சாரியாக சாய்த்துக்கொண்டு,
எங்க முன்னாள் பள்ளித் தோழர்கள் வெறியுடன் செல்வதை பார்த்து
ஏமலிச்சுப்போயிருக்கின்றோம்.

படிப்போ கிடையாது, சிங்களமோ தெரியவே தெரியாது,நகமும் சதையுமாக
இருந்த தமிழ் மக்கள் எங்களை கிள்ளுக் கீரையாகவும் மதிக்கின்றார்களில்லை.
கொட்டை பாக்கு கூட, பாக்குவெட்டிக்கு டாட்டா காட்டிவிடும், ஆனா நாங்க,
உரலுக்குள் உமியானோம், பதறானோம், பஞ்சானோம்.நோ வே, நோ வே,
நோமோர் வே to மூவ்.

அப்போதுதான் கண்டியும், கொழும்பும் எங்களுக்கு பஞ்சாமிர்தமாக தெரிந்தது,
அதோடு சேர்ந்து அஸ்ரப் ஹாஜியாரும் வந்து நாமிருக்க பயமேன் என்று சொன்னது
எங்களுக்கு ஒரு தெம்பானது.

இருக்கிற மிச்ச சொச்ச காணியையும், பூமியையும் வித்துப்போட்டு கொஞ்சப்பேர்,
கொழும்பு,கண்டி ,மாவனல்ல ,அக்குரண எண்டு பொறப்பட, கொஞ்சப்பேர் குட்டி குட்டி
கைக்கடக்கமான வியாபாரங்களில் கவனம் செலுத்த, மீதிப்பேர் ” அடைந்தால் மகாதேவி,
இல்லையேல் மரண தேவி” கணக்காக அரசியல் வியாபாரம் செய்யப் புறப்பட்டனர்.

தென்மேற்கை நோக்கி புறப்பட்டவர்களில் சிலர் முழு நேரபடிப்பில் இறங்க பலர்
வியாபாரத்தில் இறங்கினர், இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்களும் அவர்களுக்கு
பூரண ஆதரவு வழங்கினர்.

அடி, அடி, அடியென அடிவாங்கி மெல்லவும் முடியாமல், தனது கஷ்டங்களை
மற்றவர்களிடம் கக்கி சொல்லவும் முடியாமல் இருந்த வட கிழக்கு சோனவன்,
தென்மேற்கில் சூறாவளியாக சுற்றினான், அனைத்தையும் பச்,பச்சென
பிடித்துக்கொண்டான் இவனது அரைகுறை சிங்களம், சிங்கள மக்களுக்கு
நன்றாகவே பிடித்தது,

மற்றொருபுறம் அரசியல், பத்திக்கிட்டு எரிஞ்சது, குட்டி குட்டி தம்பிகளிடமெல்லாம்,
மைக்கையும் கொடுத்து, கார்களையும் கொடுத்து டமாரம் அடிக்க விட்டார்கள் நம்ம
வள்ளல்கள். ராமனாதபுரமாவட்டம்,தேனீ மாவட்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும்
தமிழக கரையோர மாவட்டங்களில் வாழும் அரசியல் வாதிகள் தேர்தல்
காலங்களில் எப்படி கும்மி அடிப்பார்களோ அதைவிட கேவலமாகவும்,

1971 முதல் இன்றுவரையும் மொத்த தமிழ்மக்களையும், கதை பேசி, கடை விரிக்கும்
தமிழ் அரசியல் வாதிகளை விடவும் மிக மிக கேவலமாக கதை பேசியும்,

எக்ஸ்ட்ராவாக “நாரேதக்பீர் அல்லாஹ் அக்பர்” அத்துடன் “உஹது யுத்தம்”,
“பதுரு யுத்தம்” என்ற கதைகளையும் சொல்லி மொத்த சோனவர்களையும்
உருவேற்றினர். கல்தோன்றி மண்தோன்றாக்காலத்துக்கு, முன் தோன்றிய
மூத்த தமிழ், எங்க தமிழ் என்று சொன்னால் எப்படி தமிழன் சுருண்டு
விழுவானோ,உஹது யுத்தம், பதுரு யுத்தங்களை சந்தித்தவர்கள்
நாங்கள் என்றால் போதும்,அதைவிட ஆயிரம் மடங்கு வெறி ஏறும்
இந்த புண்ணாக்குகளுக்கு. அது ஒரு தரும யுத்தம், இது மலடி புள்ளப்
பெத்த கத.

சிங்கள ராணுவதமும், வாட்டசாட்டமான கம்பு தடிகளும் வந்து இறங்கியது, சிங்கள
பொறுப்பான இராணுவா சிப்பாய்களால் கிராமங்கள் தோறும் குட்டி குட்டி பயிற்சிகள்
அளிக்கப்பட்டது

இப்படி சிங்கள ராணுவ சிப்பாய்களிடம் பயிற்சி பெற்றவர்களைத்தான்,
பின்னாளில் இன்றுவரையும் நம்ம விதண்டாவாதம் பிடித்த சாதுக்களும்,
சிங்கள அரசியல் பொறாமைகளும் ஜிஹாத், ஜிஹாத் என்று சொல்லி வாய்
கிழிய கத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

ஹாய், ஹாமுதுருணி துருணி, திஸ் இஸ் நாட் அ ஜிஹாத் ஹாமுதுருணி, திஸ் இஸ் அ
க்ரூப் ஒப் தக்ஸ். உலக மகா அயோக்கியர்கள், இவர்களால் நாங்கள் வளர்ந்ததைவிட,
இழந்தது அதிகம் ஹாமுதுருணி.

அப்போது ஓ ஐ சீக்களாகவும், எச் கிவ் ஐ க்களாகவும், செக்சன்
கொமாண்டோக்களாகவும், கேர்ணல்களாகவும் இருந்தவர்கள்தான் இன்று
டீ ஐ ஜீ க்களாகவும், மேஜர் ஜெனரல்கலாகவும் இருக்கின்றனர் என்பது ஒரு
கொசுறு செய்தி ஹாமுதுருணி.

கிழக்கு ஜெகஜோதியானது, அஸ்ரப் ஹாஜியாரும், எந்த கொள்கை, கோட்பாடுகளும்
அற்ற ஒரு கூட்டமும் யெம்பி,யெம்பி , எம்பி ஆனார்கள், அஸ்ரப் ஹாஜியார் கொழும்பில்
லோ பேர்ம் வைத்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு A4 பேப்பர் வாங்கி கொடுத்தவன்,
கொழும்பில் குட்டி குட்டி விழாக்கள் நடக்கும் போது,அந்த கூட்ட மேடைகளுக்கருகில் நின்று
அஸ்ரப் ஹாஜியாரை பார்த்து சிரிச்சவன், அஸ்ரப் ஹாஜியார் கொழும்பில் இருந்து
கிழக்கு மாகாணம் வந்து சேர பண உதவி செய்தவர்கள்,கிழக்கில் மேடைகளில்,
நம்ம வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், மங்கயட்கரசி அக்கா போன்று மூளைக்கும்
முன்னானுக்கும் சம்பந்தமில்லாமல் பேசிஉசுப்பேத்தியவர்கள்,நல்லா கஞ்சா அடிச்சி,
மேளதாளம் அடிச்சி ராகத்தாக பாட்டு பாடியவர்கள் எல்லாம் எம்பி ஆனார்கள்.

எம்பி ஆனதும்தான் தாமதம் அவர்களுக்கு அடியாட்கள் உருவானார்கள்,ஒண்டு
வெட்டுக் குத்து பார்ட்டி,கஞ்சா, அபின், மஸ்து, மஸ்து என அது மஸ்திலேயே கிடந்தது,

மற்றது பணமொளைக்கிற பார்ட்டி. இந்த வெட்டுக் குத்து பார்ட் டியவிட
பணமொளைக்கிற பார்ட்டி ரொம்ப தெளிவாக இருந்தது. அதுதான் இப்ப
ஞ்சானசாரதேரோட கிடிக்கிப் பிடிக்குள் மாட்டிக் கிட்டு ததிங்கினதோம்
பாடுது. கோட் இஸ் ஆல்வேஸ் கிரேட். இப்பெல்லாம்அவரும் நிண்டு,
நின்றெல்லாம் கொள்வது கிடையாது,அதிரடி வைத்தியம்தான்.

சலாஹுதீண்ட பிலேண்டி கடையில, பிளேன்டி குடிக்க வக்கில்லாம இருந்தவன்,
கணேசண்ட சலூனுல முப்பது ரூபாய்க்கு பேரம் பேசி முடிவெட்டின எங்கட
சோனவன், பம்பலப்பிட்டி பனான லீப் ( Banaana Leaf )புலயும்,
கொள்ளுப்பிட்டி புஹாரி ஓட்டல்லையும் Buhaari Hotel,
மருதானை சாலிமார் ஓட்டல் லை யும் Saalimaar Hotel பேரம்
பேசாமல் உண்ணத் தொடங்கினான்.

அந்த நேரம் நம்மாக்களுக்கு ஹில்டன் ஓட்டல், தலதாரி ஓட்டல்
பற்றி அவ்வளவா தெரியா, இப்போ எல்லாமே ஹில்டனிலும், தலதாரியிலும்,
சினமன் கிராண்டிலும், ஹில்டன் ஜெய்க்கிலும்தான் நடக்கின்றது, அரசியல் வியாபார
பேச்சுக்களை சொன்னேன்.

இப்போ அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை பெற சென்றால், அவர்களது
தம்பிகளையும், தும்பிகளையும், வால்களையும்,வல்லூருகளையும்,
மேல்படி ஓட்டல் களில் சந்தித்து முடிவெடுக்க சொல்கின்றார்கள், முந்தாநாள்
விம்மி விம்மி, நாட்டுக்காக ராஜினாமா செய்த அந்த ராஜாதி ராஜாக்கள். அல்லாஹ்ட
பிள்ளைகள். அஸ்தஹ்ர்புர்லால்லாஹ் லலீம் ( நான் வணங்கும் எனது இறைவனே
இந்த எட்டப்பனை மன்னித்தருள்வாயாக )

தமிழ் இளைஞ்சர்களின் துப்பாக்கிகளும், எங்க துப்பாகிகளும் சிங்கள அரசியல் வாதிகளுக்கு
தேவை ஏற்படும் போதெல்லாம் பேசிக்கொண்டன, சிலாசித்துக்கொண்டன, உயிர்ப்பலிகளை
எடுத்துக்கொண்டன.

விபரம் தெரியாமல் அங்கு தமிழ் இயக்கங்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடு பட்டனர்,
இங்கு நம்மாக்கள் “தமிளன போட்டுட்டம்டா” என ஊருக்குள் பறை சாற்றிக்கொண்டனர்.

ஆம், இக்காலங்களில்தான் முழு அம்பாறை மாவாட்டும் திகாமடுல்ல மாவட்டமானது,
பொத்துவில்ல சோனகர்களின் ஊடுகளுக்கு பக்கத்தில், காபன் திஸ்ஸ மகாராஜாட
பொண்டாட்டிட சக்களத்தி, முகுது குமாரிக்கு ( முகுது மஹா ) விகாரை கட்டப்பட்டது, ஒலுவில்,
பாலமுனை கிராம சேவையாளர் பிரிவுகள் திகாமடுல்ல பிரதேசமானது,ஒலுவில் ஹாபர்
என்ற சனியன் மிக கோலாகலமாக நம்ம அதிபுத்திசாலி அஸ்ரபால் ஆரம்பிக்கப்பட்டது,
தங்க வேலாயுத புரம் சேருவாவில ஆனது. கந்தளாய் என்ற மாநகரம் உருவானது,
நம்மாக்கள் வாய்க்குள் விரல்வைத்தால் கூட சூப்ப தெரியாத நம்ம மாதாக்கள், கரையோர
மாவட்டத்துக்கு ப்ளான் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

இதை, இவைகளைப்பற்றி விவாதிக்க, கொஞ்சம் கிலாசிக்க அடிக்கடி ஒரு கூட்டத்தை
கொழும்புக்கு அழைத்து, ஓள் ஆர் ப்ரீ ஒப் சார்ஜ். பனானா லீபுல வாழயிலைல ஹலால் சாப்பாடு,
தலைமையகம் தாருஸ்ஸலாமில், படுக்கை,இருக்கை. மும் மொழி பாண்டித்தியம்
பெற்ற தலைவரின் வேத வாக்குகள், மை கோட்,மை கோட் இப்படி ஒரு தலைவர் இனி பொறக்கவே
முடியாது என, கொழும்பு போய் வந்தவர்கள் ஊர் ஊரா கதை சொன்னார்கள்.

ஒரு பக்கம் தமிழ் நண்பர்கள் துப்பாகிகளைகாட்டி எங்களை அடக்க, மறுபக்கம்
ரொம்ப ப்ளான் பண்ணி சிங்கள கொள்கை வகுப்பாளர்கள், எங்கள் காணிகளை,
பூமிகளை, நகரங்களை ஆக்கிரமித்தார்கள்.

இங்கு விபரம் தெரிந்த அல்லது புரிந்த சோனவனுகள் விம்மி வெடிக்க, ரொம்ப விபரம்
தெரிந்த “நாரே தக்பீர் அல்லாஹ் வக்பர்” என்று அரசியல் செய்ய வந்த கூட்டம்
கொழும்பில், டாம் ஸ்ட்ரீட்டிலும், இரெண்டாம் குறுக்கு தெருவிலும், வெள்ளவத்தையிலும்
சொத்து சேர்த்து, பில்டிங் கட்டி. வீதி வீதியாக கடை விரித்தார்கள்.

கொசுறு செய்தி – எனது கட்டுரையின் பாகம் – 2 இல் இவ்வாறு எழுதி இருந்தேன்……
மாக்கீன் மார்க்கார், ஜாயா, நைனார் மரைக்கார், பதியுடீன் மஹ்மூத், அலவி மௌலானா குரூப்.
புல்லுக்கும் நோகாமல், காலுக்கும் நோகாமல் நடந்து, எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி
போட்டுக்கொண்டு, தங்களது புள்ள, குட்டி, குட்டிட குட்டிகளுக்கு, வெளி நாடுகளிலும்,
உள்நாட்டிலும் சொத்துக்கள் சேர்த்து வைத்து விட்டு, வேடிக்கை காட்டிய வள்ளல்கள்.

செல்வாக்கு மிக்கவர்கள், சொல்வாக்கு தவற மாட்டார்கள். இவர்களை பொறுத்தவரை நாங்கள்
கிட்டதட்ட தேர்ட் கிளாஸ் பீப்பிள். ஒரு அரச உத்தியோகம் எடுப்பதற்காக தேனும், திணை மாவும்
கட்டிக்கொண்டு இவர்கள தேடிச் சென்றால், வீட்டுக்கு வெளியே உட்கார வைத்து, சிங்கள
மந்திரிக்கு ஒரு ரெக்கமெண்டேசன் லெட்டர் எழுதி தருவார்கள். இவர்களுக்கும் எங்களுக்கும்
உள்ள தொடர்பு அவ்வளவுதான்………………………….

ஆம்….நம்ம அரசியல் வியாபாரிகள் அனைவரும் இறுதியில், அத்துரலிய தேரருக்கு பயந்து
பௌசியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக போய் விழுந்துதான்,அவர்களது பதவிகளை
ராஜினாமா செய்துள்ளார்கள்.

கோட்டு,சூட்டு,டை கட்டிய இந்த மனிதர்கள் எப்போதும் அடக்கியே வாசிப்பார்கள்,
சிங்கள மக்களை அதட்டியும் பணிய வைப்பார்கள்,நம்மாக்கள் மாதிரி பம்மாத்துக்கள்
கிடையாது.தே ஆர் ஆல்வேஸ் ஜென்டில்மேன்ஸ்.

ஜாவா, சுமாத்ரா, இந்தோனேசியாதான் இவர்களது பூர்வீகம் என்று சிறிலங்காவில் உள்ள
பழைய ஏடுகள் பொய் சொல்கின்றன. நெவெர்,தே ஆர் ஒரிஜினலி ப்றம் மொராக்கோ ஓர் யேமன்.
இல்லை, இல்லவேயில்லை இவங்க நம்ம ஊர் காரங்க, பரங்கிப்பேட்டகாரங்க, இந்தியாவில்,
இன்னும் பிரான்சின் காலனியாக இருக்கும் பாண்டிச்சேரி இவர்களது முதலாவது தரிப்பிடம்,
இரண்டாவது தரிப்பிடம்தான் கொழும்பு துறை முகத்தை அண்டியபகுதி, நீண்டமூக்கு,
நேரிய பார்வை, சொந்தயிடம், பிறந்த இடம் எல்லாமே மொரோக்கோவும், யேமனும்.

அடிக்கடி பாரியகட்டுமரங்களில் உலக உலாவருவார்கள், வியாபார நோக்குடன் வருவார்கள்.
இவர்களுக்கு இந்தியா புடிக்கும், அதிலும் பாண்டிச்சேரி ரொம்ப புடிக்கும், பாண்டிச்சேரியில்
பரங்கி பேட்டைஎன்றால் மொரோக்கோ காரர்களுக்கு ஜாலிதான், மூன்று மாதம் ஆறுமாதம்
அங்கேயே தங்கி விடுவார்கள். அப்புறம் கொழும்பு துறைமுகத்துக்கு ஒரு குட்டி விசிட்.
அவ்வாறு கொழும்பு வந்து தங்கியவர்களின் வாரிசுகள்தான் இவர்கள். இவர்கள் அனைவரும்
சிறிலங்காவில் அப்போது இருந்த ஸ்ரீலங்கா பெண்களையே மணந்தார்கள். வாழ்ந்தார்கள்.
இந்த பரங்கிப்பேட்டை கார்கள் இந்தியாவில் எங்கும் வேலை தேடவும் மாட்டார்கள்,
வேலை செய்யவும் மாட்டார்கள்.நேராக அரபி நாடுகள்தான்.அரபி சேக்குகளின்
குசுனி வரை சென்று ஆட்சி செய்வார்கள்.நாணயஸ்தர்கள்.நா நயம் மிக்கவர்கள்.

(அடுத்த பதிவில் -கள்ளத்தோணியில் அல்லது நல்ல தோணியில் வந்து கொழும்பிலும்,
ஹம்மான்தொட்டே யிலும், தங்காலயிலும், கல்முனையிலும் இறங்கியவர்கள் யார் ?
இந்திய உயர்சாதிகளினால், சாதிவாரியாக விரட்டப்பட்டு,ஒடுக்கப்பட்டு,இஸ்லாத்துக்கு
மதம்மாறி, சாரிசாரியாக துரத்தப்பட்ட அந்த முஸ்லிம்களுக்கும்,ஸ்ரீலங்கா முழுக்க
வேண்டத் தகாதவர்களாக பார்க்கப்படும் இந்த சோனவனுக்கும் என்ன தொடர்பு,
தெலுங்கானாவில் இருந்து கள்ளத்தோணியில் வந்து மன்னாரிலும்,
பேருவலவிலும்,மாத்தற ஹக்மனயிலும் இறங்கிய அந்த நாயக்கர்களும்,
பண்டார(ம்)க்களும் இப்போ எங்கே என தேடுவோம்……..சமாவெண்ட மித்துருவருணி )