பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு அளித்ததாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இறுதி யுத்தம் நிகழ்ந்த போது இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலராக இருந்தவர் சிவசங்கர் மேனன். இவர் அண்மையில் Choices: Inside the Making of India’s Foreign Policy” என்ற ஆங்கில நூலை வெளியிட்டார்.

பிரபாகரனை அழிக்க…
இந்த நூலில் தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்பாக சிவசங்கர் மேனன் கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்காவும் நார்வேயும் முயற்சித்தன. இதனை எதிர்ப்பது என்ற கொள்கையை இந்திய அரசு கடைபிடித்தது. இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழக தலைவர்கள் முழுமையாக ஆதரவு தந்தனர்.

கொல்லப்படுவோம் என அச்சம்
ஏனெனில் தமிழீழத்தை அடைவதற்காக இந்தியாவில் உண்மையான தமிழ்த் தலைவர்களாக உள்ள தங்களையும் பிரபாகரன் அழித்துவிடுவார் என அவர்கள் கருதினர்.. அரசியல் ரீதியாக பிளவுபட்டிருந்தாலும் தமிழக தலைவர்கள் இந்த விவகாரத்தில் ஒரே மாதிரியாக உணர்ந்திருந்தனர்; ஏற்கனவே இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவர்களை பிரபாகரன் அழித்ததால் இப்படியான ஒரு நிலைப்பாட்டில் தமிழக தலைவர்கள் இருந்தனர்.

பிரணாப், நாராயணன் முயற்சிகளால்…
இலங்கை விவகாரத்தில் தமிழகத்துக்கும் புதுடெல்லிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளிப்படையாக தெரிந்தாலும் திமுகவும் அதிமுகவும் இந்திய அரசின் நிலையை ஆதரித்தன. இதற்கு அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் ஆகியோரது தீவிரமான முயற்சிகளே காரணம். சென்னையில் நான் தனியாக மிகவும் மூத்த தமிழக அரசியல்வாதிகளை சந்தித்தபோதும் இந்த நிலைப்பாட்டை நேரடியாகவே உணர்ந்தேன்.

அமெரிக்காவின் நிலை
ராஜபக்சேவுக்கு சீனா, பாகிஸ்தான், அமெரிக்காவின் ஆதரவு இருந்ததை இந்திய அரசு உணர்ந்திருந்தது. ராணுவம் மற்றும் புலனாய்வு ரீதியாக ராஜபக்சேவுக்கு அமெரிக்கா உதவுவதில் ஆர்வம் கொண்டிருந்தது. அதே நேரத்தில் மனித உரிமைகள் விவகாரத்தில் கவலையையும் அமெரிக்கா வெளிப்படுத்தியது.

ராஜபக்சே கேட்கவே இல்லை..
இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று ராஜபக்சேவிடம் நாம் கேட்டிருந்தால் இலங்கையை மையமாக கொண்ட நமது புவிசார் அரசியல் லாபங்களை விரைவாக தியாகம் செய்ய வேண்டியதிருந்திருக்கும். போரில் வெல்லப் போகிறோம் என்பதை உணர்ந்து கொண்ட ராஜபக்சே மேற்குலக நாடுகளின் யுத்த நிறுத்த முயற்சிகளையோ, விடுதலைப் புலிகளின் தலைமையை பாதுகாப்பாக வெளியேற்றும் யோசனையையோ ஏற்கவே இல்லை. மனித கேடயங்களாக இருந்த பொதுமக்களின் இழப்பை குறைக்க அப்போது அதுதான் ஒரே வழியாகவும் இருந்தது. இவ்வாறு சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.

One thought on “பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்”

  1. சிவசங்கர் மேனன் அவர்கள் கூறுவது உண்மையாகவே இருக்கும். இது ததேகூவினர் ததேமுவினர் என்போர்களிற்கு தெரிந்திருக்கும் ஒருவர் அம்மாமேல சத்தியம் பண்ணினவர் இவர் இறுதிக்கட்டங்களில் பசிலோடு கதைத்தது என்கிறார் சம்மந்தர் உடன் தொடர்பு கொண்டபோது பதிலில்லை என்றார். எல்லோரும் மக்களைப் பற்றி நினைக்கவில்லை

Comments are closed.