சமகாலத்தில், எதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியும், இலங்கை முஸ்லிம்களும்……..01

அவர்கள் எடுத்துள்ள நிலைபாட்டினை அடிப்படையாக வைத்து அதன் சாதக , பாதகங்களைப் பேசலாம். எனக்கும் அவர்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் மாற்றுக் கருத்துள்ளதுதான். அது தொடர்பில் நானும் எனது கருத்துக்களை எழுதியுள்ளேன். ஆனால் இலங்கை முஸ்லிம்களின் பார்வையில் இருந்து , அவர்கள் தொடர்பிலும்,இன்றைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அவர்கள் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும், எதிர்மறையான , காரசாரமான விமர்சனங்களையும் ,அவர்கள் மீதான அவதூறுகளையும் வைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதுதான் எனது கருத்து.

முஸ்லிம்களுக்குள் இருந்து இப்படியான விமர்சனங்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் வைப்பவர்கள், முதலில் தாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கும் ஐக்கிய தேசியக்கட்சி, முஸ்லிம்காங்கிரஸ் ,பிற முஸ்லிம் கட்சிகளை துணிச்சலுடன் விமர்சித்துவிட்டு, இத்தலைமைகளின் அரசியல் வங்குரோத்தை தோலுரித்துவிட்டு, ஜே.வி.வியை விமர்சித்தால், அந்த விமர்சனங்களை சினேகபூர்வமாக அணுகி, அந்த விமர்சனங்களை கருத்திற் கொள்ளலாம்.

தாங்கள் ஆதரிக்கும் அரசியல் தலைமைகளிடம் இருக்கும் அரசியல் மோசடிகளை மறைத்துக் கொண்டும் ,அவர்களது தொடர்ச்சியான மக்கள் விரோத நிலைப்பாடுகளுக்கும் வெள்ளையடித்துக் கொண்டு ,
உண்மையில் இலங்கை முஸ்லிம்களின் அரசியலில், அவர்களது இருப்பில் அக்கறை கொண்ட முஸ்லிம்களின் தோழமை சக்தியான ஜே.வி.பியை விமர்சிப்பது உள் நோக்கம் கொண்டது மட்டுமல்ல, முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஏமாற்றி அதிகாரத்தினை சுகித்துவரும் முஸ்லிம் பாராளுமன்ற தரகு முதலாளிகளின் (முதலைகளின்)நலனை பாதுகாக்கும் நல நோக்கமும் கொண்டது.

  • சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடியிலும், எதிர்காலத்தில் தொடரப்போகும் நெருக்கடி,அடக்குமுறையின் போதும்,ஜே.வி.பிதான் முஸ்லிம்களின் முதல் தோழமை சக்தியாக இருக்கும்.
  • தென்னிலங்கையில் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் , முஸ்லிம் விரோத உணர்வினை எதிர் கொள்ளக் கூடிய , தணிக்கக் கூடிய அரசியல் பலம் ஜே.வி.பிக்குத்தான் உண்டு.
  • தென்னிலங்கையின் ஆட்சித் தலைவராக யார் வந்தாலும் (சஜிதோ அல்லது கோத்தாவோ) இத்தலைமைகள் மக்களை ஓடுக்கும் போது தட்டிக் கேட்கவும் , இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடவும் முன் நிற்கப் போகும் முதன்மை சக்தி ஜே.வி.பி தான். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒடிச் சென்று, காலில் விழக்கூடிய அரசியல் சாணாக்கியம் முஸ்லிம் தலைமைகளுக்குள்ளது. அவர்கள் இந்த ஒடுக்குமுறைகளை கண்டும் காணாதே இருப்பர்.
  • 2010க்குப் பின், தென்னிலங்கையில் தீவிரம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளின் போது (மகிந்த + கோதா . மைத்திரி +ரணில்) முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜே.வி அபி எடுத்த நிலைப்பாடுகளும் , அப்போது இந்த முஸ்லிம் தலைவர்கள் “ பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் “ என இருந்ததை இலங்கை முஸ்லிம் சமூகம் கண்டது.
  • முஸ்லிம்களுக்குள் அரசியல் செய்யும் இந்த ஐ.தே.கட்சி, இன்றைய முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சி, அதன் தலைமைகள், பாராளுமன்ற பிரதிநிதிகளை விட, அரசியல் நேர்மையிலும், கொண்ட கொள்கைகளில் கொண்டிருக்கும் பற்றுதியிலும் , சொந்த மக்களை நேசிப்பதிலும் மேன்மை மிக்கவர்கள்.
  • ஊழல், அதிகாரத் துஸ்பிரயோகம், ஆடம்பரம், பதவி மோகம் அற்றவர்கள்.
  • மக்கள் முன் வைக்கும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு விசுவாசமானவர்கள்.

இப்படியான முன்மாதிரியான ஜே.வி.பியை, அரசியல் சாக்கடைக்குள் சமூகத்தினை தள்ளி விட்டு, அதன் மூலம் அதிகாரத்தினைப் பெற்று , சொந்த சமூகத்தின் உண்மையான அரசியல் அபிலாசைகளுக்கு தொடர்ச்சியாக காயடித்துவரும் கட்சிகளின் பிரதிநிதிகள் , விமர்சிப்பதை காணும் போது, சொல்ல வேண்டிய இந்த விடயங்களை சொல்லாமல் இருப்பதிலிருந்து தவறுவதாக தோன்றுகிறது. அதனால் இது பற்றி பேச வேண்டி இருக்கிறது.

ஜே.வீ.பி இந்த ஜனாதிபதித் தேர்தலில் எடுத்துள்ள நிலைபாட்டினை விமர்சிக்க வருவோர், தாம் ஆதரிக்கும் தலைமைகள் இதுவரை நடந்த ஜனாதிபதித் தேர்தல்களிலும், பாரளுமன்றத் தேர்தல்களிலும் எடுத்த நிலைப்பாடுகளையும், சொந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும், அரசியல் அந்தர்பல்டிகளையும் , அமைச்சுப் பதவிகளுக்காக , தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்காக மக்களின் நலனை, மக்களின் பாதுகாப்பினை, ஒட்டு மொத்த முஸ்லி ம் சமூகத்தின் இருப்பினை மொத்தமாகவும், பகுதி பகுதியாகவும் கூவியும், திரை மறைவில் விற்றதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஜே.வி.பி முஸ்லிம்களைச் சாட்டி, அல்லது சிங்கள, தமிழ் மக்களை சாட்டி, வாக்குப் பெற்று எப்போதாவது இப்படியான அரசியல் பித்தலாட்டங்களை, ஏமாற்று வித்தைகளை செய்திருக்கிறதா என முஸ்லிம் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜே.வி.பி.யின் நிலைபாடு விமர்சனத்திற்குரிய ஒன்றுதான். அது அரசியல் ரீதியாக உரையாடி தீர்க்கப்பட வேண்டிய விடயம்.

ஜே.வி.பி. முஸ்லிம் மக்களிடம் வாக்குப் பெற்று , இன்றைய இந்த முஸ்லிம்தலைமைகள் போல், பாராளுமன்ற தரகு அரசியலில் ஒரு தடவை தானும் முஸ்லிம்களை ஏமாற்றியது என சொல்ல முடியுமா?

இல்லவே இல்லை, அப்படியானால் முஸ்லிம்கள் ஏன் ஜே.வீ.பி யை விமர்சிக்க வேண்டும்? நீங்கள் ஜே.வி.பிக்கு வாக்களிக்காது கூட இருக்கலாம், அது உங்களது்அரசியல் தெரிவு. ஆனால் ஆபத்து சூழும் போது ஒடி வருபவனை, ஒடுக்குமுறை சக்திகளை சொந்த மக்களுக்குள் முஸலிம்களுக்கு எதிரான இனவாதம் ஆழ வேருண்டி இருத்தாலும் தீர்க்கமாக எதிர்த்து குரல் தரும் ஒரு தோழமைச் சக்தியை, எதிர்முகாமுக்கு தள்ளும் அரசியல் உள் நோக்கமென்ன?

இவை பற்றி நாம் யோசிக்க வேண்டும்

(தொடரும்)