‘இரத்தினபுரி மாவட்ட சிங்கள பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் அதிகம்’

இவ்வாறு சிங்கள மொழி மூலம் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு, சிங்கள மொழியை எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்றும் தாய் மொழியான தமிழ் மொழியும் முழுதாகத் தெரியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.தா. சா/தா பரீட்சைகளில் பெறுபேறுகளைப் பெறுவதில்லை என்றும் எனவே, அவர்களது கல்வி இடைநடுவே கைவிடப்பட்டு விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சில கிராமப் பகுதியிலுள்ள சிங்கள மொழி மூலப் பாடசாலைகள், மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக, மூடுவிழா காண்பதாகவும் இதைத் தவிர்ப்பதற்காகவே, பாடசாலை சமூகம், தமிழ் மாணவர்களை உள்வாங்கிக்கொள்வதாகவும் இதனால், அந்தப் பாடசாலைகளில், சிங்கள மாணவர்களைத் தவிர, தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகின்றது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிங்களமொழி மூலம் கல்வி கற்றும் மாணர்வகள், அதில் தேர்ச்சி பெற முடியாத போது, ஐந்தாம் ஆண்டிலோ அல்லது ஆறாம் ஆண்டிலோ, தமிழ்மொழி மூலப்பாடசாலையில் சேர்க்கப்படுகின்றனர் என்றும் இதனால், இவர்களது எதிர்காலம் முற்றாகப் பாதிப்படைவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து கல்வி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தி, மாணவர்களின் எதிர்காலத்துக்கான சரியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர்.