அரசியல் அதிகாரம் அற்ற இனங்களாக தமிழ் பேசும் மக்களை மாற்றும் சதி திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு!

(சாட்டோ மன்சூர்)
சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பில் சிறுபான்மை இனத்தவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த உரிமைகளும், பாதுகாப்பும் காலவோட்டத்தில் படிப்படியாகப் பறிமுதல் செய்யப்பட்டும் செயலிழக்கப்பட்டும் வருவதை யாவருமறிவர். இதை மறைமுகமாகவும், நாசூக்காகவும் இங்குள்ள தேசிய அரசியற் கட்சிகளே நன்கு திட்டமிடப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து செய்து வருகின்றன. சோல்பரி அரசியல் சாசனப்படி பாராளுமன்றத்திற்கு 95 பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடியதாகவும் அவற்றுள் 42 பிரதிநிதிகள் சிறுபான்மையினரால் தெரிவு செய்யக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது.

ஆனால் சுதந்திரம் கிடைத்து நான்கு ஆண்டுகளுக்குள் இலட்சக்கணக்கான தமிழர்களும் முஸ்லிம்களும் குடியுரிமை நீக்கப்பட்டு வாக்குரிமையற்றவர்களாக்கப்பட்டனர். இதனால் 68% சதவீத ஆசனங்களுக்கு உரித்துடைய சிங்களவர் 80% சதவிகித ஆசனங்களை ஆட்சிமன்றத்தில் கைப்பற்றும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டனர். சுதந்திரம் கிடைத்த பின்பு ஆட்சி மொழிச் சட்டத்தை மாற்றிச் சிங்கள மொழியை மட்டும் தனியாட்சி மொழியாகப் பிரகடனப்படுத்தி அரியாசனம் ஏற்றினர். தமிழ் மொழி தரம் குறைக்கப்பட்டதோடு தமிழ் பேசும் தமிழரும் முஸ்லிம்களும் இந்நாட்டின் இரண்டாந்தரப் பிரஜைகளாக ஒதுக்கித் தள்ளப்பட்டனர். சிறுபான்மை இனத்தவரின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் சோல்பரி அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் கொடுத்த 29 (2) (3) பிரிவு 1972ம் ஆண்டில் திருமதி ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் கொண்டு வரப்பட்ட அரசியற் சாசனத்தினால் நீக்கப்பட்டு, வேறு விதமாக மாற்றியமைக்கப்பட்டது. மேலும், இலங்கைப் பாராளுமன்றத்தில் தன் இனத்தின் பாதுகாப்பு உரிமைகளுக்காக குரலெழுப்புவதற்கு பிரதிநிதித்துவம் பெற முடியாத சிறுபான்மை இனத்தவருக்காக பாராளுமன்ற நியமன அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு வந்த விசேட சரத்தும் இதில் நீக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு மாண்புமிகு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பில் தேர்தல் மாவட்டங்கள் ஏற்படுத்தும் சட்டமும், விகிதாசாரத் தேர்தல் முறைப்படி கட்சிகள் ஒரு மாவட்டத்தில் அல்லது வலயத்தில் 12 ½ சதவிகிதத்திற்கு குறையாத வாக்குகள் பெறவேண்டிய நிர்ப்பந்தமும் குறிப்பாக முஸ்லிம்கள் தங்கள் பிரதிநிதிகளாக தமது இனத்தவரைத் தெரிவு செய்யும் உரிமையை நிராகரித்து, ஆட்சி மன்றத்திலிருந்து முஸ்லிம் இனத்தவரைத் முற்றாகப் புறக்கணித்து விட்டது. இப்புது முறை் தேர்தல் சட்டம் முஸ்லிம் இனத்தவருக்குத் தோண்டப்பட்ட படுகுழி என்றால் அது மிகையாகாது. காணிக்குடியேற்றத் திட்டக் கொள்கைகளை அமுல் நடத்துவதில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரோபாயங்களால் சிறுபான்மை இனத்தவருக்கு நியயப்படி கிடைக்க வேண்டிய காணிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 1932ம் ஆண்டு தொடக்கம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அரசாங்க காணிகளின் மொத்த விஸ்தீரணம் ஏறக்குறைய 8, 28, 585 ஏக்கர் இதன்படி முஸ்லிம்களுக்கு 62, 972 ஏக்கர் காணி பல்வேறு குடியேற்றத் திட்டங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மாவட்ட காணிக் கச்சேரிகளில் உள்ள புள்ளி விபரப்படி 74% சதவிகித சிங்களவருக்கே ஏறக்குறைய 90% சதவிகிதத்திற்கும் கூடுதலான காணிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வேலைவாய்ப்பு பற்றி நடாத்தப்பட்ட கயக்கெடுப்புகளை இன ரீதியாக ஒப்பிடுகையில் பெரும் அதிர்ச்சியான உண்மைகளை நாம் காணக்கூடியதாக இருக்கின்றன. அரசாங்க நிறுவனங்களே இலங்கையில் முக்கிய தொழில் வழங்கும் நிறுவனங்களாகும். இன ரீதியாக முஸ்லிம்கள் 7.6% சதவிகிதமாகவிருந்தும் கிட்டத்தட்ட 3.3% சதவிகித நியமனங்களே முஸ்லிம்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது. அதே வேளையில் 74% சதவிகித சிங்களவருக்கு 84% சதவிகித நியமனங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கியின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. சுதந்திரத்தின் போது 60% சதவிகிதமாக இருந்த சிங்களவரின் பல்கலைக்கழகப் பிரவேசம் இன்று 72% சதவிகிதத்திற்கும் கூடுதலாக உள்ளது. சிங்களவரின் சனத் தொகை விகிதாசாரம் 74% ஆகும். சுதந்திரத்தின் போது 2% சதவிகிதமாக இருந்த முஸ்லிம் பல்கலைக்கழக பிரவேசம் இன்று சராசரி 4% சதவிகிதமாக இருக்கிறது. முஸ்லிம் சனத்தொகை விகிதாசாரம் ஏறக்குறைய 8% ஆகும். பெரும்பான்மை இனத்தவரின் கல்வி மேம்பாட்டுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்று முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தகுந்த நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லையென்பது மேற்கூறப்பட்ட புள்ளி விபரங்களைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். இலங்கை சுதந்திரம் பெற்ற பின், மாறி மாறி ஆட்சிபுரிந்த தேசிய அரசியற் கட்சிகள் முஸ்லிம்களின் உரிமைகளைப் படிப்படியாக சூறையாடி வந்ததனால் சிங்களப் பகுதிகளில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் இன்று இனரீதியாகத் தம்மை அடையாளம் காட்டக் கூடிய அடிப்படை உரிமைகளைக் கணிசமான அளவு பறிகொடுத்து நிர்க்கதியாகி விட்டனர். ஆனால், கிழக்கிலங்கையில் முஸ்லிம்களின் அடிப்படை இன உரிமைகள் ஓரளவுக்கேனும் பாதுகாக்கக் கூடியதாக இருக்கின்றன. முஸ்லிம்களின் ஜீவாதார உரிமைகளை நாம் தீட்சண்யமான பார்வையின் அடிப்படையின் ஊடே பேணிப் பாதுகாப்பதில் தான் இலங்கை வாழ் முஸ்லிம் இனத்தின் எதிர்காலம் பெருமளவு தங்கியிருக்கிறது என்பதை எவரும் மறந்து விடலாகாது. இவ்வித்திலேயே நம் எல்லோருடைய சிறந்தனையும் அறிவும் சிறப்பாகப் பட்டை தீட்டப்படல் வேண்டும். சுதந்திரத்தின் போது எதுவித நிபந்தனையுமின்றி தேசத்தின் சுபீட்சமும், அதன் எதிர்காலச் சிறப்புமே போதுமென்ற நாட்டுப்பற்றோடு பெரும்பான்மை இனச் சிங்களவரோடு தோள் சேர்ந்து நின்றதாகும். தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்து அமுலாக்கப்பட்ட போது தமது தாய் மொழியை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மை இனத்தவரின் தாய்மொழியான சிங்கள மொழித் திணிப்பை ஏற்று ஆதரித்ததற்கும், முஸ்லிம்களுக்குத் தனியான அரசியற்கட்சி அவசியமில்லை, சிங்களவர் பெரும்பான்மை யுடைய ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய தேசிய கட்சிகளில் நம்பிக்கை வைத்துப் பெரும்பான்மை இனத்தவர்களோடு சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக அவர்களின் அபிலாஷைகளை அடைவதற்கு அனுகூலமாக இதயசுத்தியோடு நடந்து கொண்டதற்கும், கூட்டுமொத்தமாக எமக்கு கிடைத்த வெகுமதியே இன்று நாம் வீடிழந்து வேலையிழ்து, விரட்டியடிக்கப்பட்டு, அனாதைகளாகி, தவித்துக் கொண்டிருக்கும் இப்பரிதாப நிலை. எமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெரும்பான்மை மக்கள் மீதும் தேசிய அரசியல் கட்சிகள் மீதும் தான் வைத்திருந்தோம். இலங்கைப் பிரஜைகள் என்ற நிலையில் எங்கள் பிறப்புரிமைப்படி எமக்குச் சேரவேண்டிய பங்கை மாத்திரமெ நாம் கேட்கிறோம். இது எங்கள் நாடு எங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக நாங்கள் நாட்டைப் பிரிக்க முயலவில்லை. பயங்கரவாத நடவடிக்கைகள் எதிலும் நாம் ஈடுபட்டதும் கிடையாது. எங்கள் நியாயமான கோரிக்கைகளைத் தேசிய அரசியற் கட்சிகள், முழு மனதோடு ஏற்று பதவிக்கு வந்ததும் உடன் நிறைவற்றித் தருவோம் என்று வாக்குறுதியளித்தும் தேர்தல் முடிந்தும் ஏறெடுத்துப்பார்க்காமல் நடந்து கொண்டதையும், கட்சியின் நடவடிக்கைகளில் திருப்தியில்லாவிட்டால் உடன் வெளியேறும்படியும், மறுத்தால் உதைத்து வெளியேற்றப்படுவீர்கள் என்று கட்சியின் தலைமைப் பீடம் கட்சி முஸ்லிம் ஆதரவாளர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்ததையும் எந்தத் தன்மானமுள்ள முஸ்லிமும் மறக்கவே மாட்டான். எனவே தேசியப் போர்வையில் கபட நாடகங்களை நெறிப்படுத்திக் கொண்டு, சிறுபான்மை இனத்தவரைத் தொடர்ந்து ஒதுக்கி உதாசீனப்படுத்தும் பேரினவாதக் கட்சிகளில் முஸ்லிம்கள் தங்கள் பூரண நம்பிக்கையையும் விசுவாசத்தையும் முற்றாக இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதின் பிரதிபிம்பங்களே இன்று, எம் மத்தியில் ஏற்பட்டுள்ள பக்குவமான விழிப்புணர்ச்சிகளும், தீர்க்கதரிசனமான சிந்தனைப் போராட்டங்களும் எனலாம். ஆகவே, எம் முயற்சிகளும், போராட்டங்களும் வெற்றிபெற ஒற்றுமையையும், பாசவுணர்வுகளையும், மனிதத்துவத்தையும், நேசப்பிணைப்புக்களையும் மதித்து நடக்க உறுதியுடன் ஒன்றுபடுவோம்