ஊடகங்களுக்கான அறிக்கை – 12-10-2018

நாட்டில் ஜனநாயகக் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக பெருமை கொள்ளும் இன்றைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதில் தனது இயலாமையையே தொடர்ந்து காட்டி வருகின்றது. நாட்டின் பருமட்டான பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கும்,  – சாதாரண மக்களினது வாழ்க்கைத் தரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்கும் கடந்த அரசாங்கம் பெருமளவில் பெற்றுக் கொண்ட வெளிநாட்டுக் கடன் சுமைகளையும், அமெரிக்காவின் அண்மைக்கால பொருளாதாரக் கொள்கைகளையும், சர்வதேச சந்தையில் தற்காலிகமாக ஏற்;பட்டிருக்கும் எரிபொருட்களின் விலை உயர்வையும் காரணங்களாகக் காட்டி தனது பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முற்படுவதாகவே தெரிகின்றது.
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை உடனடியாக மிகப் பெரிய அளவில் உயர்த்துவது அரசின் அநாவசிமான பதட்டத்தையே காட்டுகிறது. அமெரிக்க டொலர் தொடர்பான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி 5 சதவீதமளவிலேயே ஏற்பட அரசாங்கமோ பெற்றோலியப் பொருட்களின் விலைகளையும் போக்குவரத்து கட்டணங்களையும் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளையும்; 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அதன் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் தமது பொருளாதார வாழ்வு தொடர்பான பயக் கெடுதிகளையே அரசாங்கம் வளர்த்து விட்டுள்ளது. வர்த்தக முதலாளிகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விலைகளை உயர்த்துவதை உடனடியாகவே செய்வார்கள் ஆனால் என்ன காரணம் கொண்டும் பின்னர் விலைகளைக் குறைக்கமாட்டார்கள் என்பது பொதுவாகத் தெரிந்ததே. விலைக் குறைப்புகளை அரசாலும் செய்ய முடிவதில்லை. எனவே மக்களின் வாழ்க்கைச் செலவுகளின் திடீர் உயர்வுக்கு காரணமாக அரசு செயற்பட்டுள்ளமை சாதாரண மக்களின் அடிப்படை வாழ்வாதார நலன்களுக்கு விரோதமானதாகும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு உண்மையான காரணங்களில் பிரதானமானது வர்த்தக நிலுவையின் பாதகமான நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளமையாகும். இந்த ஆண்டு ஏற்றுமதி வருமானத்தோடு ஒப்பிடுகையில் இறக்குமதிச் செலவானது இரண்டு மடங்கையும் மீறியதாக இருக்கும் என கணிப்பிடப்படுகிறது. வர்த்தக முதலாளிகளின் இலாப குவிப்புகளுக்கும், பணக்காரர்களின் சுகபோக வசதிகளுக்கும் வாய்ப்பாக இறக்குமதிகளுக்கான வசதிகளை தொடர்ந்து தாராளமாக்கி வருவதனாலேயே பாதகமான வர்த்தக நிலுவை மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவேதான் இப்போது அமெரிக்க டொலர் தொடர்பான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சிக்கு பிரதானமான காரணமாக உள்ளது.

பாதகமான வர்த்தக நிலுவையைக் குறைப்பதற்கு ஏற்றுமதிகளை குறுகிய காலத்தில் அதிகரிப்பதென அரசாங்கம் கொண்டுள்ள கொள்கைகளும் திட்டங்களும்; அறிக்கைகளிலும் வாக்குறுதிகளிலுமே அழகாக உள்ளன. நடைமுறையில் எந்தவகையிலும் காத்திரமான முன்னேற்றங்களை இதுவரை ஏற்படுத்தவில்லை.
இப்போதுதான் – அதாவது நாட்டின் பொருளாதார நிலை மோசமான கட்டத்துக்குள் மூழ்கிய பின்னர்தான் நிதி அமைச்சர் உயர்மட்ட வகுப்பினரின் சொகுசு வாழ்க்கைத் தேவைக்கான இறக்குமதிகளில் சிலவற்றை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். அது எவ்வளவு காலத்துக்கு தொடரும், எந்தளவுக்கு வெற்றிகரமாக அமையும் எனக் கூற முடியாது. கடுமையான இறக்குமதிக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் கடந்த காலத்தில் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கக் காரணமாய் அமைந்தபடியால் இந்த அரசாங்கம் இறக்குமதிகளை போதிய அளவு கட்டுப்படுத்தவோ நெறிப்படுத்தவோ மாட்டாது என்பது தெளிவு. அத்துடன் தாராளவாத பொருளாதாரக் கொள்கையில் ஊறிப் போன இந்த அரசாங்கம் இறக்குமதி பிரதியீட்டுக் கொள்கையையும் கடைப்பிடிக்காது என்பது தெரிந்ததே.
கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமாகக் காட்டும் அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக தனது பங்குக்கு வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்த வண்ணமேதான் உள்ளது.
நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் தாராளவாத அணுகுமுறையை அடுத்தடுத்து விரிவாக்கும் போது தேசிய உற்பத்திசார் துறைகள், நுகர்வோர் பாதுகாப்பு, தொழிலாளர்களின் உரிமைகள், நீதியான தேசிய வருமானப் பகிர்வு, இயற்கை வளங்களின் மற்றும் சுற்றுப் புறச் சூழல் பராமரிப்பு போன்றன தொடர்பாக  அரசாங்கம் தேவையான அளவுக்கு பொருளாதார நெறிப்படுத்தல் சட்டங்களையும், சரியான பொறி முறைகளையும் கொண்டிருத்தல் வேண்டும். இங்கு இவற்றுக்கான நிலைமைகள் எங்குமே இல்லை.
நோய்க்கான காரணங்கள் ஏதோ இருக்க கண்ணை மூடிக் கொண்டு மருந்து கொடுக்கும் அணுகுமுறையை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
திறந்த முதலாளித்துவ பொருளாதாரத்தை பிரச்சாரம் செய்து அதனை பின்தங்கிய பொருளாதார நாடுகள் மீது திணித்ததுவும் வளர்ச்சியடைந்த நாடுகளே. இப்பொழுது அதே வளர்ச்சியடைந்த நாடுகள் திறந்த தாராளவாத பொருளாதார அணுகுமுறையின் பாதகங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள தமது தேசிய பொருளாதார நலன்களுக்கு சார்பான ஏற்பாடுகளை கட்டாயமாக்கிக் கொண்டு வருகின்றன. எனவே, இலங்கையும் தாராளவாத திறந்த பொருளாதார அணுகுமுறை தொடர்வதை மீளாய்வு செய்து பொருத்தமான பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
திறந்த முதலாளித்துவக் கட்டமைப்பின் கட்டாக்காலித்தனங்களை கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதார செயன்முறைகளை நெறிப்படுத்துவதற்கான நடைமுறைகளை நிறைவேற்றுவதுடன், சுய பொருளாதார ஆதாரங்களின் அடிப்படையில் நீடித்து நிலைக்கும் வகையான பொருளாதார முன்னேற்றங்களுக்கு வழி வகுக்க வேண்டும். அதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு அவசியமானவற்றை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளுதல் வேண்டும். அதாவது,
• அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி சாதாரண மக்களின் வயிற்றைக் கட்டுகின்ற திட்டங்களை நிறுத்த வேண்டும்;
• பொது மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடையும் போக்கை தடுத்து நிறுத்த அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்;
• மேலும், நாட்டின் பொருளாதாரம் அடைந்துள்ள தரத்துக்கேற்ப போதியளவு வருமானத்தை கீழ்மட்ட மக்களும் பெற்றுக் கொள்ளும் விதமாக நாட்டின் தேசிய வருமானம் பல்வேறு தரப்பட்ட மக்களிடையேயும் பகிரப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
——————————————
அ.வரதராஜா பெருமாள்