என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 2

(மாதவன் சஞ்சயன்)

மாணவர்களின் முன் முயற்சியில் உருவான பிரமாண்டமான புத்தர் சிலை அமைந்துள்ள குருணாகல் மாவட்டத்தில் இருந்து தான், ராணுவத்துக்கு அதிகமானோர் இணைந்தனர் என்ற செய்தி என் ஞாபகத்துக்கு வந்த போது, சற்று மனக் குழப்பம் ஏற்பட்டது. 2002ல் ஆரம்பித்து 2015ல் திறந்து வைத்த சிலையை தனி ஒரு மலையில் செதுக்கியது தமிழகத்தை சேர்ந்த சிற்பிகள். உக்கிரமான போர் நடந்த காலத்தில் 10க்கு மேற்பட்ட தமிழர்கள் அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்ற இனவாதம் விட்டது என்றால், யார் இனவாதிகள் என்ற சுய விமர்சன கேள்வியும் என்னுள் எழுந்தது. காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த சிங்கள அதிகாரி முதல், ரூபவாகினி விக்னேஸ்வரனுடன் வந்த சிங்கள அதிகாரிகள் கொல்லப்பட்டது யாழ் மண்ணில் அல்லவா?

சிலை அமைய வேண்டிய இடம் பற்றிய தேர்வு நடந்த போது வந்த தமிழ்நாட்டின் பிரபல ஸ்தபதி, அதற்கான மலையை தேர்வு செய்ய முயன்ற போது திடீரென அங்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞன், இந்த மலையை குறிப்பிட்டு சொல்லிவிட்டு வேகமாக சென்று மறைந்ததாகவும் அந்த மலையை சோதித்த ஸ்தபதி, விக்கித்து நின்றதாகவும் பரவலாக அங்கு வந்தவர்கள் பேசிக்கொண்டனர். தமிழ்நாடு மருதமலை முருகன் கோவில் கூட சினிமாக்காரர் சாண்டோ சின்னப்பா தேவரால், பிரமாண்டமாக கட்டப்பட்ட போதும் இது போன்ற பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். அதற்குள் புகாமல் அந்த சிலை கரியகருங்கல் மலையை செதுக்கி வடிவமைக்கப் பட்டிருந்த போதும், அதன் மீது சூரிய ஒளி படும்போது வெள்ளிப்பளிங்காக, சாந்த நிலை புத்தர் மிளிரும் காட்சி கண்டேன்.

மதப்பற்றும் நாட்டுப் பற்றும் மிதமாக கொண்ட பிரதேசம் என்பதாலா இரண்டு முரண்பட்ட செயல்கள் அங்கு நடந்தேறின என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒரு புறம் மனிதத்தை போதித்த புத்தருக்கு பிரமாண்டமான சாந்த சொரூப சிலை. மறுபுறம் ஆயுதப் படையில் அதிகமானோர் இணைந்த செயல், என்னை வரலாற்றை தேட வைத்தது. ஆதிகாலத்தில் புத்த பிக்குகள் தற்காப்பு கலை பயின்றதாகவும் நாட்டுக்கு எதிரிகளால் ஆபத்து வரும் போது அவர்களும் போர்க்களம் புகுவதாகவும் அறியக்கிடைத்தது. இன்று பன்சலைகளில் தம்ம போதனைகளுடன், இன பிரச்சாரங்களும் இரண்டற கலந்ததால் இந்த நிலையா, அல்லது வாருங்கள் தாய் நாட்டை காக்க என்ற அழைப்பா, அல்லது அதிகமானோர் வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் மாவட்டம் குருணாகல் என்பதாலா?

அண்மைய தேர்தலில் கூட மகிந்த இந்த மாவட்டத்தில் போட்டியிட்ட காரணம் கூட கோட்டபாய அவருக்கு கொடுத்த ஆலோசனை தான். யுத்தத்தில் அதிகம் ஈடுபட்ட ராணுவத்தினர் குடும்பங்களின் வாக்குகளை, யுத்த நாயகன் என்ற பெயரில் மகிந்த பெற்று வெற்றிவாகை சூடலாம் என்ற அவரது ஆலோசனை பொய்க்கவில்லை. குருணாகல் மாவட்டத்தில் 4 லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள் பெற்று, அதிகூடிய வாக்குகளை பெற்றவர் என்ற பெருமை மகிந்தவுக்கு கிடைத்தது. இருந்தும் அவரால் அந்த வெற்றியைக் கொண்டு துள்ளிக் குதிக்க முடியவில்லை.காரணம் கொழும்பில் போட்டியிட்ட ரணில் 5 லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகளைப் பெற்றது அரசின் பிரதமராக வந்து மகிந்தரை வெறும் சாதா உறுப்பினராக அமரவைத்தார்.

என் பயணத்தை தொடர புத்தம் சரணம் கச்சாமி என மனதுக்குள் கூறியபடி கொழும்பு செல்லும் மினி பஸ்ஸில் ஏறினேன். குளிரூட்டி வசதி இருந்ததால் குழு குழு என இதமாக இருந்து, என் வாயை அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்ற உயர்ந்த மனிதன் சிவாஜி வாயசைத்த பாடலை முணு முணுக்க வைத்தது. திறந்த பொருளாதார கொள்கையின் நாயகன் ஜே ஆர் புண்ணியத்தில் அன்று ஜப்பான் ரோசா பஸ்ஸில் பயணிப்பது புதுப் பெண்டாட்டியை உரசுவது போல் இதமாக பதமாக இருந்த காலம். எப்படியாவது சாரதி எதிர் பக்கம் இருக்கும் யன்னல் ஆசனம் கிடைத்தால் பேரானந்தம். சௌந்தரராஜன் பாடல் ஒலிக்க கண்முன்னே தெரியும் வயல் வெளிகள், உப்பளம், பாளை தென்னம் தோப்புகள் என காட்சிகள் விரிய கிளிநொச்சியில் ஏறி யாழில் புது மாப்பிளை போல இறங்கிய காலம் நினைவில்.

முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு மட்டுமல்ல வாகனங்களுக்கும் மங்களம் பாடியதால், எஞ்சியுள்ள மினி பஸ்கள் யாழில் உள்ளூர் சேவையில் மட்டும். அதில் பயணிப்பவர் வீடு திரும்பியதும் ஏற்பு வராமல் மரமஞ்சள் அவித்து குடிக்க வேண்டும், அல்லது சித்தாலேப பூசவேண்டும். பெயின்ரா, கறளா என தெரியாத நிறம். இருந்தால் சீற்கம்பி குத்தும், நின்றால் அடுத்தவர் கால் மிதிக்கும். யாழ் பயணிகள் பஞ்சமா பாதகம் செய்தவர்கள். அதனால் தான் நடத்துனர் எனும் யம தூதர்கள், அவர்களுக்கு நரகத்தில் கிடைக்கும் தண்டனையை விட மோசமான தண்டனை கொடுக்கின்றனர். ஆனைக்கோட்டை மானிப்பாய் சண்டிலிப்பாய் தொட்டிலடி இளவாலை கீரிமலை பயணிகளை மூச்சு முட்டும் அளவுக்கு ஏற்றி, பைசா சாய்கோபுரம் போல மெல்ல மெல்ல சிற்ரூந்து நகரும்.

ஏற்றும் போது சீற் இருக்கு என ஏற்றிவிட்டு, அதுவரை இருந்து வந்த பொடியனை எழுப்பி மற்ரவர் மடியில் குந்தவைப்பர். மடியில் இடம் கொடுத்தவர் இறங்கும் போது கால் விறைத்ததால் இடறுப்பட்டு தடுமாற, ஐயாவுக்கு ராத்திரி போட்டது முறியேல்ல போல என நக்கலும் அடிப்பர். லொறியில் சாக்கு மூட்டை அடுக்குவது போல சனத்தை அடைவர். தம்பி முன்னுக்கு போம், தங்கச்சி பின்னுக்கு வாரும், ஆச்சி அரக்கி இருங்கோ, அப்பு பைய இருக்கிறவேற்ற குடணை, இறங்கிறவைக்கு விலத்தி விடுங்கோ என, அடை அடை என அடைஞ்சு போட்டு, கெதியா இறங்குங்கோ எண்டா சனம் என்ன செய்யும். இடிச்சு தள்ளி ஆற்றையும் காலில ஏறி மிதிச்சு அந்தரத்தில கம்பிய பிடிச்சு, வேட்டி அவிழ இழுபறிப் பட்டு இறங்கும் அலங்கோல காட்சி இன்றைய யாழ் நிலை.

வட மாகாண சபை தேர்தல் முடிந்ததும் அமைந்தது தமிழ் அரசு என தலையங்கம் இட்ட பத்திரிகைக்கு பலதடவை பயண அவலங்கள் பற்றி எழுதினாலும் அதை வெளியிட சரவணபவ கிருபை கிடைக்கவில்லை. வட மாகாண மீன்பிடி அமைச்சரும் போக்குவரத்து அமைச்சரும் ஒருவரே. அவர் பதவி ஏற்ற பின்பு கூட எம்மவர் மீனை இந்திய உறவுகள் இரட்டை மடிவலை போட்டு அள்ளுகிறார்கள். எம்மவர் வலைகளையும் அறுத்து விட்டு செல்கிறார்கள். கடலுக்கு எல்லை இல்லை மீனுக்கு பாதை இல்லை என்றால் வீதியில் ஓடும் பேரூந்து சிற்ரூந்துக்குமா விதி ஒழுங்கில்லை. அவர்களுக்கு வாக்களித்தவன் நெரிசலில் நொந்து நூலாகி வெந்து பயணிக்க முதல்வர் உட்பட அமைச்சர் பெருமக்கள் சொகுசு வாகனத்தில் சொப்பனம் வாழ்வில்.

புத்தரை மட்டும் பெரும்பான்மையாய் வணங்கும் சிங்கள மக்களை அவர் ஆசீர்வதித்து அவர்கள் சிறப்பாக பயணிக்கின்றனர். எத்தனையோ சாமிகள் எமக்கு இருந்தும் நாம் சபிக்கப்பட்டவர் போலவே வாழ்கிறோம். பாக்கியராஜ் போல இந்த இடத்தில்ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். யார் கடவுள் உயர்ந்த வர், என்ற போட்டியில் மலையின் உச்சியில் இருந்து குதித்து யார் இறக்கவில்லையோ அவர் கடவுள் தான் பெரியவர் என கூற, அல்லாஹூ அக்பர் என பாய்ந்தவரை அல்லா கையில் ஏந்த, யேசுவே என கூவி குதித்தவரை மீட்பர் ரட்சிக்க, புத்தம் சரணம் என்றவரை அவரின் கருணை காக்க, சிவ சிவா – நாராயணா – பிள்ளையாரே- முருகா என அழைத்தவரை காக்க வந்த அவர்களுள் ஏற்பட்ட குழப்பத்தால், காலம் கடந்து போக கீழே வீழ்ந்து இறந்தார் அழைத்தவர்.

முருகன் நினைத்தார் அண்ணன் பிள்ளையார் காப்பாற்றுவார் என்று. பிள்ளையார் நினைத்தார் மாமா நாராயணன் பார்த்துக்கொள்வார் என்று, நாராயணன் தன் மைத்துனர் சிவன் சித்தம் என இருந்து விட்டார். சக்தி இன்றி சிவம் இல்லை என்பதால் உமையை அழைக்காத அற்ப பதரை எப்படி காப்பது என எண்ணி சிவம் காலம் கடத்த கூவியவன் குப்பிற விழுந்து மண்டான். மத்திய மந்திரியாய் இருந்தவர் மணல் போல் வருமானம் தரும் விடயங்களை கவனிக்க, முதல்வரோ ஒருகையால் கொடுத்து மறு கையால் பறிப்பதாக புலம்ப, அமைச்சரோ மீன்பிடி/போக்குவரத்து என குருவி தலை பனங்காயை சுமக்க முடியாமல் தவிக்க, நடத்துனர் நாட்டாமையில் யாழ் பயணிகளின் துன்பம் அனுமன் வாலில் தீயிட்டதால் ஏற்பட்ட துன்பம் போல் தொடர்கிறது.

வறக்காபொல வரை பாதை சீராக்கல் காரணமாக வேகம் குறைந்த பயணம், கண்டி வீதியில் ஏறியதும் கடுகதி வேகம் கொண்டது. புத்தரின் தரிசன பலன் எனக்கு சாரதியின் எதிர்ப்பக்க யன்னல் ஆசனம் தந்தது. பல தசாப்தங்களின் பின் கிடைத்த பெரும் பேறு அது. மீண்டு புத்தம் சரணம் கச்சாமி என மனதுள் சொல்லத் தோன்றியது. மினி பஸ் ஓட்டடுனர் நேரத்துக்கு வருவேன் என மனையியிடம் கூறி இருப்பார் போலும். வாய் வெற்றிலை நீர் கடைவாயால் வழிய, அந்த வாகன நெரிசல் சாலையில் அங்கும் இங்கும் திருப்பி உள்ளே புகுந்து, இயன்றவரை முன்சென்ற வாகனங்களை முந்தி ஓடிய ஓட்டம் எனக்கு முல்லைத்தீவில் இருந்து பரந்தன் ஊடாக வவுனியா செல்லும் தனியார் மற்றும் அரச பேரூந்து ஓட்டப் போட்டியை ஞாபகமூட்டியது.
– நீட்சி 3ல் –