கலவரமாகுமா உள்ளூராட்சி தேர்தல் களம்?

உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பெறப்படும் முன்பே அரசியல் புகைக்கத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் காலங்களில் தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து செயல்ப்படவோ அன்றி அதன் வீட்டு சின்னத்தில் போட்டியிடவோ போவதில்லை என ஈ பி ஆர் எல் எப் கட்சி பிரேமசந்திரன் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

அதே வேளை தான் கூட்டமைப்பை விட்டு வெளியேற போவதும் இல்லை எனவும் கூறியுள்ளார். கூட்டமைப்பு என்பது ஆரம்பத்தில் தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ விடுதலை இயக்கம் என்பன இணைந்து புலிகளின் அனுசரணையில் உருவானது என்றும் சொல்கிறார்.

பின்பு தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் தமிழ் காங்கிரஸ் விலகி செல்ல தமிழ் அரசு கட்சி மற்றும் புளட் அமைப்பு கூட்டமைப்பில் இணைந்ததாக பேசியுள்ளார். அவர் கூற்றுப்படி மேலோட்டமாக பார்த்தால் ஆரம்ப கூட்டமைப்பில் இருந்தவர்களில் இன்று எஞ்சி இருப்பது ஈ பி ஆர் எல் எப் மற்றும் டெலோ போலவே தோன்றும். ஆனால் உண்மை அது அல்ல.

தமிழர் விடுதலை கூட்டணி என்பது தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் காங்கிரஸ் கூட்டில் உருவானது. அப்போது தமிழ் அரசு கட்சி வீட்டு சின்னமோ அன்றி தமிழ் காங்கிரஸ் சயிக்கிள் சின்னமோ பாவிக்க படாமல் உதய சூரியன் என்ற சின்னம் பாவிக்கப்பட்டது. ஆனால் கூட்டமைப்பு உருவான வேளை ஆனந்தசங்கரி உதய சூரியன் சின்னத்தை தனதாக்கி கொண்டார்.

உறங்கு நிலையில் இருந்த தமிழ் அரசு கட்சி மீண்டும் புலிகளின் ஆசீர்வாதத்துடன் வீட்டு சின்னத்தில் அடுத்த தேர்தல் களம் கண்டு வெற்றி பெற்றது. கூட்டமைப்பு உருவாக ஆசீர்வாதம் கொடுத்ததும் புலிகள். பின்பு தமிழ் அரசு கட்சியை துயில் எழுப்பி வீட்டு சின்னத்தில் போட்டியிட அனுசரணையாக இருந்ததும் புலிகள். இரண்டின் போதும் உள்ளே இருந்தவர் பிரேமசந்திரன்.

1977 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் காங்கிரசில் இருந்த குமார் பொன்னம்பலம் சுயேட்சை வேட்பாளராக யாழ்பாணத்தில் போட்டியிட்டார். காசி ஆனந்தன் தமிழ் அரசு கட்சி வேட்பாளராக மட்டக்களப்பில் போட்டியிட்டார். இருவரும் படுதோல்வி அடைந்தனர். உதய சூரியன் சின்னத்தில் வென்றுவந்த ஏனைய இரு கட்சி உறுப்பினர்களும் தமிழர் விடுதலை கூட்டணி என்று தொடர்ந்தனர்.

கூட்டமைப்பு உருவாகும் வரை உதய சூரியன் சின்னத்தில் தான் வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் தவிர்ந்த சகல தேர்தல்களிலும் போட்டியிட்டனர். காங்கிரஸ்காரரான ஆனந்தசங்கரி கூட்டணி தலைவர் என்ற உரிமையில் உதய சூரியன் சின்னத்தை முடக்கிய பின்தான் தமிழ் அரசு கட்சி செயலாளர் மாவை சேனாதிராஜா வீட்டு சின்னத்தை முன்னிலைப் படுத்தினார்.

புலிகளும் அதனை அங்கீகரித்தனர். பிரேமச்சந்திரன் வீட்டு சின்னத்தில் தான் போட்டியிட்டார். அவர் மட்டுமல்ல கூட்டணியை விட்டு விலத்தி சென்ற காங்கிரஸ் கட்சி தலைவர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வர் கஜேந்திரகுமார் கூட வீட்டு சின்னத்தில் தான் போட்டியிட்டார். புலிகள் ஆசீர்வாதம் பெற்றவர்கள் அவர்களின் அழிவுக்கு பிறகு ஓரம் கட்டப்பட்டார்கள்.

அவர்கள் மீண்டும் தங்கள் சயிக்கிளில் பயணம் தொடர்ந்தனர். ஆனால் பிரேமச்சந்திரன் இறுதியாக நடந்த தேர்தல் வரை தமிழ் அரசு கட்சி வேட்பாளராக வீட்டு சின்னத்தில் தான் போட்டியிட்டார். கேட்டால் நான் கூட்டமைப்பில் இருக்கும் கட்சி தலைவர் என அந்த கட்சியின் பூவை (சின்னம்) கேட்பவர் காதில் வைப்பார். நான் முன்னுக்கு வந்த காது சுமந்திரன் பின் வந்த கொம்பு என்கிறார்.

கூட்டமைப்பு உருவாக காரணம் தமிழ் மக்களின் விடிவு என்று இவர் கூறும் காரணம் முழுமையான உண்மை அல்ல. பலதாக பிரிந்து நின்ற தமிழ் கட்சிகளால் இழந்து போன பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை பற்றி சிந்தித்த சிவராம் போன்ற கிழக்கின் சில பத்திரிகையாளர்களின் முன் முயற்சியும், தங்களுக்கு ஒரு அரசியல் முகம் தேவை என்ற புலிகளின் சாமர்த்தியமுமே அது ஆகும்.

காற்றின் திசை நோக்கி பட்டம் விட்டவர்கள் இன்று வீம்புக்கு நிற்பதும் கூட தங்களை தக்கவைக்க மட்டுமே. தமிழ் அரசு கட்சி ஆரம்ப முதலே கூட்டமைப்பின் அங்கமாக கூட்டமைப்புக்குள் இருந்த கட்சி. கூட்டணியை தன்வசமாக்கிய ஆனந்தசங்கரி தமிழர் விடுதலை கூட்டணி என்ற பெயரையும் சூரியன் என்ற சின்னத்தையும் மட்டுமே கொண்டு சென்றார். காங்கிரசை குமார் ஏற்கனவே எடுத்துவிட்டார்.

கணவன் மனைவி தனித்தனியே பிரிந்து சென்ற பின் அவர்கள் படுத்த பாய் தலையணையை மட்டும் சுருட்டிக் கொண்டு போனவர் நிலை தான் சங்கரியாரின் நிலை. ஆக கூட்டமைப்பு என்பது தமிழ் அரசு கட்சி, ஈ பி ஆர் எல் எப், டெலோ, புளட் கூட்டு என்றே கொள்ளப்பட வேண்டும். இங்கு பொது சின்னம் இன்னமும் பெறப்படவில்லை. காரணம் கூட்டமைப்பு கட்சியாக பதியப்படவில்லை.

அது நடக்காத எப்பவோ முடிந்த காரியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் நியாய தர்மங்கள் சரி பிழைகள் பல தடவை ஆராயப்பட்டுவிட்டன. பல தேர்தல்களில் வீட்டு சின்னம் நிறைய புள்ளடிகள் வாங்கி வாக்காளருக்கு பழக்கமான சின்னமாகி விட்டது. போடு புள்ளடி வீட்டுக்கு நேரே என்றால் போதும் வேட்பாளர் யார் என்று பாராமல் போடும் நிலை.

காரணம் பிரேமச்சந்திரன் கூறியது போல் அது புலிகளின் ஆசீர்வாதத்தில் உருவான, கூட்டமைப்பால் பல தேர்தலில் பாவிக்கப்பட்ட சின்னம். கூடவே ஆயுத போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகள் ஆன பின்பும் தனிப்பட்ட மக்கள் ஆதரவை கணிசமாகவேனும் தேர்தல்களில் தனித்து அவர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு பெறமுடியாத கடந்த கால யதார்த்த நிலை.

விதி விலக்காக ஈ பி டி பி மட்டும் ஒரு தளத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது. அண்மையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவுகள் சேதாரம் ஏற்ப்படுத்தினாலும் முழுமையான தோல்வியை அவர்கள் சந்திக்கவேண்டி வராது. அந்தளவு இறுக்கமான தொடர் வேலைத்திட்டம் ஏனைய முன்னாள் போராட்ட இந்நாள் அரசியல் கட்சி தலைவர்களிடம் இல்லை. அதனால் வாக்கு பெறுவது கடினம்.

பிரேமசந்திரன் மீண்டும் உணர்சிகர அரசியல் வாக்குகளை தரலாம் என்று தப்பு கணக்கு போடுகிறார் போலவே தெரிகிறது. அவர் கூறிய விடயத்தில் கூட்டமைப்பு உருவான காரணம் பற்றி கூறி அது பாதை மாறி பயணிப்பதாகவும் அதற்கு காரணம் தமிழ் அரசு கட்சி என்றும் சொல்லி தான் தமிழ் தேசியத்தின் காவலன் என்பதுபோல் பேசுகிறார். இதை தான் கஜேந்திரகுமாரும் கூறுகிறார்.

மேடை பேச்சுக்கும் பத்திரிகைகளுக்கு தீனி போடவும் மட்டுமே இது பயன்படும். மாறாக நிரந்தர தீர்வை நோக்கிய பயணத்துக்கு இது உதவாது. இவ்வாறான பேச்சுக்கள் வாக்குகளாக மாறி சிலவேளை இவர்களை பாராளுமன்றம் அனுப்பி வைக்கலாம். ஆனால் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளில் கூட இவர்கள் கலந்து கொள்ள முடியாத முன் நிபந்தனைகளை சிங்களம் முன் வைக்கும்.

அப்போது இவர்கள் பகிஸ்கரிப்பார்கள் அல்லது வெளிநடப்பு செய்வார்கள். தீர்வுகள் எட்டப்பட்டாமல் மீண்டும் மேடைகளில் முழக்கங்கள் மட்டுமே கேட்கும். மக்கள் காணி விடுவிப்புக்காகவும் அரசியல் கைதிகள் சிறை திறப்புக்காகவும் உண்ணாவிரதம் இருக்கும் நிலை தொடரும். தேர்தல் வெற்றி, பாராளுமன்ற பிரவேசம், பிரச்சனைகள் தணியாது வைத்திருத்தல் இது மட்டுமே இவர்கள் நோக்கம்.

அந்த அடிப்படையில் பிரேமசந்திரன் ஊதிய முதல் சங்கு தமிழ் அரசு கட்சியை விட்டு விலகுதல், வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதை தவிர்த்தல். இந்த சங்கு யாருக்கு ஊதப்பட போகிறது என்பதை என்னால் இப்போதே கூறமுடியும். அது சாட்சாத் பிரேமச்சந்திரன் அரசியலுக்கு ஊதப்படும் சங்கு. ஏற்கனவே ஆரம்பகால ஈ பி ஆர் எல் எப் ஆதரவு வாக்குகள் மூன்றாக பிரிந்து விட்டன.

1. EPDP 2. EPRLF 3. SDPT என பிரிந்துள்ள வேளையில் இதில் அரைவாசிக்கு மேற்பட்ட ஆதரவு என்றுமே ஈ பி டி பி வசம். அதில் கூட மிக சிறிய அளவு மட்டும் சந்திரகுமார் ஆதரவாளர் பெற்றாலும் ஈ பி டி பி தனித்து நின்று தன்னை தக்கவைக்கும். SDPT சங்கரியாரின்
கூட்டணியுடன் கூட்டுவைத்து கொள்ளலாம். ஈ பி ஆர் எல் எப் கூட்டமைப்பில் இருந்தாலும் டெலோவும் புளட்டும் தமிழ் அரசு கட்சி அதன் வீட்டு சின்னத்தில் தான் தொடரும்.

பிரேமசந்திரன் கஜேந்திரகுமார் அணியுடன்தான் இணையவேண்டி வரும். உள்ளூர் ஆட்சி தேர்தலில் ஊர் பிரமுகர்களுடன் கட்சி சின்னம் முக்கியப்படும். பிரமுகர்கள் தேடுவதில் தோல்விகண்ட முன் அனுபவம் கொண்டவர் பிரேமசந்திரன். ஐங்கரநேசன் போல் அவர் தொட்டதெல்லாம் அவரை விட்டகலும் பலன் கண்டவர். பத்மினியும் கஜேந்திரனும் கஜேந்திரகுமார் விட்டகலா துணைகள்.

இந்த நிலை தொடர்ந்தால் வந்தது இருந்தது சென்று சேர்வது எல்லாம் பிரேமசந்திரனுக்கு சோதனை மேல் சோதனை தரும். அதனால் அவர் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ஓடுவதை விடுத்து வீட்டுக்குள் இருப்பதே நலம். புளட் சுன்னாகம் மானிப்பாய் கேட்பதுபோல். டெலோ மன்னார் கேட்பதுபோல் பிரேமசந்திரனும் கோப்பாய், வவுனியா கேட்டால் நிலவரம் கலவரமாகாது.

(ராம்)