பயிரை மேய்ந்த வேலிகள்..(18)

(கட்டாய ஆட்சேர்ப்பில் சிக்கிகொண்ட காதல்)

மாணவர்களை போர் பயிற்சியை பெற்றுக் கொள்ளுமாறும், புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையில் துர்க்கா போன்ற புலிகளின் அதியுயர் தளபதிகளும் களத்தில் இறங்கியிருந்தனர். அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இம் மாணவர்களை புலிகள் அமைப்பில் சேருமாறு கூறி பாடசாலைகளுக்கே சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

பிரபாகரனின் இளையமகன் கற்றுக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரில் இருந்த பிரபல பாடசாலைக்கு புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்புக்காக அடிக்கடி சென்ற அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப் பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியருடன் காதலில் விழுந்து திருமணமும் செய்து கொண்டார். புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் காதலில் திளைத்துக் கொண்டிருந்த அதே வேளை அவர்கள் ஏனைய காதல் ஜோடிகளை பிரிப்பதில் ஈடுபட தொடங்கினர்.

கட்டாய ஆட்சேர்ப்பு தொடங்கியிருந்த இக்காலப் பகுதியில் அவர்களில் காதலனையோ அல்லது காதலியையோ பிடித்துச்செல்ல தொடங்கினர்கள். தனது காதல் துணையை இழந்த சோகத்தில் காதலனோ அல்லது காதலியோ தாமாகவே சென்று தங்களுடன் இணைந்து கொள்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்

பிடித்துச்சென்று மூன்றாம் நாள் காதலனோ காதலியோ எழுதியது போன்று தானே விரும்பி இயக்கத்தில் சேர்ந்து கொண்டதாகவும் விடுதலை போரில் அருமை பெருமைகளை கூறி தேசபற்று கடிதம் ஒன்றும் காதல் துணையை பிரிந்து வாடுபவரிடம் கையளிக்கப்பட்டு அந்த கடிததில் கூறியப்படி அவரையும் தங்களுடன் இணையுமாறு புலிகள் வற்புறுத்த தொடங்கியிருந்தனர்.

இவ்வாரான ஒரு நடவடிக்கையின் மூலம் கிளிநொச்சி நெத்தலி ஆற்றை சேர்ந்த ஒரு இளைஞனை தமது இயக்கத்தில் சேர்க்க முயன்ற புலிகள் ஒரு விபரீதமான் செயலை செய்தனர். இந்த இளைஞன் ஒரு மாவீரகுடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவருடைய அக்கா 2000ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டமையாலும் இந்த இளைஞனை கட்டாய ஆட்கடத்தலுக்கு பதில் தந்திரமாக பொறிவைத்து பிடிக்க புலிகள் முயனறனர். இப்போது மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்களும் இயக்கத்தில் சேர வேண்டும் என புலிகள் கட்டாயப்படுத்த தொடங்கியிருந்த நேரம் அது.

அந்த இளைஞனின் வீட்டிற்கு சென்ற பன்னங்கண்டியை சேர்ந்த ஒரு புலிகளின் தீவிர செயற்பாட்டாளர் உனது காதலியிடம் இருந்து கடிதம் வந்துள்துள்ளது. அதில் எழுதியுள்ளபடி நீ அங்கே சென்றால் அவளை சந்திக்கலாம் என கூறினார். தனக்கு பொறிவைக்கப்படுவதை உணர்ந்துகொண்ட அந்த இளைஞனும் அவனது தந்தையும் குறிந்த அந்த செயற்பாட்டாளரை ஏக வசனத்தில் திட்டி அனுப்பிவிட்டனர். அவர் வழமைபோன்று கிளிநொச்சி மருதநகரில் இருந்த இளம்பருதியின் அலுவலத்துக்கு சென்று நடந்தவற்றை ஒப்பித்துவிட்டார். மதியம் இரண்டுமணியளவில் குறி்த்த இளைஞனை பிடித்துவருவதற்காக நீதிநேசன் தலைமையிளான ஆட்கடத்தல் குழு புறப்பட்டு சென்றது.

வரும் விளைவுகளை முன்கூட்டியே உணர்ந்திருந்த தந்தையும் மகனும் அதற்கு முகம்கொடுக்க தயாராகவே இருந்தனர். அந்த இளைஞனின் வீட்டிற்கு சென்ற புலிகள் உனது காதலி நாட்டுக்காக போராட போய்விட்டாள் நீ இங்கு என்ன செய்கின்றாய் நீயும் உடனே இயக்கத்தில் வந்து சேர்ந்துவிடு என்று வாக்குவாததில் ஈடுபட தொடங்கினர். ஒரு கட்டத்தில் அவள் போனால் போகட்டும் நான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கின்றேன், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறினான் அந்த இளைஞன்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற நீதிநேசன் பேச்சுவழக்கில் ஆணுறுப்புக்கு கொச்சையாக பாவிக்கப்படும் சொல்லை பயனபடுத்தி அதை பிடித்து இழுத்துவா என தனது குழுவை சேர்தவனுக்கு கட்டளையிட்டான். அந்த குழுவில் இருந்த காவாலி ஒருவன் இது இருந்தால்தானே நீ வேறு ஒருத்தியை கலியாணம் கட்டுவாய் எனக்கூறி அந்த இளைஞன் இடையில் கட்டியிருந்த சரத்தை ( கைலி, லுங்கி) உருவி எறிந்திவிட்டு அவனது ஆண்குறியை பிடித்தி இழுத்து சென்று வாகனத்தில் ஏற்ற முயன்றான்.

தன் கண்முன்னனே நிர்வாணமாக அதுவும் அந்தரங்க உறுப்பை பிடித்து மகன் இழுத்துச்செல்லப்படுவதை கண்ட தந்தை நாங்கள் மாவீரர் குடும்பம் எங்களுக்கே இப்படி அநியாயம் செய்கின்றாயா என கூறி தயாராக வைத்திருந்த காடு வெட்டும் கத்தியால் மகனை இழுத்துச்சென்றவனைன் முதுகில் வெட்டினார். குறித்த அந்த இளைஞனும் தந்தையுடன் சேர்ந்து கொண்டு மிகுதியுள்ளவர்களையும் வெட்ட தொடங்கினான். இதனை சற்றும் எதிபாராத நீதிநேசன் குழுவினர் அங்கிருந்து தப்பிச்சென்ற்னர்.

அடிபட்ட புலி சும்மா இருக்காது என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அந்த தந்தை தனது மகனயும் அழைத்துக்கொண்டு இரணைமடு காடு வழியாக வவுனியாவுக்கு தப்பிசென்றிருந்தார். மாலை 6.00 மணியளவில் அவனது வீட்டை சுற்றி வளைத்த ஆயுதம்தாங்கிய புலிகளும், அவர்களின் காவல்துறையினரும் அந்த வீட்டில் இருந்த இளைஞனின் தாயையும் சிறுவனான அவனது சகோதரனையும் பிடித்துச்சென்று கிளிநொச்சி காவல் நிலையத்தில் வைத்து நையப்புடைத்ததுடன் தப்பிச்சென்ற தந்தையும் மகனும் திரும்பி வந்து சரணடந்தாலேயே அவர்களை விட முடியும் என அங்கு வந்த உறவினர்களிடம் கூறிவிட்டனர்.

அத்துடன் புலிகள் இயக்க உருப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியமை, பொதுமகன் ஒருவர மீது கொலை முயற்சியிலீடுபட்டமை என இரண்டு குற்றச்சாட்டுக்களை குறித்த தந்தையின் மீதும், மகனின் மீதும் சுமத்தி கிளிநொச்சியில் உள்ள புலிகளின் நீதி மன்றில் வழக்கும் தொடுத்தனர். குறித்த தந்தையும் மகனும் வவுனியாவுக்கு பாதுகாப்பாக தப்பித்து சென்றுவிட்ட நிலையில் தாயும் வேறு ஒரு மகனும் கிளிநொச்சியில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பின்பு அந்த பெண்ணுக்கு மகிளீர் அரசியல் துறை காரியாலயத்தில் முற்றம் கூட்டும் வேலை வழங்கப்பட்டும் சிறுவனான மகன் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பப்பட்ட நிலையில் அவர்களை பற்றிய மேலதிக விபரம் யாருக்கும் தெரியாமல் இருந்தது.

(தொடரும்….)

(Rajh Selvapathi)