போராட்ட அமைப்புக்களில் தனித்துவமான அரசியலில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஓர் நோக்கு!

அன்பார்ந்த போராளிகளே, ஆயுதரீதியாக போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே அனைவருக்கும் வணக்கம்! 1983ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் எழுச்சியுற்ற போராட்ட அமைப்புக்களின் வளர்ச்சியின் பின்னாலும், துரதிஷ்டவசமாக 1986ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் போராட்ட அமைப்புக்களுக்கிடையே, ஏற்பட்ட முரண்பாடுகளில் சிதைந்துபோன போராளிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு எவ்வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று வினவினால், இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்கிறது. கண்துடைப்புக்காக, இன்னுமொருவரின் வற்புறுத்தலுக்காக இதயசுத்தியற்ற, தொலைநோக்குப் பார்வையற்ற ஓர் ஒற்றுமையே மேலெழுந்தவாரியாகக் காணப்பட்டது.ஆனால், யார் இறங்கிப் போவது? அல்லது ஓர் பொதுத் தளத்தில் பல பிரிவுகளாகச் செயற்படுகின்ற போராட்ட அமைப்புக்களை எவ்வாறு தனித்துவத்துடன் செயற்படத் தூண்டுவது, அல்லது அத்தளத்தை நோக்கிக் கொண்டுவருவது தொடர்பாக இன்னும் நிறையவே இடைவெளிகள் தென்படுகின்றன.

பூனைக்கு யார் மணியைக் கட்டுவது? என்பது போல் நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் எமக்குப் பாடத்தைக் கற்பிக்கத் தவறவில்லை. நிறைந்த அரசியல் அனுபவமும், தொலைநோக்குப் பார்வையுமுள்ள போராளிகள் பலர் தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டு சில சில்லறைத்தனமான அரசியல் கருத்தாடல்களுக்குள் தம்மை இணைத்துக் கொள்ளாது இன்றும் பொறுமைகாத்து வருகின்றார்கள். அவர்களின் பொறுமையும், இனியும் தாம் தொடர்ந்து இவ்வாறு இருக்க வேண்டுமா? எமது சமுதாயத்தை ஒற்றுமை அரசியல் முடிவுகளை நோக்கி நகர்த்துவதற்கு அல்லது மேற்கொள்வதற்கு எவ்வாறு முன்னாள் போராளிகளை ஓர் கூட்டுத்தளத்திற்கு கொண்டுவருவது தொடர்பாகவும் ஆங்காங்கே ஆலோசனைகளும், கருத்தாடல்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இருந்தாலும், சமூகத்தை நோக்கி இக்கருத்தை முன்வைப்பதற்கு பலரிடமும் ஓர் தயக்க நிலையே காணப்படுகின்றது. அவற்றிற்குப் பல காரணிகள், காரணங்களாக இருந்த பொழுதிலும் இந்த முயற்சியை சமுதாயத்தை நோக்கி நகர்த்தும் பொழுது, அவமானங்கள் மேலோங்குமேயொழிய, விடயமானது நடந்தேறுமா? என்ற சந்தேகமே ஆழமாக பலரது மனங்களில் பதிந்துள்ளது.

முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களில் பல வகையான சமூக அரசியல் கூறுகளில் ஆதிக்கம் செலுத்திய அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தது. ஆனாலும், அவ்வமைப்பின் தலைமைப்பீடங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் ஒவ்வொரு தளத்திலும் அவர்கள் தனித்தனியே அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க சந்தர்ப்பங்கள் அமைந்தாயிற்று.

விமர்சனங்களுக்கு அப்பால் நாம் இவற்றை உற்றுநோக்குவோமாயின், அதன் தலைவர்களில் ஒருவராக இருந்து, தன்னை தனிப்பெரும் அரசியல் சக்தியாக பல தியாகங்களைப் புரிந்து தன்னை வெளிப்படுத்தி, அரசியல் அரங்கில் இன்றும் சமூக அக்கறையோடும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தியாக தனது அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியலை நாம் குறிப்பிட்டே ஆகவேண்டியிருக்கிறது.

அவ்வாறே, போராட்ட வழிமுறையூடாக வந்திருந்த பொழுதிலும், மென்மையானதோர் அணுகுமுறையின் ஊடாக சமுதாயத்தை உற்றுநோக்குகின்ற தோழர் சுகு அவர்களின் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சியும், அவருடன் சேர்ந்து இயங்குகின்ற அனுபவம் நிறைந்த முன்னாள் முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்களும், விமர்சனங்களுக்கு அப்பால் உற்றுநோக்கப்படுபவர்களே. இதேபோல், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் தோழர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும், (இன்னுமொரு அரசியல் மாற்றம் நிகழும் பட்சத்தில் இவ்வேற்றுமையில் ஒற்றுமை காணும் இவ்வமைப்புடன் இணைந்து செயற்படுபவராகவே கருத வாய்ப்புண்டு)

அதேபோல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் பாசறையில் தன்னை வளர்த்துக் கொண்டு இன்று தனித்துவமான அரசியலை நோக்கி வழிநடக்கின்ற திரு. சந்திரகுமார், முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளான ஜனநாயகக் போராளிகள் அமைப்பு, ஸ்ரீரெலோ திரு. உதயன், ஈரோஸ், இடதுசாரிகள் மற்றும் முதலாளித்துவ கூட்டணிகளுள் தம்மைத் தொலைத்துக் கொண்டுள்ள புளொட் அமைப்பின் தலைவர் தோழர் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் தோழர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இக்கூட்டில் இருந்து விடுபட்டு, போராளிகளின் கூட்டுக்கள் அணி திரள்வது அவர்களின் கௌரவத்தையும், ஸ்திரமான அரசியலையும் காத்துநிற்கும். இன்னும் விஷேடமாகக் குறிப்பிட வேண்டுமானால், கிழக்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் திரு. கருணா அம்மான், திரு. பிள்ளையான் போன்றவர்களும் இக்கூட்டில் இணைய வேண்டியவர்களே.

தமிழர்களின் சமுதாய நலன்களில் வேற்றுமையில் ஒற்றுமைகாண்பது என்னும் விடயத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பாக தமது தரப்புக் கருத்துக்களையும் பரிசீலனைகளையும் முன்வைக்க தாமதங்கள் ஏதுமின்றி, திறந்த மனதுடன் இன்றே முன்வருவது காலத்தின் தேவையாகவுள்ளது.

ஆகவே, ஏற்படுத்தப்படப்போகும் தனித்துவமான அரசியலில் ஒற்றுமைகாணும் சமுதாயத் தேவையை எவ்வாறு சகிப்புத் தன்மை மற்றும் விட்டுக் கொடுப்புடன் நீண்டதொரு அரசியல் இலக்கை நோக்கி நகர்த்தப் போகிறார்கள் என்பதைக் காலமும் அதன் தலைவர்களுமே முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பமாக இன்றைய காலம் அமைந்துள்ளது. முயற்சிகள் எம்முடையது. நல்ல முடிவுகள் உங்களதும், உங்கள் தலைவர்களினதாகவும் இருக்கட்டும்.

(தோழர் மாட்டின் ஜெயா)

(எனது நோக்கிற்கு பலவகையிலும் ஒத்துப் போகும் கருத்து இது . இந்த ஒற்றுமையை ஏற்படுத்த கடந்த கால ஒற்றுமை முயற்சிகள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் இவ் அமைப்புக்களின் கடந்த கால செயற்பாடுகளையும் சீர் தூக்கி பார்க்கும் ஒரு அலசலும் அவசியமானது எனது ஒரு பதிவின் நோக்கம் அதுவாக இருந்தது. ஆனால் அப்பதிவிறகான விமர்சனத்திற்கு பதிலாக அல்லது கருத்து பகிர்தலுக்கு பதிலாக காழ்புணர்சியுடன் வசையாடல் பொய் பேசுதல் அவதுஸற்றைபரப்புதல் இதனை நிறுத்தியுள்ளேன். இனி எழுதப்படும் வரலாற்றில் இருந்து எனது முன்னாள் இன்னாள் சகாக்கள் யதார்தத்தை புரிந்து கொள்வதற்கான அவகாசத்தை கொடுப்பதற்காக வாழ்த்துகள் சகாக்களே தொடர்ந்தும் ஐக்கியத்திறகாக முன்னேறுங்கள் – சாகரன்)