ஓமந்தையும் தாண்டிக்குளமும்

வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்பது தொடர்பிலான சர்ச்சை கடந்த சில வாரங்களாக மேலெழுந்திருந்தது. சர்ச்சைகள் இன்றி உள்ளக பேச்சுக்களினூடாக இறுதி முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றினை வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சர்ச்சையாக மாற்றிவிட்டிருக்கின்றார்கள். அது, மக்களிடையே குறிப்பிட்டளவான குழப்பங்களையும் குரோதங்களையும் ஏற்படுத்தக் காரணமாகி விட்டது.

தேர்தல் அரசியல்… என்பது மக்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தி அதிலிருந்து வெற்றிக் கனிகளைப் பறிப்பது தொடர்பில் பாரிய கரிசனை கொள்ளும் என்பது இயல்பானது. ஆனால், பாரிய இடர்பாடுகளுக்குப் பின்னர் எழுந்து வர முனைகின்ற சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் குறைந்தபட்ச கண்ணியத்தோடாவது நடந்து கொள்ள வேண்டும். அதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமிழ் மக்கள் பெருமளவு எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பு அதிக நேரங்களில் நிறைவேறுவதில்லை.

வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தினை அமைப்பது தொடர்பிலான உரையாடல்கள் 2010 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்தது. குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், அதுவும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீ.ஏ.சந்திரிசிறி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டமொன்றில் இந்த விடயம் பேசப்பட்டது. ஆனாலும், அப்போது மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டினைச் செய்வதில் பின்னடிப்புச் செய்ய, பொருளாதார மையம் அமைக்கும் விடயம் கிடப்பில் போடப்பட்டது. அது, இறுதியாக 2016 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

பொருளாதா மையத்தினை அமைக்கும் விடயம் தொடர்பிலான பங்களிப்பு என்பது மத்திய – மாகாண அரசாங்கங்களுக்கு இடையில் பங்கிடப்பட்டுள்ளது. அதாவது நிதி ஒதுக்கீடு நேரடியாக மத்திய அரசாங்கத்தினாலும் காணி ஒதுக்கீடு உள்ளிட்ட அமைவிடத்தின் தெரிவு மாகாண அரசாங்கத்தினாலும் இறுதி செய்யப்பட வேண்டியது. இதில், ஒரு தரப்பு செயற்திட்டத்துக்கான அர்ப்பணிப்பை தெளிவாக வெளிப்படுத்தாமற்போனலும் திட்டம் இழுபறிப்பட்டுச் செல்லும். அது, வவுனியா மாவட்டத்திலிருந்து வேறு பிரதேசங்களுக்கு இடம்மாறுவதற்கான ஏதுகைகளையும் கொண்டிருக்கின்றது. அந்த முனைப்புக்களில் வெளிமாவட்டத்து அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் போது ஈடுபட்டதையும் அண்மைய நாட்களில் காணக்கூடியதாக இருந்தது.

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டினை கையாள்வது தொடர்பிலான விடயத்தில் முதல் அரையாண்டு முடிந்துவிட்டது. ஏழாவது மாதமாகிவிட்ட பின்னரும் பொருளாதார மையத்துக்கான இடத்தினை தெரிவு செய்வதில் இழுபறி நீடித்தது. அந்த இழுபறி மக்கள் போராட்டங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. ஆரோக்கியமாக போராட்டங்கள் மக்களிடமிருந்து எழ வேண்டும் என்பது அரசியலுக்கும் எதிர்காலத்துக்கும் அவசியமானது. ஆனால், அந்தச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பொன்றின் கையாலாகாத்தனம் அல்லது நிர்வாகக் குறைபாடு மக்கள் போராட்டங்களை தமது இன்னொரு மக்கள் தரப்புக்கு எதிராகவே எழ வைப்பது உண்மையில் துரதிஷ்டமானது.

வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையம் என்கிற விடயத்தினை வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மையம்… என்கிற அடையாளப்படுத்தலினூடு மக்களிடம் கொண்டு செல்லும் செயற்திட்டத்தினை சில தரப்புக்கள் திட்டமிட்டு செய்கின்றன. வவுனியா மாவட்டத்துக்கானது என்பதற்கும் வடக்கு மாகாணத்துக்கானது என்பதற்குமான வித்தியாசம் என்ன? வவுனியா, வடக்கு மாகாணத்துக்குள்ளேயே அமைந்திருக்கின்றது. ஆகவே, வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மையம் என்கிற அடையாளப்படுத்தல்கள் சரியானதே என்கிற வாதத்தினை சில தரப்புக்கள் முன்வைக்கலாம். ஆனால், விடயம் சற்று கவனமாக பார்க்கப்பட வேண்டியது. அதாவது, வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மையம் என்பது வடக்கின் ஐந்து மாவட்டத்தின் நன்மைகளையும் கருத்தில் கொண்டு இடத்தினை தெரிவு செய்யும் விடயத்தினை முதன்மைப்படுத்தும். ஆனால், வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையம் என்பது பிரதானமாக வவுனியா மாவட்டத்து மக்களின் பயன்களை பிரதானமாக கொள்ள வேண்டியது. அது, அந்த உணர்நிலையிலிருந்தே அமைவிடத்தினையும் தெரிவு செய்வதற்கான முடிவுகளை எடுக்க வைப்பது.

அப்படிப்பட்ட நிலையில், வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையம் என்பது அந்த மாவட்ட மக்களின் நலன்களை அதிபட்சமாக கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதன்பின்னரே, அதனை வடக்கு மாகாணத்துக்கான பயன்கள் சார்ந்து நோக்க வேண்டும். ஆக, வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மையம் என்ற அடையாளப்படுத்தலினூடு மக்களிடம் எழுப்பப்படும் குழப்பம் என்பது அவ்வளவுக்கு அவசியமற்ற ஒன்று.

பொருளாதார மையத்துக்கான காணியை ஒதுக்குவது தொடர்பில் வடக்கு மாகாண சபை தீர்க்கமான முடிவொன்றுக்கு எப்போதோ வந்திருக்க வேண்டும். ஆனால், இறுதி முடிவினை எடுக்காமல் காலம் தாழ்த்திய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக அரசியல் இழுபறிகளின் போக்கில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. வடக்கு மாகாண சபையின் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் செயற்திறனற்ற தன்மை தொடர்பில் மக்களுக்கு ஏற்கெனவே பெரும் அதிருப்தியுண்டு. அப்படியிருக்கின்ற நிலையில், சுமூகமாக முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்று அடுத்தகட்ட அலைக்கழிப்புக்கு உள்ளான விடயம் பாரதூரமானது.

வவுனியா நகரத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் தாண்டிக்குளமும் பன்னிரண்டு கிலோமீற்றர் தூரத்தில் ஓமந்தையும் அமைந்திருக்கின்றன. ஆயுதப் போராட்டக் காலங்களில் தாண்டிக்குளமும் ஓமந்தையும் தொடர்ச்சியாக கவனம் பெற்று வந்த பிரதேசங்கள். ஒப்பீட்டளவில் தாண்டிக்குளம் நகர்சார் அபிவிருத்தியை குறிப்பிட்டளவில் கண்ட பகுதி. ஆனால், ஓமந்தை ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்ட கிராமமாக தொடர்ந்தும் இருந்து வருகின்றது. அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பிலான முன்னெடுப்புக்கள் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், வவுனியா மாவட்டத்தின் நலன் மற்றும் பிரதேசமொன்றின் அபிவிருத்தி சார்ந்தே அமைவிடம் பற்றிய முடிவு இறுதி செய்யப்பட வேண்டும். அத்தோடு, காணி ஒதுக்கீடு மற்றும் போக்குவரத்து வசதிகள் சார்ந்த விடயமும் கவனிக்கப்பட வேண்டியிருக்கின்றது.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான ஓமந்தையை அமைவிடமாக முன்வைக்கும் தரப்பு, பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைப்பது தொடர்பில் காணி ஒதுக்கீடு ஏற்கெனவே செய்யப்பட்டு விட்டது. குறிப்பாக, காணி ஒதுக்கீடு தொடர்பில் அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்டன. வவுனியா நகரத்துக்கு வெளியே பிரதேச அபிவிருத்தியை கவனத்தில் கொள்ளும்போது ஓமந்தை சிறந்த இடம். போக்குவரத்து நெருக்கடிகளும் அற்ற பகுதி…. என்கிற விடயங்களை முன்வைக்கின்றது.

தாண்டிக்குளத்தினை பொருளாதார மையத்தின் அமைவிடமாக முன்வைக்கும் தரப்போ, வவுனியா நகரத்துக்கு அண்மையில் அமைந்திருப்பது பொருளாதார மையத்துக்கு அவசியமானது. அதுவே, அதிக பயன்களைக் கொண்டு வரும். வவுனியா மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் பகுதியாக தாண்டிக்குளம் காணப்படுகின்றது… என்கிற விடயங்களை முன்வைக்கின்றது.

நிலைமைகள் இவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது, தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரி மாணவர்கள் பொருளாதார மையத்தினை தமது கல்லூரிக்கு முன்னால் அமைக்க வேண்டாம் என்று தெரிவித்து போராட்டமொன்றை நடத்தியிருக்கின்றார்கள். அதற்கு, தமது கல்லூரிக்கு முன்னால் பொருளாதார மையம் அமையும் பட்சத்தில் பெரும் சத்தமும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு தமது கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

அரசியல் தீர்மானங்கள் மக்களின் ஆணைக்கு எதிராக எப்படி எடுக்க முடியாதோ, அதேமாதிரி நிர்வாக அல்லது அரசாங்க நடைமுறைகளின் அனைத்து விடயங்களையும் மக்களிடம் கொண்டு சென்று குழப்பங்களை ஏற்படுத்த வேண்டியதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்களையும் மாறிமாறிக் குழப்பி மக்களை அலைக்கழிக்கின்றது. பொருளாதார மையத்துக்கான அமைவிடம் தொடர்பிலான விடயத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் மாகாண சபையும் தங்களுக்கிடையில் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான உரையாடலாகக் கூட வந்திருக்க வேண்டியதில்லை. முடிவெடுக்க வேண்டிய தரப்பு அந்த முடிவினை இறுதி செய்யாதபோது அது பிரதேசவாத அரசியலாகவும் உருமாறி அழுக்குகளைக் சேர்த்துக் கொள்ளக் காரணமாகி விடுகின்றது.

வவுனியா பொருளாதார மையத்துக்கான அமைவிடம் தொடர்பில் இறுதி முடிவினை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தாண்டிக்குளத்தில் அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர்களில் முக்கியமானவரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜாவும் கூறிவிட்டிருக்கின்றார்கள்.மாவட்டமொன்றுக்கான பொருளாதா மையத்தினை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களை குழப்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. குழப்பங்களைக் கொண்டு தேர்தல் அரசியலும் ஊடகங்களும் வேண்டுமானால் அதிக பயன்களை அடையலாம். மாறாக, சமூக முன்னேற்றத்துக்கு அவை அவ்வளவு பலன்களை என்றைக்கும் வழங்கியதில்லை.
(Purujothaman Thangamayil)