தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் – அதன் பின்னணியில் உள்ள இரகசியங்களும்

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக வலம்புரி ஆசிரியர் வலம்புரி என்ற மின்னஞ்சல் ஊடாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.அதன் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அக்கூட்டத்தில் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவில்லை, ஏற்கனவே இணைத்தலைவர்கள் யார், உறுப்பினர்கள் யார் என நியமிக்கப்பட்டு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு இந்த அமைப்புக்கான இணையத்தளமும் உருவாக்கப்பட்ட நிலையிலேயே சனிக்கிழமை இரவு இக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குரார்ப்பண கூட்டம் முடிந்த ஒரு சில மணி நேரத்திலேயே இணையத்தளம் இயங்க ஆரம்பித்ததென்றால் இது எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட விடயம் என்பது தெளிவாகும்.

இது ஒரு அரசியல் கட்சி அல்ல என சொல்லப்பட்டதால் தான் இக்கூட்டத்திற்கு வந்ததாக வடமாகாண முதலமைச்சர் கூறியிருக்கிறார்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில் செயல்படவில்லை, அதனால் அதற்கு மாற்றீடாக ஒரு கட்சியை ஆரம்பிக்கப்போவதாகவும் அதன் அங்குரார்பண நிகழ்வுக்கு வாருங்கள் என வலம்புரி ஆசிரியர் அழைத்தார். அதனால் வந்தேன் என நல்லைஆதீன முதல்வர் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லியே அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரிகிறது.

இவர்களுக்கு அழைப்பு விடுத்தது முதல் அறிக்கை தயாரித்தது, இணையத்தளத்தை பதிவு செய்தது, ஊடகங்களுக்கு அறிக்கையை அனுப்பியது வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் வலம்புரி ஆசிரியர்விஜயசுந்தரம் ஆகும்.

வலம்புரி பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர் வரதசுந்தரம் பற்றிய பின்னணிகள் அறிந்து கொண்டால் இந்த அமைப்பு அல்லது அரசியல் கட்சியின் நோக்கம் பற்றி விளங்கி கொள்ள முடியும்.

வலம்புரி பத்திரிகை 1999.12.20ஆம் திகதி அன்று வெளிவர ஆரம்பித்தது. இன்று 16ஆவது ஆண்டு நிறைவு பெறுகிறது. தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய கட்சி தொடங்கப்பட்ட செய்தி இன்றைய தினம் தங்கள் பத்திரிகையில் மட்டும் வெளிவர வேண்டும் என்பதற்காக அங்குரார்ப்பண கூட்ட படங்களும் அறிக்கையும் ஏனைய பத்திரிகைகளுக்கும் இணையத்தளங்களுக்கும் அதிகாலை 2மணிக்கு பின்னரே வலம்புரி ஆசிரியரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனால் வலம்புரி பத்திரிகையில் மட்டும் தலைப்பு செய்தியாக வெளிவந்திருக்கிறது. ஏனைய பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிடவில்லை. பொதுநலன் கொண்டு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அறிக்கையையும் படங்களையும் உரிய காலத்தில் அனுப்பியிருக்க முடியும்.

வலம்புரி பத்திரிகையின் ஆசிரியரான விஜயசுந்தரம் யாழ் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். இந்த சங்கம் அக்காலத்தில் ஈ.பி.டி.பியின் கைபொம்மையாக செயல்பட்டு வந்தது. ஈ.பி.டி.பி அலுவலகத்தையே தமது சங்க தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து உதயன் பத்திரிகை மட்டுமே வெளிவந்தது. உதயன் பத்திரிகை தமக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் புலிச்சார்ப்பு பத்திரிகையாக அது வெளிவருவதாகவும் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும், இராணுவத்தினரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த பின்னணியில் தான் ஈ.பி.டி.பியின் நிதி உதவியில் வலம்புரி பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான அச்சு இயந்திரம் மற்றும் உபகரணங்கள் எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது என்பதை பெரும்பாலான யாழ்ப்பாண மக்களுக்கு தெரியும்.

ஒரு தினசரி பத்திரிகையை ஆரம்பிப்பதாக இருந்தால் ஆகக்குறைந்தது ஒன்றரைக்கோடி ரூபாய் வேண்டும். வேலையில்லாத பட்டதாரியாக வறுமை நிலையில் இருந்த பழைய சைக்கிள் ஒன்றில் திரிந்த விஜயசுந்தரத்திற்கு ஒன்றரைக்கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என சாதாரண அப்பாவி யாழ்ப்பாண மக்கள் யோசித்தனர்.

இலங்கையிலிருந்து வெளிவரும் ஏனைய தினசரி பத்திரிகைகளின் உரிமையாளர்கள் யார் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் வலம்புரி பத்திரிகையின் உரிமையாளர் யார் என்ற விபரம் இன்றுவரை தெரியாது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடியும் வரை விடுதலைப்புலிகளுக்கு எதிராக விசமத்தனமான பிரசாரங்களையும், இராணுவத்தினரின் அறிக்கைகளையும் ஈ.பி.டி.பியின் செய்திகளையும் வெளியிட்டு வந்ததால் வலம்புரி பத்திரிகை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறவில்லை,

கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயன், தினக்குரல் பத்திரிகைகள் இராணுவத்தினராலும் புலனாய்வு பிரிவினராலும் தாக்குதலுக்கு உள்ளானது, பல ஊடகவியலாளர்களும் பணியாளர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் வலம்புரி பத்திரிகை அந்நேரத்தில் எந்த தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை, இராணுவத்தினரின் ஈ.பி.டி.பியினரின் செல்லப்பிள்ளையாக வலம்புரி வெளிவந்து கொண்டிருந்தது.

2009ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்த வலம்புரி விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான செய்திகளை வெளியிட ஆரம்பித்தது. சிறிலங்கா அரசாங்கம், ஈ.பி.டி.பி, சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரின் இலக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்துவதே. அந்த நோக்கத்தை வலம்புரி பத்திரிகை செய்யத்தொடங்கியது.
2010ஆம் ஆண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஷ் கட்சியினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனியாக தேர்தலில் போட்டியிட்டதிலிருந்து தமிழ் காங்கிரஷ் கட்சிக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டனர்.

கடந்த தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விசமப்பிரசாரத்தில் ஈடுபட்டதுடன் தமிழ் காங்கிரஷ் கட்சிக்கு ஆதரவான பிரசாரத்திலும் ஈடுபட்டது. உண்மையில் வலம்புரி பத்திரிகையின் நோக்கம் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அவர்களை வெற்றி பெற வைப்பதல்ல. தங்களுடைய எஜமானர்களான இராணுவ புலனாய்வு பிரிவினரின் நிகழ்ச்சி நிரலின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதும், பேரினவாத கட்சிகளுக்கும், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுக்கும் ஆசனங்களை பெற்றுக்கொடுப்பதாகும்.

வடமாகாணசபை தேர்தலில் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கொழும்பிலிருந்து எதற்காக ஒருவரை இறக்குமதி செய்ய வேண்டும் என வலம்புரி பத்திரிகை பிரசாரம் செய்தது.

அதன் பின்னர் விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையுடன் முரண்பட ஆரம்பித்த போது வலம்புரி பத்திரிகை அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான மோதலை மேலும் தீமூட்டி வளர்த்த சகுனி வேலைகளை வலம்புரியின் ஆசிரியர் விஜயசுந்தரம் செய்தார்.

கடந்த பொதுத்தேர்தல் முடிந்த பின் தேசிய பட்டியல் நியமன உறுப்பினர் பதவி தங்களுக்கு தரவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழரசுக்கட்சி உப தலைவர் சிற்றம்பலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையுடன் முரண்பட்டு நின்றனர்.

விக்னேஸ்வரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு நின்றார். இதனை பொது எதிரிகளாக சிங்கள பேரினவாத சக்திகளும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் மிக சாதுரியமாக வலம்புரி ஆசிரியர் விஜயசுந்தரம் ஊடாக பயன்படுத்தி கொண்டனர்.

பல அரசியல் கட்சிகள், சமய தலைவர்கள், குடிசார் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்துதான் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறினாலும் யார் யார் இணைத்தலைவர்கள், யார் உறுப்பினர்கள் என்பது முதல் அறிக்கை தயாரித்தது, இணைத்தளத்தை உருவாக்கியது ஊடகங்களுக்கு அறிக்கைகளை அனுப்பியது வரை அனைத்தும் வலம்புரி ஆசிரியர் விஜயசுந்தரம் என்ற ஒருவரே செய்துள்ளார். இது பற்றி விக்னேஸ்வரனுக்கோ சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கோ அல்லது இணைத்தலைவர்களாக இருப்பவர்களுக்கோ தெரியாது.

விஜயசுந்தரம் என்பவரின் பின்னால் யார் இருந்தார்கள் அவரை இயக்குவது யார் என்ற உண்மை தெரிந்தால் தமிழ் மக்கள் பேரவை என்பது தமிழ் மக்களின் நலன்சார்ந்ததா என்பதை புரிந்து கொள்ள முடியும்.
(தினக்கதிர்)