பத்தும் பலதும் முற்றும் உண்மை!

(மாதவன் சஞ்சயன்)

கார்த்திகை மாதம் புண்ணியம் தேடி காசிவரை போனேன். செய்த பாவங்கள் கங்கையில் கரைந்திருக்கும் என்ற நிம்மதியில் திரும்பும் வேளை, காலமாற்றம் குளிர் காய்ச்சலை தந்து கை, கால் விரல்களை முடக்கிப் போட்டது. கூட வந்தவர் நாடு திரும்ப, நான் பயணிக்க இயலாமல் வைத்தியம் பார்த்து சில தினங்களின் முன்பே நாடு திரும்பினேன். வகுப்பறைக்கு ஆசான் வரும் வரை பாடம் நடத்தும் மாணவர் போல, என் மாணவனும் நான் நாடு திரும்பாத நிலை அறிந்து குருவை மிஞ்சிய சீடனை போல, பத்திரிகைகளில் தானும் தொடர் கட்டுரைகள் எழுத தொடங்கி விட்டான்.

இணையங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது அவன் தான். அது மட்டுமல்ல எனக்கு ஏற்படும் போராட்ட காலத்தில் இயக்கங்கள் செய்த சம்பவங்கள் பற்றிய சந்தேகங்களை அவனிடம் கேட்டு உறுதி செய்வேன். குரு பக்தியில் தான் அறிந்தவற்றை தெரிந்தவற்றை திகதி, மாதம், வருடம் என அறுதியிட்டு கூறுவான். நட்டாமுட்டியனாய் திரிந்தவனை திருப்பி பல்கலைகழக பாதையை காட்டியவன் நான் என்ற நன்றி அவனுக்கு என்றும் உண்டு. அதனால் மாஸ்டர் நோகாமல் எழுதுங்கள் என்பான். நான் நோக எழுதினால் என்னுடன் நொந்து கொள்வான்.

என் வரவு நிச்சயம் இல்லை என எண்ணினானோ தெரியவில்லை, என் பணியை தொடர தான் எழுத தொடங்கி விட்டான். குறை ஒன்றும் இல்லை. அவன் பணி தொடர வாழ்த்திவிட்டு என் எழுத்தை தொடர முடிவு எடுத்தால், எதில் தொடங்குவது எதைப்பற்றி எழுதுவது என எண்ணும் அளவிற்கு எண்ணற்ற சம்பவங்கள் அரங்கேறி, இன்று வீறுகொண்டு தலைவிரித்து ஆடுகின்றன. நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறியும் செயலும், பாதி தின்கின்ற வேளையில் தட்டிப்பறிக்கும் செயலுக்கு ஒப்பானது என உணராமல், வெட்டி நியாயம் பேசுவோர் செயலும் அவர்களை திட்டித்தீர்க்க சொல்கிறது.

காசி விஸ்வநாதர் சத்தியமாய் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா மீது எனக்கு விசனம் எழுந்துள்ளது. நந்தவனத்தினில் ஓர் ஆண்டி நாள் ஆறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தானடி ஒரு தோண்டி அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி என்ற பழைய கூற்றை மீளவும் நினைவில் கொள்ளும் நிகழ்வை நிகழ்காலத்தில் நிகழ்த்த துணைபோகும் முதல்வர் மீது எனக்கு விசனம், வெறுப்பு ஏற்பட்டது என கூறும் தைரியம் எனக்கு உண்டு. மாகாண சபை தேர்தல் காலத்தில் வாராது வந்த மாமணி என போற்றி புகழ்ந்து அவரை கூட்டிவந்தவர், பின் அவருடன் உள் முரண்பாடு கொண்டபோதும் அவரை காக்கும் அரணாய் இருந்த இளைய உறுப்பினரை போற்றினேன்.

கடந்த பொது தேர்தலின் போது அவர் சற்று தடம் மாறினாலும் முடிவுகள் வந்தபின் மக்கள் மனநிலை அறிந்த முதல்வராய் அவர் செயல்ப்டுவார் என நம்பினேன். பட்டது போதும் இனி எம்மை, எம் இருப்பை காப்பது மட்டுமே தேவை என, முப்பது வருட கோரயுத்த வாழ்வுக்கு முகம் கொடுத்தவர் முடிவெடுத்தனர். அதனால் தான் மக்களை சிதைத்து சின்னா பின்னமாக்கிய பின்பு, தப்பி பிழைத்தவர் அணிக்கு தலைமை தாங்கி வித்தியாதரன் தேர்தல் கேட்ட போது, முன்நாள் போராளிகள் என்று கூட பாராமல் மக்கள் அவர்களை புறக்கணித்தனர். வடக்கு முதல்வர் சூசகமாய் கஜேந்திர குமாரை கை காட்டிய போதும் அவரின் கட்டுப்பணத்தை காப்பாற்ற மட்டும் வாக்களித்து உதவினர்.

படிப்பறிவு நிறையப்பெற்ற முதல்வருக்கு பொதுதேர்தல் முடிவு தந்த பட்டறிவு போதும், இனி மக்கள் மனநிலை அறிந்து அதன்படி செயல்ப்படுவார் என எதிர்பார்த்தால், அவருக்கு அரணாய் இருந்த இளம் உறுப்பினரே அவரை எதிர்த்து செயல்ப்படும் நிலைக்கு தன்னை தாழ்த்தி, பாஞ்சாலியை பணையம் வைத்து சூதாடிய தருமன் போல் சிறிய செயல் செய்தார், தமிழ் மக்கள் பேரவைக்கு தலைமை தாங்கிய முதல்வர் ஐயா. நாம் விரும்பி கூட்டி வந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் வாக்குகள் பெறச்செய்து எம் குறை தீர்க்க முதல்வர் ஆக்கி, கையில் வேலும் தலையில் கிரீடமும் தந்த எமது முள்வேலியில் முடங்கிய மக்களை, கழுமரம் ஏற்ற துணை போகிறார் நீதியரசர் விக்னேஸ்வரன் ஐயா.

நெஞ்சு போடுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரின் செயல் கண்டு, என நொந்து கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும் எம் போன்ற சாமானியரால்? தீதும் நன்றும் பிறர் தர வாரா என நாமே எம் தலையில் மண்வாரி கொட்டிவிட்டோம். வாராது வந்த மாமணி எமக்கு சர்வரோக நிவாரணி என நம்பியது முகாங்களில் முடங்கியவர் மட்டுமல்ல, சுண்ணாக சூழலில் ஏற்பட்ட குடிநீர் மாசு பற்றி தன் கூடவே இருக்கும் சூழலியலாள அமைச்சர் அனுசரணையில், நல்ல தீர்வை தருவார் என எதிர்பார்த்த அப்பகுதி மக்களும் தான். நீரை குடிக்கலாமா கூடாத என கூறவே தயக்கம் காட்டுகிறார் முதல்வர். நிபுணர் குழு அறிக்கையை கையேற்று வாய் பொத்தி மௌனம் சாதிக்கிறார் வினை தீர்க்க வந்த பெருமகன்.

இரு கோடுகள் தத்துவம் தெரிந்தவர் போலும் எங்கள் முதல்வர். இருக்கும் கோட்டுக்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு போட்டு இருந்த கோட்டை சிறியதாக்கும் செயலை போல, ஏற்கனவே உள்ள பிரச்னைக்கு எல்லாம், பேரவை தரும் தீர்வு என தமிழ் மக்கள் பேரவை தலைவராக மாறி, வலம்புரி சங்கை ஊதி குருசேத்திர யுத்தத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். நாளாந்த பிரச்சனைகளை மறந்து மக்கள் அணிகளாய் பிரிந்து அரசியல் பேசி பசியாற வேண்டும் என, பாண் கிடைக்காவிட்டால் என்ன கேக் உண்ணலாம் வாருங்கள் என அழைக்கிறார் எங்கள் வடக்கின் முதலவர். அன்று ஒன்றுபட்டு வந்தால் நான் வருவேன் என கூறி வந்தவரே, இன்று இரண்டு பட்டு போகும் பேரவைக்கு தலைமை தாங்குகிறார்.

இணக்க அரசியலின் ஏக நாயகன் நானே என மார்தட்டும் டக்ளஸ் தேவானந்தா, கூட்டமைப்பு விட்ட தவறே பேரவை உதயம் என தன் பங்கிற்கு முகாரி இசைக்கிறார். வீணை சின்னத்தை வைத்து, இழப்பு வீடுகளில் நெய்…நேய் என சோக கீதம் இசைப்பது போல, கடந்த காலங்களை பற்றி பேசியே அறுவை பேட்டி அளிக்கிறார். எதை கேட்டாலும் பொன்னான வாய்ப்பு என இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பற்றி பேசுவதும், அதை நிறைவேற்ற முயன்றவர் பற்றி தூற்ருவதும் என குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறார். ஒரு பொன்னான வாய்ப்பு மண்ணாகி போனதாக கூறுபவர் மகேஸ்வரி நிதியம் நினைவில் (சோகத்தில்) இன்னமும் இருக்கிறார் போல் தெரிகிறது.

முப்பது வருடங்களுக்கு முன்பு முருகண்டி அடுப்புக்கு என் நேரமும் விறகு வேண்டும். அதுபோல் சுரேஸ் பிரேமசந்திரனுக்கு எப்போதும் பதவி வேண்டும். உண்டது செரிமானம் அடைய சந்திப்புகள் தேவை என்பதால், இப்போது அடிக்கடி பத்திரிகையாளர் மாநாடு நடத்தி வதந்திகள், புரளிகள், புலம்பல், என தன்னை தலைப்பு செய்தியாக மாற்றி வருகிறார். தேர்தல் தோல்வி பற்றி அலசி ஆராய்பவர் தன் கடந்த கால தவறுகளை மூடி மறைக்க முயல்கிறார். முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விடயங்களை கூறி, தன்னை விமர்சிப்பதாக கூறும் சுரேஸ் ஹிட்லரின் தளபதிகள் 1948 ல் செய்த மனித படுகொலைக்கு அண்மைக்காலத்தில் பெற்ற தண்டனையை அறிய மாட்டாரா?

ஆயுதங்களின் ஆட்சியில் அராஜகங்கள் நடந்தது உண்மை. அதை தோண்டி தம் பல் குற்றி தாமே மணக்கும் நிலை அபத்தம். ஆனால் அதை ஆரம்பித்து வைத்தவர் சுரேஸ் தான். இராணுவத்துடன் சேர்ந்து டக்களஸ் செய்த செயல் என, இவர் எறிந்த கல்லை எடுத்து வைத்திருந்தவர் தருணம் பார்த்து, தமிழ் மக்கள் பேரவையில் பேராசிரியர் சிற்றம்பலத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, முந்திரி கொட்டை போல் முந்திக்கொண்டு சுரேஸ் கூறிய பதில், நிருபர்களை மட்டுமல்ல, அதை பின்பு வாசித்து அறிந்த அவர்களையும் சீற்றம் கொள்ள செய்ததால், கையில் இருந்த கற்களை சுரேஸ் மண்டையை நோக்கி வீசி, அவருக்கு மண்டையன் என வந்த காரணப் பெயர் பற்றி பொழிப்புரையும் எழுதினர்.

நாம் விதைத்ததை தான் அறுக்க முடியும். கீரை விதையில் சுரக்காய் முளைக்காது. அடி நொச்சி என்றால் நுனி ஆமணக்கு ஆகாது. நெல்மணி உமி, அரிசி என பிரிந்த பின் விதை நெல் ஆகாது. பிரிந்த உமி சாம்பலாகும், அரிசி சாதம் ஆகும். விதை நெல் மணியாய் இருக்கும் வரை தான் மீண்டும் விதைக்கபட்டு முளைவிட்டு வளர்ந்து, பல நெல் மணிகளாய் மாற முடியும். மாறாக ஆலையில் அவித்து உமி, அரிசி என பிரிக்கப்பட்ட பின், விதை நெல் எனும் வீரியம் போய்விடும். தரத்தின் பாற்பட்டே விதை நெல் சேமிக்கப்படும். கடந்த தேர்தலில் தோற்றவர் விதை நெல் அல்ல, பதர் கலந்ததால் உமி நீக்கி அரிசியாக வேண்டியவர் என்பதை தீர்மானித்தது வாக்களர். அதை ஏற்க மறுத்தவர் உருவாக்கியதே தமிழ் மக்கள் பேரவை.

– மாதவன் சஞ்சயன் –