அனைவரும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இங்கு நிறைய உண்டு -VRP

இலங்கையில் செய்யப்பட்ட முதல் தரப் போராட்டம்

இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் வெகு காலத்திற்குப் பிறகு இலங்கையின் தலை நகரில் நடந்த தூய எழுச்சியாகும்.

அரசியல் கட்சிகளின் பின்புலமில்லை, ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சார முறைமையில்லை, வாகனங்களில் மக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை, மது வழங்கி சனக்கூட்டம் திரட்டப்படவில்லை, உணவுப் பொதிகள் கைகளிலும்- “சந்தோசம்” சட்டைப் பைகளிலும் திணிக்கப்படவில்லை, கவர்ச்சிகரமான தலைவர்களில்லை, மேடையில்லை, அலறும் ஓலிபெருக்கியில்லை, ஆட்டமில்லை, பாட்டு இல்லை, நட்சத்திரப் பட்டாளத்தின் மேக்கப் முகங்களில்லை. கருப்புச் சட்டை எனும் முற்போக்கு அடையாளமும் , கனத்த மனங்களும் தைரியமான நெஞ்சுகளும் மட்டுமே இருந்தன.மக்கள் அலையெனத் திரண்டனர். இந்தத் திரட்சி கூடிக் கலைந்த நிகழ்ச்சியாக அமையாது காக்கப்படவேண்டும். ஒரு அழைப்பில் மீண்டும் திரளும் பலம் கட்டியெழுப்பப்படல் வேண்டும். பல நூற்றுக்கணக்கான குழுக்களாக கூட்டம் நிலை எடுத்திருந்ததை கவனிக்க முடிந்தது. “ஒரே நோக்கு- ஓரணிப் போக்கு” என்ற வகைக்கு இந்தப் போராட்டம் திராணி பெறுவதற்கு ஏற்பாடு செய்த இளைஞர்கள் குழுக்கள் தொடர்புகளைப் பேணுவதும் கூடிப் பேசுவதும் நடைபெறல் வேண்டும். பெண்களின் பங்கு பற்றுதல் மிக்குறைவாக இருந்தது. இனிவரும் காலங்களில் பெண் ஏற்பாட்டாளர்களை தயார் செய்வதும் அதிக பெண்களைப் பங்குபற்றச் செய்வதும் முக்கியமாகும்.

பங்குகொண்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் வாழ்த்துக்கள், உங்கள் போராட்டம் வெற்றி பெற்று தொழிலாளர்களுக்கு 1000/- நாளாந்தச் சம்பளம் கிடைக்கவேண்டும்,கிடைக்கும் என்று நம்புவோம்.