சி.வி.விக்னேஸ்வரன் கூடா நட்பு – சம்பந்தன்!

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கைகளில் வடமாகாணசபை முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் சிக்கி இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அபேட்சகராகவும், தமிழரசுக் கட்சியின் முதலமைச்சருக்கான வேட்பாளராகவும் போட்டியிட்டவர் விக்கினேஸ்வரன்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்று அவர் செயற்பட்டார். விஞ்ஞாபனத்தின் ஊடாக சொல்லப்பட்ட எமது கொள்கைகளுக்காகவே மக்கள் அவருக்கு வாக்களித்திருந்தனர். அக்கொள்கைகளுக்கு அவர் என்றும் கட்டுப்பட்டவர். தேசியப் பிரச்சனைக்கான தீர்வொன்றை எட்டும்வகையில், அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படப்போகும் சூழ்நிலை இப்போது நிலவுகிறது.

நாம் எல்லோரினதும் கருத்துக்களைப் பெற இன்று காத்திருக்கிறோம். இவ்வேளையில், துரதிஸ்டவசமாக மக்களால் மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்டவர்களின் கைகளில் விக்னேஸ்வரன் சிக்கி இருக்கிறார். விட்டுக் கொடுக்காத அல்லது ஏற்புடைமை அற்ற கருத்துக்களை முன்வைப்பது இச்சூழலுக்கு எந்த வகையிலும் உதவாது.

அத்தகைய கருத்துடையவர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசியலமைப்பு மாற்றம் என்பது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெற்று நிறைவேற்ற ப்படவேண்டியது. தவிரவும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பிலும் அது வெற்றி பெற வேண்டும்.

அத்தகைய சூழலில் பெரும்பான்மையினரின் ஒப்புதலையும் பெறக்கூடிய முடிவுகளை முன்வைப்பதே பொருத்தமானது என்று சம்பந்தன் சுட்டிக் காட்டி உள்ளார். மட்டக்களப்புக் கூட்டமொன்றில், தேவைப்பட்டால் எனது தலைமைப் பதவியை இழக்கவும் தயார் என்று கூறியிருந்தீர்களே அது இப்போதும் பொருந்துகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இரா.சம்பந்தன்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, என்னை தலைமைப் பதவியை ஏற்கவேண்டும் என விரும்பியதால் நான் தேர்வானேன், மக்களும் அதை ஏற்றார்கள் என்று கூறினார். அதேவேளை யாராவது அப்பதவியை எட்ட விரும்பினால், அதையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டால் பதவி விலகத் தயாராய் இருப்பதாகவும் பதில் அளித்தார்.

நீங்கள் பதவியை விட்டு விலகினால் இன்றிருக்க கூடிய த.தே.கூவிற்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான சாத்தியமான உறவு சிதைவுறும் என்று அஞ்சுகிறீர்களா என்ற கேள்விக்கான தனது பதிலில், ‘முடிவுகளை எடுப்பது மக்களின் கையில் இருக்கிறது. சரியான ஒரு தீர்வுக்காக மக்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பு எனக்குரியது. ஆனால் முடிவு எடுப்பதோ மக்கள் கையில்தான் இருக்கிறது. சரியான தீர்வுக்காக மக்களை நான் நெறிப் படுத்துகிறேன், அதேவேளை தமக்கான முடிவுகளை அல்லது தீர்மானங்களை எடுக்க வேண்டியவர்கள் மக்களே’ என்று தெரிவித்துள்ளார்.