நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு, நாளை (14) காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர், ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேனவால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, நாளை (14) ஆம் திகதி வரையிலும், கடந்த 27ஆம் திகதியன்று ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அவர், கடந்த வெள்ளிக்கிழமை (9) நாடாளுமன்றத் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை, இன்று (13) பிறப்பித்தது.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 07ஆம் திகதி வரை, இந்த இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்குமெனவும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் இரத்துச் செய்யப்படுமெனவும், பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமால், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் 4ஆம் திகதி விடுத்த 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, நாடாளுமன்றம் கூடும் என்று,, அவரது ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.