மின்னல் ரங்காவின் கள்ள தொடர்புகள் அம்பலம்

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் கை கட்டி, வாய் பொத்தி நின்றார்களே ஒழிய தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக் கொடுத்து இருக்கவில்லை என்று சக்தி ரி. வியின் மின்னல் நிகழ்ச்சி மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றார் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா. குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மஹிந்தவின் தமிழ் அமைச்சர்கள் உருப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கவில்லை என்று இவர் பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகின்றார். ஆனால் மற்றவர்களை விமர்சனம் செய்கின்றமைக்கு முன்பாக ஸ்ரீரங்கா சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியவர் ரங்கா. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு மிக நெருக்கமானவராக காணப்பட்டார்.

இதனால்தான் மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் இருந்த காலத்தை விட ஸ்ரீரங்கா அலரி மாளிகையில் இருந்த காலம் மிக அதிகம் என்று சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நக்கல் அடிக்கின்றமை வழக்கமாக இருந்தது.

ஸ்ரீரங்காவின் திருமணத்துக்கு சாட்சிக் கையொப்பம் இட்டவர் யார் தெரியுமா? சாட்சாத் மஹிந்த ராஜபக்ஸதான். அப்போது இடம்பெற்ற ஒரு சம்பவம் மிகவும் சுவாரஷியம் ஆனது. மஹிந்த ராஜபக்ஸ மறிக்க மறிக்க திருமண ஒப்பந்த பிரகடனத்தை சிங்களத்தில் வாசித்து முடித்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் ரங்கா.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டு இருந்த 500 சொகுசு வாகனங்களில் 03 வாகனங்கள் அலரி மாளிகையால் ரங்கா எம். பிக்கு வழங்கப்பட்டு இருந்தன. இப்புள்ளிவிபரத்தை ஜே. வி. பி எம். பிகள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள். கான்செட்டிலும் இது பதிவானது.

மஹிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணங்கள் பலவற்றின் போது ஸ்ரீரங்காவும், நாமல் ராஜபக்ஸவும் உடன் சென்றும் உள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸவுக்கு மாத்திரம் அன்றி நாமல் ராஜபக்ஸவுக்கும், ராஜபக்ஸ குடும்பத்துக்கும் மிக வேண்டியவராக இவர் காணப்பட்டார். இதனால்தான் ரிசாத் பதியுதீன் மின்னல் ரங்காவின் கன்னத்தில் பளார் விட பதிலுக்கு ரிசாத் மீது தாக்குதல் நடத்தினார் நாமல். நாமலின் நாளைய இளைஞர் அமைப்பிலும் ரங்கா முக்கிய பிரமுகர்.

மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டுப் பிள்ளையாக ரங்கா விளங்கினார். ஒவ்வொரு அரசாங்கத்திலும் இரு அமைச்சரவை காணப்படும். ஒன்று வெளிப்படையாக தெரிகின்ற அமைச்சரவை. மற்றையது கிச்சின் கபினெட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் கிச்சின் அமைச்சரவையில்தான் எடுக்கப்படுவது வழக்கம்.

மஹிந்த ராஜபக்ஸவின் கிச்சின் அமைச்சரவையில் ரங்கா ஒரு முக்கிய அமைச்சராக இருந்தார். கிச்சின் அமைச்சராக இருந்துதான் ஏராளம் சலுகைகளை பெற்றுக் கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஸவின் அமைச்சரவை அமைச்சர்களாக இருந்த தமிழ் அமைச்சர்கள் செய்யத் தவறிய விடயங்களை கிச்சின் அமைச்சர் ரங்கா நிச்சயம் செய்து கொடுத்து இருக்கலாமே? அப்போது பேசாமடந்தையாக இருந்து விட்டு இப்போது இவர் மற்றவர்களை பேசித் திரிவது எவ்வகையில் நியாயம் என்று அரசியல் அவதானிகள் வினவுகின்றார்கள்.