இலங்கை: கொரனா செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார். இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 25,886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றையதினம் 1,000 பேருக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் இன்று (08) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இந்த கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. பிரதேச செயலக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், உள்ளூராட்சிமன்ற ஊழியாகளுக்கு இன்றைய தினம் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தில் அரச அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் 6,000 பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதென, மாத்தளை மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய,தம்புளை மாநகர சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட  1068 பேருக்கும் மாத்தளை மாநகர சபை அதிகாரிகள் 718 பேர் உள்ளிட்ட 1,470 பேருக்கும் யட்டவத்தையில் 400 பேர், பல்லேபொலவில் 388 பேர், கலேவலயில் 516, நாவுலவில் 435 பேர், லக்கலையில் 306, வில்கமுவையில் 340, இரத்தோட்டையில் 405> அம்பகங்கோரலையில் 208 அதிகாரிகள், உக்குவளையில் 472 அதிகாரிகளுக்கும் முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 47 ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.