இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், 14ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார். அந்த பயணக்கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கு எவ்வகையான தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார். தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,057 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமல் சென்ற நபரிடம் விசாரணையில் ஈடுபட்ட போது பொது சுகாதார பரிசோதகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார். 25 வயதுடைய இளைஞனே பொது சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பின் மேல் தளத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி ஒன்றுகூடியதுடன், விருந்துபசாரத்தை நடத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியாவை விட மோசமான நிலையை நோக்கி இலங்கைப் பயணித்துக்கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் சனத்தொகையின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோர், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, கொரோனா வைரஸ் நிலைமைகளால் இந்தியா முகங்கொடுத்துவரும் நிலைமைகளைத் விட, மோசமான நிலைமையை நோக்கி இலங்கை பயணிப்பதாகவும் அச்சங்கத்தின் துணை தலைவர் வைத்தியர் நவீன் சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் செல்லும் வாகனங்களைப் பார்க்கும்போது, நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதைப்போல இல்லை எனவும் தெரிவிக்கும் அவர், பயணக்கட்டுப்பாடுகளை மீறும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமக்கு ஆதரவான ஒருவர் உயிரிழப்பார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.