இன்று தோழர் – கோவிந்தர்- பொன்னுத்துரை அவர்களின் 10 வது நினைவு தினம்

வாசனை அவரின் பொழுதுபோக்கு. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இலங்கையில் பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றியவர். அந்த இராணுவ மிடுக்கான நடையும் ஒழுங்கும் அவரின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.

இளமையில் இவர் செய்த நற்செய்கைகள் இன்று வரையில் யாராலும் உடைக்கப்படவில்லை. யாழ் பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் 29 முறைகள் இரத்த தானம் செய்துள்ளார். இவரை கௌரவிக்கும் முகமாக இவரது படம் இரத்த வங்கியில் தொங்க விடப்பட்டிருந்தது. இதை இன்றைய சமூகம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

இவர் இடது சாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு செயலா ற்றியவர் .பின் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். யாழில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழரசுக்கட்சி உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது கூட்டம் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் வீதியில் கூட்டப்பட்டது. அதை ஜி.ஜி. பொன்னம்பலத்தின் கைக்கூலிகள் அடித்து கலைத்தார்கள். அந்த இடத்திலிருந்து ஓடிக்கொண்டிருந்த ஈ.எம்.வி நாகநாதனை வழி மறித்து தோழர்கள் இராமசாமிஐயர், பொன்னுத்துரை செல்வராஜா, இராசையா ஆகியோர் கூட்டத்தை நடத்துங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகின்றோம் என கூட்டத்தை மீண்டும் நடத்திவிட்டார்கள்.

அத்தகைய அளவுக்கு பலம் வாய்ந்த கட்சிக் கட்டுப்பாட்டை நல்லூரில் கொண்டிருந்தவர்கள். பூபாலசிங்கம் புத்தக நிலைய ஸ்தாபனத்தின் வெளியீடான “வடபுலத்து இடதுசாரி முன்னோடிகள்” என்ற நூலில் இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

தினம் மாலை நேரத்தில் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள கட்சிக்கட்டுப்பாட்டில் இருந்து வாசிகசாலையடியில் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் கூடுவார்கள். இதில் தோழர் பொன்னுதுரை அவர்கள் கலந்து கொள்ளாத நாட்கள் இல்லை என்று கூறலாம்.

குறிப்பாக மறைந்த தோழர்கள் சுபத்திரன், புதுவை இரத்தினதுரை, கந்தசாமி ,குருமூர்த்தி, கௌரிகாந்தன், குமார் தனபால், நாகேந்திரம்,ஜெகநாதன் என நீண்ட பட்டியல் தொடர்ந்து கொண்டே போகும் .

இன்று அதில் எஞ்சி இருக்கும் தோழர்கள் குமாரசாமி குலேந்திரதாசன், நாதன், குருசாமி மற்றும் நான் (ஜெயபாலன்)நாட்டு நடப்பு, உலக நடப்பு, இலக்கியம் என பல் துறையையும் சிலாகித்து செல்வோம்.

தோழர் பொன்னுத்துரை அவர்களை 26 வருடங்களின் பின் 2012 இல் இறுதியாகச் சந்தித்தேன். ஆரத்தழுவி அரவணைத்தவர். இருவரின் கண்ணீருடன் விடைபெற்றேன். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு முன்னோடி மனிதர் இவர். அவரின் நினைவு என்றும் என்னுடன் இருந்து கொண்டே இருக்கும்.

தோழமையுடன்

நல்லதம்பி -ஜெயபாலன்