இலங்கை இந்திய ஒப்பந்தம்: 13 வது திருத்தச் சட்டம்… மாகாண சபைச் சட்டம்

  1. 1986ம் ஆண்டில் இந்திய மற்றும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவாத்தைகளின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைந்த ஒரே மாகாண நிர்வாகமாக அமைக்கப்படுதல் வேண்டும். மாகாண சபை செயற்படத் தொடங்கி ஓராண்டுக்குள் கிழக்கு மாகாணத்தில் ஓர் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இணைந்த மாகாணங்கள் தொடர்ந்து இணைந்திருப்பதா அல்லது தனித்தனியாவதா என்பது தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

இவை தொடர்பாக இந்திய அரசாங்கம் அப்போது சில எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்ததையும் நாம் புரிந்து கொள்ள முடியும்:

ஒன்று – புலிகளும் இந்தியாவின் முன்முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள்,

இரண்டு – ஓராண்டுக்குள் சமாதானமான நிலைமை ஏற்பட்டு பூரணமாக ஜனநாயகரீதியான சூழல் ஏற்பட்டு விடும்

மூன்று – உள்நாட்டிலும் இந்தியாவிலும் அகதிகளாகிப் போயிருந்த மக்கள் மீண்டும் அவரவரது சொந்த இடங்களில் குடியேறிவிடுவார்கள்:

நான்கு – அந்த ஓராண்டுக்குள் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியற் தலைவர்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு விடும்.

எதிர்பார்க்கப்பட்ட இவையெதுவும் நடக்கவில்லை.

புலிகளின் அரசியற் பலவீனங்களைப் பயன்படுத்தி ஜெயவர்த்தனா தனது அரசியற் காய்களை நகர்த்தி புலிகளைக் கொண்டே தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் இலங்கை அரசிடமிருந்து இந்தியா எதிர்பார்த்தவற்றைப் பொய்யாக்கிவிட்டார்.

சிங்களத் தலைவர்களை நம்ப முடியாது என்று சொல்லிக் கொண்டே சிங்கள இனவாதத் தலைவர்களுக்கு துணையாகச் செயற்பட்டு தமிழர்களின் போராட்டத்தை பின்தள்ளிவிட்டதுதான் பிரபாகரன் செய்த சாதனை.

ஜெயவர்த்தனா தானே தனிப்பட்டரீதியில் முன்னின்று தனது சட்ட ஆலோசகர்கள் சட்ட வரைவாளர்களைக் கொண்டு காதும் காதும் வைத்தது போல இரவோடிரவாக சில இரவுகளிலேயே 13வது திருத்தத்தை வரைந்து முடித்தார்.

அதனை ஒரேநாளிலேயே நாடாளுமன்றத்தில் சட்டமாக்கினார். 13வது திருத்தம் பார்வையில் இந்திய அரசியலமைப்பில் மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தது போலவே வடிவமைக்கப்பட்டது.

13வது திருத்தம் தொடர்பாக திருப்தியற்ற இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி

13வது திருத்தம் தொடர்பாக திருப்தியற்ற இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் ஜெயவர்த்தனா தந்திரமாக எதற்கும் ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டார்.

அந்த நேரத்தில் புலிகள் இந்தியப் படைகளுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு இந்திய அரசாங்கத்தை இந்திய அளவிலும் சர்வதேச ரீதியிலும் சங்கடத்தில் ஆக்கி வைத்திருந்தது.

இது வரலாறு.

எனவே 13வது திருத்தம் சட்டமாக ஆக்கப்பட முன்னர் இந்தியாவின் பார்வைக்கு காட்டப்படவுமில்லை.

அதனை இறுதியாக ஆக்குவதில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்போ அல்லது ஆலோசனையோ பெறப்படவுமில்லை.

உச்சநீதி மன்றத்திலும் உரசிப் பார்க்க வேண்டும்

13வது திருத்தம் இதுவரை காலமும் சட்டரீதியில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லையா?

அப்படியானால் எவையெவை நிறைவேற்றப்படவில்லை?

அல்லது நிறைவேற்றப்பட்டுள்ளவைகள் குறைபாடான முறைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?

அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு விடயங்களை முழுமையாக நிறைவேற்றுதல் அல்லது அரைகுறையாக நிறைவேற்றுதல் என மேற்கொள்ளமுடியுமா?

அரசியல் யாப்பானது வெளிப்படையாக சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ள போது அந்த அதிகாரங்களை யாராவது யாருக்காவது கொடுத்தல் அல்லது கொடுக்க மறுத்தல் என விடயங்கள் உள்ளனவா?

அரசியல் யாப்புபூர்வமாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசு தரமாட்டேன் என்று மறுக்க முடியுமா?

அப்படி மறுக்கப்படுகின்ற விடயங்களுக்கு தீர்வுதர வேண்டியது ஜனாதிபதியா? மத்திய அமைச்சரவையா? நாடாளுமன்றமா? அல்லது உச்சநீதிமன்றமா?

போன்ற கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளேயே எழுப்பி விடைகளைத் தேடுவது ஓர் அதிகாரப் பகிர்வு முறையைப் பற்றிய பொது அறிவைப் பெறுவதற்கும், 13வது திருத்தத்தைப் புரிந்து கொள்வதற்கும் அவசியமாகும்.

உச்சநீதிமன்றமே அரசியல் யாப்பின் காவலன்

இந்தியாவில் உள்ளது போல இலங்கையிலும் உச்சநீதிமன்றமே அரசியல் யாப்பின் காவலன் – அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள நீதி நியாயங்களை நிலைநிறுத்த வேண்டிய கடமையாளன். மத்திய மற்றும் மாகாண ஆட்சி அமைப்புக்களுக்கிடையில் அதிகாரம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் வரும்போது தீர்த்து வைக்கும் வல்லாண்மை உச்சநீதிமன்றத்துக்கே உண்டு.

13வது திருத்தத்தின் உண்மையான அதிகாரப் பகிர்வின் தன்மைகளையும் உண்மைகளையும்  உச்ச நீதிமன்றத்திலேயே பரிசோதித்துப் பார்த்தல் வேண்டும்.

மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு குறித்த சிக்கல் ஏதும் ஏற்படுமாயின் அந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசோ அல்லது மாகாண அரசோதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்.

அப்படியானால், இப்போதுள்ள எந்த மாகாண முதலமைச்சராவது 13வது திருத்தத்தின்படி நிறைவேற்றப்படாதவற்றை நிறைவேற்றும்படி கேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கும் நிலையில் உள்ளாரா?;

கிழக்கு மாகாணம் உட்பட எல்லா மாகாண ஆட்சிகளும் மத்திய ஆட்சியாளரின் சார்பான ஆட்சிகளாக இருக்கும் நிலையில் யார் அவ்வாறான வழக்கைத் தொடுக்க முன்வருவார்கள்?;

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கப்பட்டு சில வாரங்களில் அனைத்து மாகாண முதலமைச்சர்களின் மாநாடு செயற்பட ஆரம்பித்தது. மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதிய அளவு பகிரப்படவேண்டும் என்ற குரல் எழுந்தது.

ஆனால் ஏதோ காரணத்தால் அந்தக் குரல் எழும்பிய அதே வேகத்திலேயே அடங்கிப் போய்விட்டது. அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒரு வழக்கை ஏதாவது ஒரு பொது நிறுவனமோ அல்லது ஒரு நபரோ பொது நலன் சம்பந்தப்பட்ட வழக்கு என உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கலாமா என ஆராய்ந்து அதற்கேற்றபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவையெல்லாம் செய்யும் அக்கறையும் போக்கும் அரசியல் சக்திகள் மத்தியில் நிலவினால் தான் அதிகாரப் பகிர்வு பற்றிய ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும்.

அது 13வது திருத்தம் பற்றிய தெளிவான நிலைமைகளை வெளிக்கொண்டுவர அவசியமாகும். சிங்களப் பேரினவாத சக்திகள் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதிலும் அதிகாரப்பகிர்வுக்கு எதிராகவும் உச்சநீதி மன்றத்தைப் பயன்படுத்துவதில் கொண்டிருக்கும் அக்கறையும் ஈடுபாடும் தமிழர் பிர தி நிதிகளிடமோ, ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமோ காணப்படவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.     

தவறு 13வது திருத்தத்துக்கு உள்ளேயே இருக்கிறது

அரசியல் யாப்பின் 13வது திருத்தம் அதிகாரப் பகிர்வு விடயத்தில் சரியாக அமையாத – அமைக்கப்படாத ஒரு சட்டமே.

எனது இக்கூற்றில் உள்ளடங்கியுள்ள அர்த்தங்களை பின்வருமாறு காணுங்கள்;-

  • மிகப் பெரிய அளவில் மத்திய அரசுக்கு வசதியாக விளக்கம் கொள்ளக் கூடிய வகையில் வசன அமைப்புக்கள் உள்ளன. நிதி அதிகாரம், நிதி வளங்களின் பகிர்வு, நிர்வாக உறவுகள், நிர்வாக வளங்களின் பகிர்வு, மற்றும் நிலத்தின் மீதான அதிகாரங்கள் போன்ற விடயங்களில் குழப்பமான வாக்கிய அமைப்புகளையே கொண்டுள்ளது.
  • மாகாண சபைகள் நிதிவளத்துக்கு மத்திய ஆட்சியாளர்களின் தயவில் தங்கியிருப்பதால் அதிகாரப் பகிர்வின் மூன்றாவது நிரலிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும் நடைமுறையில் மத்திய அரசின் நிறைவேற்றதிகாரத்துக்கு உட்பட்டவையாகவே உள்ளன. அத்துடன் மாகாணங்களுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நிறைவேற்றுவதற்குக் கூட மாகாண ஆட்சிகளுக்குரிய நிதிஆதாரங்கள் போதியதற்றவையாகவே உள்ளன.
  • மாகாண அதிகாரத்துக்கு உட்பட்ட விடயங்களிலும் நான்காந்தர ஊழியர்களைத் தவிர ஏனைய அனைத்து வேலை நியமனங்களிலும் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகாரம் செலுத்தும் விதமாக சட்ட ஓட்டைகளைக் கொண்டதாகவே 13வது திருத்தம் அமைந்துள்ளது. நான்காந்தர ஊழியர்களை நியமிப்பதிலும் ஆளுநரே அதிகாரம் உள்ளவராக ஆக்கப்பட்டிருக்கிறார்.  
  • 13வது திருத்தத்தில் பொலிஸ், சட்டம் – ஒழுங்கு என்ற தலையங்கத்தில் விடயங்கள் அதிகாரப் பகிர்வு நிரலிலும் பின்னிணைப்பிலும் நீளமாக சொல்லப்பட்டிருந்தாலும் சாராம்சத்தில் அவை தொடர்பாக அதிகாரங்கள் எதுவும் அர்த்தமுடையவையாக வழங்கப்படவில்லை.
  • மத்திய அரசுக்கான நிரலிலுள்ள விடயங்களுக்கு மட்டுல்லாது மாகாண நிரலிலுள்ள விடயங்களுக்கும் பொதுநிரலிலுள்ள விடயங்களுக்கும் மத்தியில் அமைச்சுக்களும் அமைச்சர்களும் இருப்பதனால் நிதி முழுவதுவும் அங்கேயே பகிரப்படுகிறது. இதனால் மாகாண அமைச்சுக்கள் பெயரளவில் இருந்து கொண்டு ஈயோட்ட வேண்டியவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன.
  • பிரேமதாசா ஜனபதிபதியாகி சில காலம் வரை, அரசாங்க அதிபர்களைத் தவிர ஏனைய பொது நிர்வாக அதிகாரிகள் மாகாண ஆட்சிகளுக்கு உட்பட்டவர்களென இருந்தது. ஆனால் பின்னர் அதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டது. ஆளணிகளின் பகிர்வு தொடர்பாக 13வது திருத்தம் மௌனமாக இருக்கிறது. அது மத்திய அரசுக்கு அதிகாரங்களை ஆக்கிரமிப்பதற்கு மிகவும் வசதியாக உள்ளது.
  • மாகாண ஆளுநர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரி;களின்; உத்தியோக பூர்வ தராதரங்கள் என்ன என்பது தெளிவாக நிர்ணயிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஒருவரை விட மாகாண அமைச்சர் ஒருவர் குறைந்த அரச தரமுடையவராகவே நடத்தப்படுகிறார். ஒரு மத்திய அமைச்சரையும் விட உயர்ந்த தரநிலை கொண்ட ஆளுநர் பதவிக்கு பதவியிலிருக்கும் மத்திய அரச நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் மாகாண சபை அமைப்பு முறையைத் தரக் குறைவாக்கும் விடயங்களாக உள்ளன.

இங்ஙனம்

உங்கள் அன்புத் தோழன் – நண்பன்

அ. வரதராஜா பெருமாள்