இலங்கை விடயத்தில் சீனா

ஆனால் சீனாவைக் குறித்த எச்சரிக்கை உணர்வும் வெறுப்பும் பெருந்திரளான தமிழ் மக்களுக்கு எப்போதுமே இருக்கிறது. இதற்குக் காரணம், தமிழர்களில் பெருந்திரளானோர் எப்பொழுதும் மேற்குச் சாய்வானோராக இருப்பதுவே. பிரிட்டிஸ், அமெரிக்க ஈடுபாடு அவர்களை அறியாமலே உள்ளுணர்வில் ஊறிய ஒன்று. மேலும் “அவர்கள் (தமிழர்கள்) சரி, பிழைகளைப் பற்றி ஆராய்வதே இல்லை. இதற்குக் காரணம், அவர்களிற் பெருந்திரளினர் எப்போதும் வலதுசாரிச் சிந்தனையுடையோர்.

இதனால்தான் அவர்கள் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் தமக்கான தலைமையை தெரிவு செய்து வருகின்றனர். இதனாலேயே இலங்கையில் கூட அவர்களுக்கு மற்ற எந்தத் தரப்பையும் விட ஐ.தே.கவுடன் ஒரு மென் ஈடுபாடு எப்போதும் இருப்பதுண்டு.
மேலும் “தமிழர்கள் அரசியலில் எப்போதுமே செயல் திறன் உள்ளவர்களாக இருந்ததில்லை. சுய பெருமை பிறிட்டீஷர் காலத்தில் தாம் அனுபவித்த செல்வாக்கு தம் திறமையால் மட்டுமே என்ற எண்ணத்தில் மற்றவரை தாழ்வாக நினைப்பது, யதார்த்தத்தை உணராதது இவை எல்லாம் சேர்த்தே முன்பிருந்த சிறிய பேரம் பேசும் சக்தியையும் இழந்து நிற்கிறோம்.

இதற்கும் மேலாக பழம் பெருமை பேசுவதால் பழைய சமூக வாழ்க்கை முறைகளையும் மாற்ற முயலுவதில்லை. அவர்கள் மூளையும், உணர்வும் சுய தேவை மட்டுமே நோக்கி சிந்திக்கும்.” என நண்பர்
Villa Anandaram சொல்வதையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படியான பின்புலச் சூழலில் சீனாவைக் குறித்து இவர்கள் அச்சமடைவதும் எதிர்ப்புணர்வுடன் பேசுவதும் புதியதல்ல. ஆச்சரியமூட்டக் கூடிய ஒன்றுமல்ல.

ஆனால், தமிழர்களுடைய இனப்பிரச்சினை விவகாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சீனா செலுத்திய – செலுத்திக் கொண்டிருக்கும் இடையீடுகளை விடவும் இந்தியாவும் மேற்குலகமும் செலுத்தும் தாக்கமும் தொடரும் இடையீடுகளும் அதிகம்.
அத்துடன் பாதகமானவையுமாகும். இதைப்பற்றி இங்கே மீளச் சொல்வது சலிப்பூட்டக் கூடியது. ஆனாலும் ஓரிரு வார்த்தைகளில் அதைச் சொல்லிச் செல்ல வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா தலையிட்ட அளவுக்கும் தமிழ்த்தரப்பு நம்பிய அளவுக்கும் (இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் அளவுக்கும்) அது முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.

அதனால் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையே இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. மேற்குலகமோ தமிழர்களின் போராட்டத்தையும் அதன் தாற்பரியத்தையும் புரிந்து கொள்வதாகவும் அங்கீகரிப்பதாகவும் காண்பித்துக் கொண்டே அதனை அழிக்கும் எதிர்மறைப் பாத்திரத்தையே வகித்தது. இன்னும் அப்படியே வகித்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இறுதிப்போரின்போது மக்கள் கொல்லப்படுவதையெல்லாம் நன்றாக அறிந்து கொண்டே அதைத் தடுப்பதற்கு முயற்சிக்காமல் இருந்து விட்டு, நடத்தப்பட்டது கொலை எனவும் அதற்கு விசாரணை எனவும் இன்று குரல் எழுப்பிக் கூறுகிறது.
இது இலங்கை அரசைத் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வருவதற்காக விட்டுக் கொடுத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு பொறியாகும். இது வெளியே காண்பிப்பது ஒன்று. உள்ளே (மறைவாக) செயற்படுவது இன்னொன்று என்பதாகும். இந்த எளிய உண்மைகளை விளங்கிக் கொள்வதொன்றும் கடினமானதல்ல.

(அரங்கம் இணையப் பத்திரிகையில் வெளியாகவுள்ள கட்டுரையிலிருந்து)

(Karunakaran Sivarasa)