ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?

அதிலும் இலங்கையில் பௌத்தமதத்திற்கும் (70.2%) இந்துமதத்திற்கும் (12.6%) அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலேயே இஸ்லாம் (9.7%) இருப்பதால், முதலிரு இடங்களிலுள்ள மதங்களை மீறி இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்களை சுலபமாகப் பரப்பவும் முடியாது. அதற்காக, இலகுவாகத் தகவல்களைப் பரிமாற்றங் செய்யக்கூடிய இன்றைய உலகில், இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களில் சொற்ப அளவிலானோரை அடிப்படைவாதக் கருத்துக்களின்பால் ஈர்க்கப்படுவதைத் தடுத்துவிடவும் முடியாது.

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்கள் நடந்து ஏறத்தாள 48 மணி நேரங்களின் பின்னரே ஐ.எஸ். அமைப்பு தாக்குதல்களுக்கு உரிமை கோரியது. இது இலங்கையில் மாத்திரமன்றி உலகெங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எனினும் உரிமை கோருவதற்கு ஐ.எஸ் ஏன் 48 மணிநேரங்களை எடுத்துக் கொண்டார்களென்ற கேள்வியும் எழுந்தது. ஐ.எஸ். இலங்கையில் ஊடுருவிவிட்டதாக எண்ணி விசாரணைகளை முடுக்கிவிட்ட இலங்கை அரசு துரிதமாக செயலில் இறங்கி, இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்களென பலரைக் கைது செய்தது. தற்கொலைத் தாக்குதல்களின் சூத்திரதாரியெனக் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் தலைமை தாங்கிய அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அந்த அமைப்பின் மீது தடையும் விதிக்கப்பட்டது.

இஸ்லாமிக் ஸ்டேட் (Islamic State) அல்லது ஐ.எஸ். எனப்படும் இந்த ஆயுதம் ஏந்திய தீவிரவாத இயக்கம் சிரியா, ஈராக், ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பகுதிகளில் இயங்கி வருகின்றது. ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே ஐ.எஸ். இன் கொள்கை. சுன்னி முஸ்லிம் பிரிவினரை மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.எஸ். இயக்கம், ஈராக், சிரியப் படையினரை வெற்றிகொண்டு, ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகள் சிலவற்றை முழுமையாகக் கைப்பற்றி, அதனை இஸ்லாமிய கலீபா ஆட்சிக்குட்பட்ட ஒரு தனிநாடாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இப்போது அந்தக் கட்டுபாட்டுப் பகுதியை ஏறத்தாள முற்றுமுழுதாக இழந்து, அந்த இயக்கம் திக்குத்திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

ஏப்பிரல் 29ந் திகதி ஐ.எஸ்சின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதியின் (Abu Bakr al-Baghdadi) உரையென கூறப்படுகின்ற 18 நிமிட வீடியோ ஒன்று வெளியாகியது. அந்த உரையில், சிரியாவில் ஐ.எஸ் வசம் இறுதியாக இருந்த பாகூஸ் (Baghouz) நகரத்தை இழந்ததற்கு பழி தீர்க்கும் விதமாகவே, இலங்கையில் தாக்குதல்களை நடாத்தினோம் என்று அவர் கூறியிருந்தார். இந்த உரை வெளியாகும் வரையில், அபூ பக்கர் அல் பக்தாதி 2017 இல் கொல்லப்பட்டு விட்டாரென்றே கருதப்பட்டு வந்தது. அத்தோடு அவரது இந்த உரையானது கடந்த 5 வருடங்களில் வெளியான முதலாவது உரை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உரையின் பின்னர் இலங்கையில் சந்தேகப்படுவோரெனக் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இவ்வாறு இதுவரையில் சுமார் 2300 பேர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

(ஐ.எஸ்சின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி யூதப் பெற்றோருக்கு பிறந்தவர், அவரது உண்மையான பெயர் சிமோன் எலியட் (Simon Elliot) என்றும், இவரை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கி உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் பயிற்சியை அளித்து, அரபு மற்றும் முஸ்லிம் மக்களின் வாழ்வையும் இஸ்லாமிய சிந்தனைகளையும் அழிக்கும் சதிவேலைகளுக்கு தலைமை தாங்க அனுப்பப்பட்டவரெனவும் அமெரிக்காவிலிருந்து இயங்கும் இணையத்தளமான Vetarans Today 2015 ஆம் ஆண்டு செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது)

இந்த நிலையில் இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலானது ஐ.எஸ் இயக்கத்தின் அனுமதியெதுவுமின்றி நடாத்தப்பட்டதென இந்தியாவின் பிரபல்ய ஆங்கில நாளேடான ‘இந்து’ 22.06.2019 இல் புதிய செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள புலனாய்வு பிரிவு அதிகாரியொருவரை மேற்கோள் காட்டியே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சஹ்ரான் ஹாசிமின் சகாவான முகமது மில்ஹான் என்பவர்தான், ஐ.எஸ். இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி, இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களுக்கு உரிமை கோர வலியுறுத்தியதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இலங்கைத் தாக்குதல்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு, அண்மையில் சவூதியிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 5 நபர்களில் முகமது மில்ஹானும் ஒருவர்.

தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக மில்ஹான் இலங்கையைவிட்டு வெளியேறி சவூதி அரேபியா சென்றுள்ளார். தாக்குதல்களை நடத்திய பின்னர் ஐ.எஸ். இயக்கத்தை உரிமை கோர வைக்கும் பொறுப்பு மில்ஹானிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது என்றும், சஹ்ரானுக்குப் பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை பொறுப்பேற்று வழிநடத்த இருந்தவர்தான் மில்ஹான் என்றும் அந்த புலனாய்வு அதிகாரி மேலும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மிகப்பிரமாண்டமான திட்டமிடலின்றி ஈஸ்டர் தாக்குதல்கள் போன்ற ஒன்றினை செய்ய முடியாது. ஐ.எஸ்சின் உதவியின்றி இது நிகழ்த்தப்பட்டதாயின், இதற்குப் பின்னணியில் எவரெவர் இருந்திருக்கக்கூடும்? சஹ்ரானை தலைமையாகக் கொண்ட மிகச்சிறிய அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் தனித்து இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கவே முடியாது. அந்த அமைப்பை ஊடுருவி, இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் நாசம் விளைவித்துக் கொண்டிருக்கும் அந்த தீய சக்திகளை கண்டுபிடித்தே தீரவேண்டும். அந்தப் பொறுப்பு இலங்கை மக்களின் கைகளிலேயே உள்ளது.

நன்றி: வானவில் இதழ் 102