எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 9)

அதேவேளை, அரசாங்கம் திரட்டுகின்ற வருமானத்துக்குள்ளேயே அதனது பொறுப்பாக உள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கான செலவுகளை முகாமைத்துவம் செய்கிறதா என்றால், இங்கு இல்லை என்பதே பதிலாக உள்ளது. இதற்குக் காரணம் தவிர்க்க முடியாத செலவுகளே என ஒவ்வொரு அரசாங்கமும் காரணம் கூறி வந்துள்ளது. பதவியிலிருக்கும் வேளைகளில் ஒவ்வொரு அரசாங்கமும் அரசாங்கத்தின் நிதி நெருக்கடி நிலைமைக்கு முன்னைய அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதுவும் வழமையாகிவிட்டது.

வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் கடைசியில் துந்தணா துந்தணாதான்!

ஒவ்வொரு அரசாங்கமும் பதவியிலிருக்கும் வேளையில் தங்களது ஆட்சிக்காலத்தில் வரவு – செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையை அதாவது துண்டு விழும் தொகையை எந்தளவுக்குக் குறைக்க முடியுமோ அந்தளவுக்குக் குறைத்து, துண்டு விழும் தொகையை மொத்தத் தேசிய வருமானத்தில் 3 சதவீதத்துக்குள் அல்லது அதிகபட்சம் 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தி விடும் திட்டத்தைக் கொண்டிருப்பதாக சொல்வார்கள். ஆனால் நடைமுறையில் துண்டு விழும் தொகையை அந்த அளவுக்குள் கட்டுப்படுத்துவதில்லை – அவ்வாறு கட்டுப்படுத்த அவர்களால் முடிவதில்லை. 2014ம் ஆண்டு முடிவுற்ற மஹிந்த ராஜபக்சாவின் ஆட்சி மொத்தத் தேசிய வருமானத்தில் 5.7 சதவீதமாக துண்டு விழும் தொகையை காட்டியது. இது மைத்திரி – ரணில் கூட்டாட்சி நடந்த முதலாவது ஆண்டில் அதாவது 2015ல் 7.6 சதவீதமாகியது. அவர்களது ஆட்சி முடிவடைந்த 2019ம் ஆண்டில் 9.6 சதவீதமானது. இப்போது பதவியில் இருக்கும் கோத்தபாயாவின் ஆட்சியின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த துண்டு விழும் தொகை 13 சதவீதமாகி விட்டது.

இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள், அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்டங்களில் ஏற்படும் துண்டு விழும் தொகையின் சதவீதங்களை, அரசாங்கம் வரிகள் மற்றும் வரிகளல்லாக வழிகள் மூலம் திரட்டும் வருமானத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமே வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையின் பிரமாண்டத்தை சரியாக புரிந்து கொள்ள முடியும். அதாவது இலங்கை அரசின் அவ்வாறான வருமானம் 2019ம் ஆண்டு மொத்தத் தேசிய உற்பத்தியில் 12.5 சதவீதமாகவும் 2020ம் ஆண்டு 10.5 சதவீதமாகவும் உள்ளது. இதனை வேறொரு வகையில் கூறினால் 2019ல் அரசாங்கத்தின் 100 ரூபா வருமானத்துக்கு அதன் செலவு 161 ரூபாவாக இருந்தது. இதுவே 2020ல் கோத்தபாயாவின் ஆட்சியில் 100 ரூபா வருமானத்துக்கு 230 ரூபா செலவென ஆகிவிட்டது

அரசாங்கத்தின் 2021ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை முன்னெப்போதையும் விட மேலும் மோசமானதாகும் என்பதை இப்போதே காண முடிகின்றது. 2021ம் ஆண்டின் ஏப்ரல் வரையான முதல் நான்கு மாதங்களுக்குமான அரச வருமானம் வெறுமனே 48000 கோடிகளாக இருக்க, செலவோ 100000 கோடிகளைத் தாண்டி விட்டது. அதாவது வருமானத்தோடு ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் செலவு 200 சதவீதத்துக்கு மேலாக போய் விட்டது. அந்த நான்கு மாதங்களில் இலங்கையில் கொரோணா தொற்று முடிவுக்கு வருவது போல தோற்றமளித்தது. ஆனால் கடந்த ஏப்ரலுக்குப் பின்னர்தான் கொரோணாவின் மூன்றாவது அலையின் கோரத் தாண்டவம் தொடங்கியது. அது இன்னமும் ஓய்ந்தபாடில்லை. எனவே 2021ம் ஆண்டின் இரண்டாவது நான்கு மாதங்களின் அரச வருமானம் முன்னைய ஆண்டுகளின் இதே காலகட்ட அரச வருமானத்தோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவாக அமையும் நிலைமையே உள்ளது.

2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது இந்த ஆண்டுக்கான துண்டு விழும் தொகை மொத்தத் தேசிய வருமானத்தில் 9.5 சதவீதமாக அமையும் என ஒரு கணக்கை அறிவித்தார். அப்படிச் சொல்கையில் அரசாங்கத்தின் எதிர்பார்க்கை என்னவாக இருந்ததென்றால் 2021ம் ஆண்டுக்கான அரசின் வருமானம் 200000 கோடிகளாக இருக்கும் என பிரதமர் கணித்தார். ஆனால் உண்மையில் 2021ம் ஆண்டுக்கான அரச வருமானம் 150000 கோடியையாவது எட்டுமா என்பது இன்றைய நிலையில் சந்தேகமே. எனவே துண்டு விழும் தொகை 13 சதவீதமாக 2020ம் ஆண்டில் அமைந்த அதே நிலைமைக்கு 2021ன் வரவு-செலவுத் திட்டத்திலும் துண்டு விழும் தொகை உயர்ந்து சென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும் இல்லையெனில் வீடென்ன நாடும் தாங்காது!

அரசாங்கத்தின் வருமானம் குறைவாக இருப்பதனையும், அத்துடன் வருடாவருடம் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையின் போக்குகளையம் இதுவரை அவதானித்தோம். வருடாவருடம் மீண்டெழும் செலவீனங்கள் அரசாங்கத்தின் கட்டுப்படுத்தும் மற்றும் நெறிப்படுத்தும் ஆற்றல்களை மீறிய வகையில் தவிர்க்க முடியா நிலைமையில் இருப்பதாகக் கூறப்படுவது பற்றி சற்று உன்னிப்பாக அவதானித்தல் அவசியமாகும் இந்த விடயத்தில் கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எந்தளவு தூரம் பொறுப்பாகவும் சரியாகவும் நடந்து கொண்டுள்ளன. வருமான சக்தியை மிகப் பெருமளவுக்கு மீறிய வகையில் இந்த தவிர்க்க முடியாத செலவீன வகைகள் எவ்வாறு? எவற்றின் விளைவாக அமைந்துள்ளன என்பதை இங்கு தெளிவாக அறிந்து கொள்வது மிகப் பிரதானமானதாகும்.

மீண்டெழும் செலவுகள் தொடர்பாக உள்ள விடயங்களை இங்கு நாம் உன்னிப்பாக கவனிப்பதற்கு 2020ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டினை எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த ஆண்டுகளில் அரச பொருளாதார நிலைமைகள் மிக மிக மோசமானவையாக உள்ளன என்பது மட்டுமல்ல பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவமும் மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உரியதாகும். இன்றைய அரசின் மோசமான நிதி நிலைமைக்கு கொரோணாதான் ஒரே காரணம் என்று கெட்டித்தனமாக இலகுவாக கூறி முடித்து விடுவார்கள். எனவே இலங்கையை ஆளுபவர்களின் பொருளாதார நிபுணத்துவத்தை பரிசோதிப்பதற்கு 2019ம் ஆண்டையும் அதற்கு முன்னைய ஆண்டுகளையும் எடுத்துக் கொள்வோம். அது கொரோணா தொற்றுக்கு முந்திய ஆண்டுகள். ஆனபடியால் கொரோணா அல்லாத காரணிகள் எவ்வாறு இலங்கை அரசின் நிதி நிர்வாக முகாமைத்துவத்தில் தாக்கத்தை விளைவிக்கின்றன என்பதை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக இருக்கும்.

2019ம் ஆண்டில் அரசின் உரிமையாக திரட்டப்பட்ட வருமான மொத்தம் 190000 கோடி ரூபாக்கள். ஆனால் அரசாங்கம் தான் கடந்த காலங்களில் வாங்கிய கடன்களுக்கு கட்டிய வட்டித் தொகை மட்டும் 90000 கோடி ரூபாக்கள். அதேவேளை அரச ஊழியர்களுக்கு சம்பளமாகவும் முன்னாள் ஊழியர்களுக்கு பென்சனாகவும் செலுத்திய தொகை இன்னுமொரு 90000 கோடி ரூபா. ஆக மொத்தத்தில் இங்கேயே 180000 கோடி ரூபாவின் கதை முடிந்தது. இதைவிட சமுர்த்தி மற்றும் உர மான்யங்கள் மற்றும் சமூக பொரளாதார உதவித் திட்டங்களென வழமையாக கொடுக்கப்படுபவைக்கு மொத்தத்தில் சுமார் 20000 கோடி ரூபா. மேலும் அரச செயலகங்கள் மற்றும் அரசின் வழமையான செயற்பாடுகளுக்கான பராமரிப்புச் செலவுகளாக சுமார் 10000 கோடி ருபா. ஆக இங்கேயே மொத்தத்தில் 210000 கோடி ரூபாவாக மீண்டெழும் செலவுகளுக்கான தொகை ஆகிவிட்டது. அதாவது திரட்டப்படும் அரச வருமானத்தை விட 20000 கோடி அதிகமாக மீண்டெழும் செலவுகளுக்கென செலுத்தப்பட்டுள்ளது.

இதைவிட அபிவிருத்தித் திட்டங்களுக்கும் மற்றும் அரச நிறுவனங்களுக்குமான மூலதனச் செலவுகள் மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகள். 2019ல் மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவுகளின் தொகை சுமார் 62000 கோடி ரூபாக்கள். மீண்டெழும் செலவுகளில் ஒரு கணிசமான பகுதியையும் முழு மூலதனச் செலவுகளையும் சரிக்கட்டுவதற்கு அரசாங்கம் முழுக்க முழுக்க கடன்களையே நமபியிருக்கிறது. 2019ல் அதாவது மைத்திரி – ரணில் ஆட்சியின் இறுதியாண்டில் மட்டும் அரசாங்கம் வாங்கிய கடன் தொகை 101600 கோடி ரூபாக்கள். மேலே குறிப்பிட்ட மீண்டெழும் செலவுகள் தவிர்க்கப்பட முடியாதவையாகவும். அதேவேளை 2020லும் 2012லும் அரசினால் திரட்டப்பட்ட வருமானம் சுமார் 30 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருப்பதையும் கொண்டு அரசின் நிதி நிலைமை எவ்வாறு மோசமாகியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

கோத்தபாயாவின் அரசாங்கம் பெறுமதி கூட்டல் (VAT)யை அரைவாசியாக்கியதன் மூலம் அதன் வருமானத்தில் சுமார் 25000 கோடி ரூபாக்கள் வருமான வீழ்ச்சியை ஏற்படுத்தியதென்பது ஏற்கனவே முன்னைய கட்டுரைத் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கு நினைவிற் கொள்வது பொருத்தமானதாகும். இந்த அரசாங்கத்தின் காலத்தில் கடன் தொகை மேலும் பெருமளவு அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டில் அரசின் மொத்தச் செலவு 322000 கோடி ரூபா. ஆனால் அதன் வருமானம் 144000 கோடி ரூபா மட்டுமே. எனவே இங்கு பெறப்பட்டுள்ள கடன் தொகை 178000 கோடி ரூபா. இதனால் 2020ம் ஆண்டு இறுதியில் இலங்கை அரசு செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகையானது இலங்கை ரூபாயில் 1500000 ( 15 லட்சம்) கோடியாகி விட்டது. இதனால் 2020ல் அரசாங்கம் பெற்ற கடன்களுக்காக கட்டிய வட்டியின் தொகை மட்டும் ரூபா 100000 கோடியைத் தாண்டி விட்டது அதாவது 144000 கோடி ரூபாவை வருமானமாக திரட்டிய அரசாங்கம் கட்டிய வட்டித் தொகை மட்டும் 100000 கோடியையும் தாண்டியதாக இருப்பது அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தின் பரிதாபகரமான நிலையைக் காட்டுகிறது.

குறுகிய அரசியற் குறிக்கோள்களை அடைய அள்ளிக் குவிக்கப்பட்டுள்ள அரச வேலைவாய்ப்புக்கள்

அரசின் மீண்டெழும் செலவுகளில் அரசாங்கத்தினால் பெற்ற கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு அடுத்ததாக இங்கு முக்கியத்துவம் பெறுவது அரச ஊழியர்களுக்கான சம்பளமும் மற்றும் முன்னாள் அரச ஊழியர்களுக்கு செலுத்தும் பென்சனும். இந்தத் தொகை 2019ல் 92000 கோடி ரூபாவாகும். இது 2020ல் 100000 கோடி ரூபாவைத் தாண்டிய தொகையாகி விட்டது.

நாட்டில் வேலைவாய்ப்பற்று நிற்கும் இளைஞர்களின் எதிர்ப்புகளையும் கிளர்ச்சி நடவடிக்கைகளையும் சமாளிக்கும் நோக்குடனும் தமது அரசியற் தளங்களை இளைஞர்கள் மத்தியில் விரிவபடுத்துவதற்கும் அரச வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குவது ஓர் அரசியற் கலையாக இலங்கையின் ஆட்சியாளர்களிடம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இலங்கையின் கல்வி முறை, படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு தொழில் பயிற்சி முறைகளை விரிவுபடுத்துவதோடு இளைஞர்கள் தனியார் துறைகளிலும் மற்றும் சுய தொழில்கள் ரீதியாக வேலைவாய்ப்புகளை தமக்குத் தாமே ஆக்கிக் கொள்வதற்கும் அவசியமான அனைத்து ஏற்பாடுகளையம் மேற்கொள்ளுதலில் அரசாங்கத்தின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக தனியாக – விரிவாக உரையாடுதல் மிகவும் அவசியமாகும் அவற்றை மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

இங்கு பிரதானமாக அரச வருமான நிலைக்கும் அரச ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள நிதிரீதியான பொருத்தம் மற்றும் பொருத்தமின்மைகள் தொடர்பான விடயங்களை அவதானிக்கலாம். அரசாங்கம் என்றால் படித்த இளைஞர்களுக்கு அதுவும் மூன்று நான்கு ஆண்டுகள் பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டியது கட்டாயமான பொறுப்பான கடமைதானே என்று அந்தப் படித்த இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடையே மட்டுமல்ல சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் அவ்வாறான அபிப்பிராயமே பரவலாக காணப்படுகிறது. அரச ஊழியர்கள் என ஆக்கப்பட்டு விட்டால் அவர்களுக்கு நாட்டின் பொருளாதார தராதர நிலைக்கேற்ப சம்பளங்கள் வழங்கப்பட வேண்டுமே – அதற்கு அரசிடம் எந்தளவுக்கு நிதி வளம் உள்ளது என்பது பற்றிய ஆய்வு யாராலும் – ஏன் – ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இருக்கும் அரசியல்வாதிகளிடம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினை பற்றி உரத்துப் பேசி கண்ணை மூடிக் கொண்டு வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டால் பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்பதே அரசியல்வாதிகளின் தந்திரமாக உள்ளது.

இலங்கையின் அரச நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் தொகை பற்றிய ஒரு தெளிவான பொருளாதார உரையாடலை இலங்கையில் காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது. உண்மையில் இலங்கையின் அரச நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையானது இலங்கை அரசின் நிதி நிலைமைக்கு பொருத்தமற்றதாக உள்ளது எனக் கூறினால் பலர் இது என்ன ஒரு விசமத்தனமான கருத்தாக உள்ளதெனக் கருதக் கூடும். எனவே இங்குள்ள உண்மை நிலவரம் பற்றிய ஒரு தெளிவான பொருளாதாரக் கண்ணோட்டம் அவசியமாக உள்ளது.

இங்கு அரச நிறுவனங்களிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் பன்னிரெண்டரை லட்சம் பேர். அதாவது இலங்கையில் பொருளாதார ரீதியாக ஈடுபட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 85 லட்சம்.இவ்வகையில் அரசாங்கத்தின் பல்வேறு வகைகளிலும் பல்வேறு மட்டங்களிலும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 15 சதவீதமாகும். இதைவிட சட்டரீதியில் சுயாதீனமான ஆனால் அரசு சார்ந்தவைகளாக உள்ள நிறுவனங்களில் ஊழியர்களாக உள்ளோரின் எண்ணிக்கை மேலும் இரண்டரை லட்சம் பேர். இவர்கள் அரசின் ரயில் மற்றும் பேரூந்து போக்குவரத்து அமைப்புகள், அரசு சார் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு வகையான சேவை நிறுவனங்களில் ஊழியர்களாக இருப்போர். இவர்களை ஒரு புறம் ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் அரசின் நேரடி ஊழியர்களாக இருப்போரின் எண்ணிக்கையை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதார குறிப்பாக அரசின் நிதி நிலைமைக்கு மிகவும் அதிகமான வீதாசாரமாகும்.

அண்மை நாடான இந்தியாவில் மொத்த உழைப்பாளர்களில் சுமார் 4 சதவீதத்தினர் மட்டுமே இந்திய மத்திய மற்றும் மாநில அரச ஊழியர்களின் மொத்தத் தொகை உள்ளது. தென்னாசியாவில் உள்ள அடுத்த பெரிய நாடான வங்காள தேசத்தில் இந்த எண்ணிக்கை 6 சதவீதமாகவே உள்ளது. பாகிஸ்த்தானில் இது இன்னமும் மிகக் குறைவாக 2 சதவீதமாக மட்டுமே உள்ளது. இலங்கையின் அரசு கொண்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தொழில்ரீதியாக அபிவிருத்தியடைந்த பணக்கார நாடுகளுக்கு சமமானதாக உள்ளது. ஆனால் இலங்கையின் அரச வருமானம் உலகின் பணக்கார நாடு எதற்கும் கொஞ்சமும் கிட்ட நிற்க முடியாததென்பது பொது அறிவு. இது இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பிலுள்ள ஒரு பிரதானமான முரண் நிலையாகும்.

பொருளாதார விருத்தியடைந்த பணக்கார நாடுகள் திரட்டும் அரச வரிகள் வருமானம் அவற்றின் தேசிய வருமானத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன. அவை தமது நாட்டின் உழைப்பாளர்களில் 15 சதவீதமானோரை அரச ஊழியர்களாகக் கொண்டிருப்பதில் ஒரு நியாயம் உண்டெனலாம். தனது நாட்டின் மொத்தத் தேசிய வருமானத்தில் 22 சதவீதத்தை அரச வருமானக் கொண்டுள்ள இந்தியா தன்னுடைய உழைப்பாதளர்களில் 4 சதவீதத்தினரை மட்டுமே கொண்டிருக்க, தனது தேசிய வருமானத்தில் 12 சதவீதத்தை மட்டுமே வருமானமாக கொண்டுள்ள இலங்கை அரசு தனது ஊழியர்களாக 15 சதவீத உழைப்பாளர்களைப் கொண்டிருப்பதை எந்த வகையில் பொருளாதார ரீதியாக நியாயப்படுத்துவதென்பது இங்கு மிகப் பெரும் கேள்வியாகும்.

சிட்டுக்குருவியின் தலையில் ஏற்றப்பட்டிருக்கும் பாறாங்கல்லு

இலங்கையில் உள்ள ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் பிரிவுகளில் உள்ள ஆளணியின் எண்ணிக்கை சுமார் 3.5 (மூன்றரை) லட்சம் பேர். அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் நிறைவுற்றும் இலங்கையின் ஆயுதப் படையினரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், உலக வல்லரசுகளில் ஒன்றாகவும் இலங்கையை விட 60 மடங்கு அதிக சனத்தொகையையும் கொண்ட இந்தியாவின் அனைத்து வகைப்பட்ட ஆயுதப் படைகளிலும், இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து வகை பொலிஸ் பிரிவுகளிலுமுள்ள ஆளணிகளின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்துக்கும் உட்பட்டதே. அதேவேளை சீனாவின் ஆயுதப் படைகளிலுள்ள மொத்த ஆளணியின் எண்ணிக்கை 27 லட்சமாக மட்டுமே உள்ளது. அதாவது இலங்யைவிட 60 மடங்கு சனத்தொகை கொண்ட இந்தியாவில் மொத்தத்தில் ஆயுதம் தாங்கிய அரச ஊழியர்களின் எண்ணிக்கை வெறுமனே 9 மடங்காக உள்ளது. ஆயுதப் படையினரை மட்டும் எடுத்துக் கொண்டால் இலங்கையை விட இந்தியாவில் 6 மடங்கினர் மட்டுமே உள்ளனர். சீனாவில் 11 மடங்கினர் மட்டுமே உள்ளனர். இந்த நிலைமையை இலங்கையின் அரசியல் பொருளியலாளர்கள் மிகவும் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.

1983ம் ஆண்டுக்கு முதல் இலங்கையின் ஆயுதப் படையில் வெறுமனே 25000 பேரளவில் மட்டுமே இருந்தனர். 1989ல் கூட சுமார் 60000 பேர் மட்டுமே இருந்தனர். உண்மையில் இப்போதுள்ள ஆயுதப் படையினரின் அளவைப் பெறுத்தவரையில் இது இலங்கையின் பொருளாதார நிலைக்குப் பெரும் சுமையாக இருக்கும் வெள்ளை யானைகளே. இந்த ஆயுதப் படையினரை வைத்து இந்த அரசாங்கம் காட்டும் அநாவசியமான படங்களால் நாட்டின் நலன்களுக்கு எந்தவித மேலதிக பயனும் ஏற்படப் போவதில்லை. ஆனால் அரச ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தில் சுமார் முப்பது சதவீமான பங்கை இவர்கள் விழுங்கிக் கொள்கிறார்கள் என்பதை அவதானத்திற் கொள்வது அவசியமாகும்.

இத்துடன் இக்கட்டுரைப் பகுதியை நிறுத்தி அரச ஊழியர்கள் தொடர்பான ஏனைய விடயங்களை அடுத்த கட்டுரைப் பகுதி 10ல் தொடரலாம்….