கௌதம் நவ்லக்கா : சில குறிப்புகள்.

காஷ்மீரில் கடந்த காலங்களில் நடைபெற்ற கொடும் மனித உரிமை மீறல்களை பன்னாட்டளவில் அம்பலப்படுத்தி வெளிக்கொணர்ந்ததில் கௌதமுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. பன்னாட்டு நடுவம் ஒன்றை (International People’s Tribunal on Human Rights and Justice in Kashmir) அமைத்துப் பன்னாட்டளவில் இந்திய அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியவர் அவர். சமீப காலங்களில் சட்டிஸ்காரில் மாஓயிஸ்ட் வேட்டை எனும் பெயரில் பழங்குடி மக்களுக்கு எதிரான அரச அத்து மீறல்களையும் வெளிக் கொணர்ந்தார்.

2010இல் நடந்த ஒரு பெரும் ஆர்பாட்டத்திற்குப் பின் கௌதம் காஷ்மீரில் நுழைவது தடை செய்யப்பட்டது. எனினும் 2011 டிசம்பரில் காஷ்மீரில் கூட்டப்பட்ட முன்குறிப்பிட்ட பன்னாட்டு நடுவ நிகழ்வில் கலந்து கொண்டு Alleged Perpetrators – Stories of Impunity in Jammu and Kashmir எனும் முக்கிய அறிக்கையை வெளிக் கொணர்ந்தார். காஷ்மீரில் இராணுவம் மற்றும் காவல்துறைகளால் கடத்திச்சென்று கொல்லப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் அமைப்பு (Association of Parents of Disappeared Persons) க்காக காவல் துறை ஆவணங்கள் மற்றும் இதர அரசுப் பதிவேடுகள், நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அப்படிக் “காணாமல் அடிக்கப்பட்டவர்களின்” வரலாற்றுத் தொகுப்பு ஒன்றை (Alleged Perpetrators – Stories of Impunity in Jammu and Kashmir) வெளிக் கொணர்ந்ததும் கௌதம் நவ்லக்காதான். இந்திய இராணுவத்தின் 3 பிரிகேடியர்கள், 9 கர்னல்கள், 3 லெஃப்டினன்ட் கர்னல்கள், 78 மேஜர்கள், 25 கேப்டன்கள் மற்றும் இந்திய அரை இராணுவப்படையின் 37 மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்தக் “காணாமல் அடிக்கப்பட்ட” பிள்ளைகளை எவ்வாறு கடத்திச் சென்று படு கொலை செய்து அவர்களின் உடல்கள் கூடப் பெற்றோர்களுக்குக் கிடைக்காமல் செய்ததற்குக் காரணமானார்கள் என்பதை வெளிக் கொணர்ந்தது கௌதம் நவ்லக்காவின் முக்கிய சாதனை என்பது குறிப்பிடத் தக்கது. அந்தக் கொலைகார அதிகாரிகள் எல்லாம் எந்தத் தண்டனையும் இல்லாமல் பதவி உயர்வு பெற்று சொகுசாக வாழ்ந்து கொண்டுள்ள நிலையில் இந்த அநீதிகளை வெளிக் கொணர்ந்த கௌதம் நவ்லக்கா இன்று சிறையில்!

காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அந்த அறிக்கையை வெளியிட்டதோடு இந்த அனைத்து விவரங்களும் இந்தியப் பிரதமருக்கும். காஷ்மீர் முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளதையும் அந்தச் சந்திப்பில் அறிவித்தார் கௌதம் நவ்லக்கா. ” காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுவது குறித்த ஒரு கருத்துக் கணிப்பை நடத்துவதே இந்தப் பிரச்சினைக்கு அமைதி வழியிலான ஒரு சரியான தீர்வாக அமையும். ஏனெனில் அது மட்டுமே இந்தக் கொடுமைக்கான ஒரு வன்முறையற்ற நீதியை வழங்கும்” என என வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனின் கருத்தை மேற்கோளிட்டு முழங்கியவர் கௌதம் நவ்லக்கா.

“காஷ்மீரில் தன் இருப்பை உறுதியாக்கிக் கொள்வதற்கு இந்தியா கைகொண்டுள்ள அணுகல்முறை லஞ்சமும் ஊழலும்தான். அங்கே அது நபர்களை விலைக்கு வாங்குகிறது. அதன்மூலம் தன் ஆக்ரமிப்பிற்கு அது ஒப்புதலைப் பெறுகிறது” என கௌதம் முழங்கியது வரலாறு,

மே 2011ல் கௌதம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நுழையக் கூடாது எனத் தடுக்கப்பட்டதையும் டெல்லிக்குத் திருப்பி அனுப்பப் பட்டதையும் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். அப்போது “அவரது வருகை காஷ்மீர் பள்ளத்தாக்கின் அமைதியைக் குட்டிச்சுவராக்கும்” எனக் குற்றம்சாட்டியது அன்றைய ஜம்மு காஷ்மீர் அரசு. “எழுத்து மூலம் ஆணை வேண்டும்” என கௌதம் வற்புறுத்தியபோது மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்ட ஆணை ஒன்றும் அவரிடம் அளிக்கப்பட்டது. CRPC 144 வது பிரிவின் கீழ் அந்தத் தடை ஆணை வழங்கப்பட்டிருந்தது. அடுத்த பத்தாண்டுகளில் தான் இப்படி நரேந்திரமோடியால் வீட்டுச் சிறையில் அடைக்கப்படப் போகிறோம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்காத ஃபரூக் அப்துல்லா அப்போது சொன்னார் : “அந்த எழுத்தாளன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான். காஷ்மீரைக் கொளுத்த வேண்டும் என்றா? அப்படியானால் இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதியைக் கொளுத்தட்டும்.!”.

அப்போது அங்கிருந்த மனித உரிமை அமைப்புகளின் பன்னாட்டு நடுவம் (International Tribunal for Human rights in Kashmir), “கடந்த 21 ஆண்டுகளாக கவுதம் நவ்லக்கா காஷ்மீருக்கு வந்து போய்க் கொண்டுள்ளார். எந்நாளும் இங்கு அவர் வன்முறையைத் தூண்டியது இல்லை” என அறிக்கை அளித்தது குறிப்பிடத் தக்கது. எதிர்க்கட்சியான PDP கட்சி (The Jammu and Kashmir People’s Democratic Party) இதைக் கண்டித்தது. கௌதம் நவ்லக்கா தடுத்து நிறுத்தப்பட்டது ஜனநாயகத்திற்கு நேர்ந்த இழுக்கு எனச் சாடியது. “ஒரு ஜநாயக அரசுக்குப் பொருந்தாத மனப்பிறழ்வு” என கௌதமும் அதைக் கண்டித்தார். “காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது என நம்மப வைத்துள்ளார்களே இந்திய மக்கள் அவர்களிடம் உங்கள் நினைப்பு எத்தனை அபத்தம் என்பதை விளக்குவேன்” என்று முழங்கினார் நவ்லக்கா. காஷ்மீர் ஊடகங்கள். “டெல்லியில் இருந்து வந்த ஒரு மனித உரிமைப் போராளி எவ்வாறு காஷ்மீரின் அமைதி குலைவதற்குக் காரணமாவார்?” எனக் கேட்டபோது காஷ்மீர் நிர்வாகம் மௌனம் காத்தது.

இன்று நரேந்திரமோடியை நோக்கியும் நாம் அதே கேள்வியைத்தான் கேட்கிறோம்.

ஒரு மனித உரிமைப் போராளி, ஒரு எழுத்தாளன், மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்தவன், அவன் உங்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பான் எனக் கூறுகிறீரே அது எப்படி பிரதமரே? அதற்கு என்ன ஆதாரம் பிரதமரே?”

[“நேபாளம் : மக்கள், வரலாறு,, மாஓயிஸ்டுகள்” – எனும் எனது எனது நூல் 2007 இல் சென்னையில் வெளியிடப்பட்டபோது அதை வெளியிட்டுச் சிறப்புரை வழங்கியவர் கௌதம் நவ்லக்கா என்பதை மனம் நெகிழ இக்கணத்தில் நினைவு கூர்கிறேன். – அ.மார்க்ஸ்]