சர்ச்சையை கிளப்பும் இந்தியாவின் 29ஆம் பிராந்திய சர்ச்சை

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு தமது தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுப்பதற்கான கருத்திட்டத்தை இந்தியாவின் நிறுவனங்கள் வகுத்திருந்ததாகக் கூட செய்திகள் பரவியிருந்தன.

இவ்வாறிருக்கையில், அண்மையில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியிருந்ததைத் தொடர்ந்து, அவர்களின் செயற்பாடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் இதர கட்சிகளால் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றதை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறான சூழலில், தற்போதைய அரசின் முக்கிய அமைச்சுப் பதவி வகிக்கும் ஹரீன் பெர்னான்டோ அவர்களும் அண்மையில், இலங்கையும் இந்தியாவின் ஒரு பகுதி எனும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தமை, பாராளுமன்ற அமர்வுகளில் எதிர்த் தரப்பின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தது.

குறிப்பாக, இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல உடைமைகள் இந்தியாவுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் முக்கிய விமான நிலையங்கள் மூன்று இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

மின்சார உற்பத்தி தொடர்பான கட்டமைப்பு நிர்வகிப்புகளும் இந்தியாவுக்கு வழங்கப்படுவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், அமைச்சர் பெர்னான்டோ ஆற்றிய உரை தொடர்பில் எதிர் தரப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரச தரப்பிடமிருந்து எவ்விதமான உறுதியான மறுப்பும் கிடைத்திருக்கவில்லை.

அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் தமக்கு அரசியல் இலாபம் தேடுவதற்காக இவ்வாறான கருத்தை முன்வைத்தாரா அல்லது அவரின் கேள்விகளுக்குப் பதிலளித்து இந்தியாவின் எதிர்ப்பை தேடிக்கொள்ள வேண்டுமா எனும் சந்தேகங்களும் எழுகின்றன.

எவ்வாறாயினும், மக்களைத் திசை திருப்பி, இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது காணப்படும் அதிருப்தியை தமது தேசப்பற்று நிறைந்த வார்த்தைகளால் மயக்குவதற்கான முயற்சிகளாகக் கூட கருத முடியும்.

நாடு வங்குரோத்து நிலையடைந்து, போது மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வீதிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து உயிரைக் கூட மாய்த்த காலப்பகுதியில், மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வராமல், அஞ்சி ஒளிந்திருந்த சில அரசியல் தலைவர்கள், தேர்தல் நெருங்கி வரும் காலப்பகுதியில் இவ்வாறான மக்களைக் கவரும் உரைகளை ஆற்றுவது, தமக்கு அரசியல் இலாபம் தேடிக் கொள்ளவே என்பதை நாட்டு மக்கள் எந்தளவுக்குப் புரிந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் நலனுக்காகக் கொள்வனவு செய்யும் மருந்துப் பொருட்களில் கூட தமது பணம் சம்பாதிக்கும் குணத்தை வெளிப்படுத்தியிருந்த இந்த அரசாங்கத்தின் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போதிலும், அதற்குச் சாதகமாக வாக்களித்த அங்கத்தவர்கள் உள்ள இந்த பாராளுமன்றம் தானா நாட்டு மக்களின் தேவைகளுக்கு உண்மையாகக் கவனம் செலுத்தப் போகின்றது.

இவ்வாறான நிலையில், இந்தியாவின் மற்றுமொரு பிராந்தியமாக இலங்கை அறிவிக்கப்பட்டால் தான் அதில் தவறு என்ன?

(Tamil Mirror)