சிந்தன் டி சில்வா: மறுக்க முடியாத ஈழவிடுதலைப் பக்கங்கள்

அதுவும் அந்த பக்கங்கள் இப்படியும் இருந்திருக்குமா….? நடந்திருக்குமா…? என்று கற்பனை செய்து பார்க்க முடியாமலும் இருக்கும்

ஈழவிடுதலை அதுவும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களை ஒருகிணைத்து ஒரு தனி நாட்டை நிறுவுதல் என்ற முதற் கட்டப் போராட்டத்தில் இப்படியான ஒரு இணைப்பு இருந்திருக்குமா…? ஏன்பதை ஏற்க மறுக்கும் வரலாற்றுப் பக்கங்கள் அது.

அவை வரிகள் அல்ல பக்கங்கள் என்றாக கூறினாலும் அதுவும் ஒரு புத்தகம்தான்….!

இந்த புத்தகத்தின் பிரதான பாத்திரம்தான் சிந்தன் டி சில்வா.
அவர் பற்றிய நினைவாஞ்சலி இது

சிந்தன் சிந்தனையை நிறுத்தியதான மரணம் நடைபெற்ற வேளையில் நான் பயணங்களில் இருந்தபடியால் அவர் பற்றிய பதிவை உடன் செய்ய முடிவில்லை.

எழுத்துலகில் இணைந்துள்ள நான் அவரைபற்றிய பதிவை செய்யாது என் எழுத்துப் பணிகளை நான் பூர்த்தி செய்ய முடியாததாக அமையும் என்ற அளவிற்கான வரலாற்றுத் தடங்களை தன்னகத்தே கொண்டவர்தான் சிந்தன் டி சில்வா

தமது அனைத்து உழைப்புகளையும் தனது மரணத்தின் வரையும் அர்பணிப்போடு இணைந்து பயணிக்க முடியாமா….? மக்களின் விடுதலைக்கு…. என்பதை நிறுவிய ஒருவரின் கதை இது.

அதுவும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டாலும் அந்த அமைப்பில் பல்வேறு தோழர்களுடனும் தோழமையாக நட்பாக இணைவாக நெருக்கமாக தனது பாதையை வகுத்துக் கொண்டு பயணப்பட முடியுமா என்றால் ஆமாம் என்று ஒருவர் அப்படி வாழ்ந்தர்.

அவர்தான் சிந்தன் டி சில்வா.

இவர் வெறும் நல்லவர் என்பதற்கு அப்பால் வாதப் பிரதிவாதங்கள் புரிந்துணர்வுகள் சித்தாந்த ரீதியிலான தெளிவு என்றாக அவரின் பயணத்தை தவிர்த்து நாம் ஈழவிடுதலைப் போராட்டத்தை பார்க்க முடியாது.

அறிவியல் பூர்வமான சிந்தனை… எதிலும் ஒரு ஆராய்ச்சி… எந்த விடயத்தைப் பற்றி பேசினாலும் அதில் தர்க்க ரிதியிலான விஞ்ஞான விளக்கம்…. என்று இருந்த சமான்ய போராளியின்……

முழு ஆளுமை, திறமையை தேவையான அளவிற்கு நாம் வரலாற்றில் பாவித்தோமா என்றால் இல்லை என்பதான உணர்வு என்னிடம் உண்டு.
அவரின் அவசர மரணம்(வயது 68) எனக்கு இந்தச் செய்தியை எமக்கு உறைக்கச் சொல்லி விட்டுச் செல்வதாகவும் உணர வைத்துள்ளது.

இலங்கை சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் மிக வசதியான குடும்ப சூழலில் பிறந்து ஒருவர் 1970 பிற் கூற்றில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் வெறுமனவே நபராக இணையாது……

சிங்கள மக்கள் மத்தியில் சமத்துவமான சமூக மாற்றத்திற்கான ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் அது இலங்கை முழுவதுக்குமான சமூக மாற்றமாக இருத்தல் வேண்டும் என்று போராடப் புறப்பட்டவர்.

அதற்கு முதற்படியாக பேரினவாதத்தினால் பெரும்பான்மை தொழிலாள வர்க்கமும் சிறுபான்மை மக்களின் அதே வர்க்கமும் இணைந்து போராட முடியாத அளவிற்கு பேரினவாதம் உச்ச நிலையில் இருந்த சூழலை சரியாக புரிந்து கொண்டு தனது போராட்ட பாதையை வகுத்துக் கொண்டவர்.

அது அப்போது அதிக ஒடுக்குமுறைக்குள் உள்ளாகி இருந்த சிறுப்பான்மை தேசிய இனமான ஈழ மக்களின் விடுதலை…. தேச விடுதலை முதன்மையானது என்றதாக தனது பாதையை வகுத்துக் கொண்டதாக அமைந்ததே தோழர் சிந்தன் டி சில்வாவின் போராட்ட வாழ்க்கை
அது இலங்கை முழுவதற்குமான அடுத்த கட்ட போராட்டத்திற்கு….. சமத்துவ சமூக விடுதலைக்குமான போராட்டதில் சகல தரப்பு தொழிலாள வர்க்கமும் இணைந்து போராடுவதற்கான வாய்புகளை எற்படுத்தும் என்பதை தெளிவாக உணர்ந்தவர்.

அது அவரை ‘விகல்ப கண்டாயம’ என்ற சிந்தனையாளர் குழுவில் இணைந்துஇ தாயான் ஜெயதிலக்க தலைமையிலான பி.ஆர்.எஃப்(P.R.F) என்ற ஆயுதப் புரட்சிக்கான அமைப்பாக உருவெடுத்தபோது……
அதில் முக்கிய பொறுப்பை வகித்துஇ அதன் வாயிலாக தோழர் பத்மநாபா தலமையிலான தோழமை இயக்கமான ஈழவிடுதலை அமைப்பாக செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் இணைந்து பயணிக்க வைத்தது.

சிந்தன் அழகானவன்… இனிமையானவன்…. பண்பானவன்…. நகைச்சுவையானவன்….

அன்று என் காதலுக்குள் இருந்த இன்றைய என் வாழ்கைத் துணையை ‘ஏஞ்சல்….. ஏஞ்சல்….’ என்று அவரின் அழகைப் போற்றி அன்பாக…. பண்பாக…. சிநேகமாக… பழகும் அழைக்கும் அந்த வாஞ்சை இன்றும், இன்னமும் என் காதில் ஒலித்த வண்ணம் மனதில் ஓடிக் கொண்டு இருக்கின்றது.

தோழர் பத்மநாபாவின் உறக்க நேரத்து காவல் பணியில் ஒரு தினம் சகலரும் சகோதர பெரும்பான்மை இனத்தவராக இருப்பதாக தற்செயலாக அமைந்த நாளை அதிகம் கமல் தோழர்… (அதுதான் சிந்தனின் தலை மறைவு இயக்கச் செயற்பாட்டிற்கான பெயர்)சிலாகித்து பேசுவதுண்டு.

சிறில், பியால், ஜோ செனிவரத்தின, தயான் ஜெயத்திலக, முத்து, குமாரி ஜெயவர்தன என்று ஒரு பட்டாள அறிவு ஜீவிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஈழத்தின் எல்லா பிரதேசங்களிலும் தடம் பதித்தவர்.

இதில் ஒரு காலத்தில் ஏச். என். பெனான்டோ உம் இணைந்தார்.

ஈழத்தின் வரண்ட பிரதேசத்து வெயில்களை அந்த அழகனின் மாநிறத்தை ஒன்றும் செய்ய முடியாமல் தோற்றுப் போனதே பௌதிகத் தோற்ற உண்மை

இணைந்த வடக்கு கிழக்கு மகாண சபையில் தனக்கான பிரதிநிதித்துவத்தை அது அப்பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவம் என்றாக நாம் உருவகப்படுத்தினாலும்…..

அவன் இதற்கும் அப்பால் ஈழ மக்கள் அது தமிழ் பேசும் என்றாக அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட ஒருவராகவே மக்கள் மத்தியில் அறியப்பட்டவர்.

அது தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் அவரைப் பயணிக்கவும் வைத்தது.

இதற்கு அவர் பேசும் ‘அழகு தமிழ்’ அவர் வேற்றுத் தாய் மொழி பேசுபவர் என்பதைக் காட்டிக் கொடுக்காத சுந்தரத் தமிழை 1980 களின் ஆரம்பித்தில் இருந்தே தனக்குள் உள்வாங்கிக் கொண்டவர்
அவரின் அறிவும், உழைப்பும், புரிந்துணர்வும் இன்னும் வீச்சாக அதிகம் அறியப்பட்டதாக இலங்கை மண்ணிலும் ஏன் உலகப்பரப்பிலும் ஈடுபடும் அளவிற்கான எல்லாத் தகுதியும் இருந்தாலும் ஈழ விடுதலையில் ஏற்பட்ட மாற்றுக் கருத்துகளை மறுதலிக்கும் 1986 பின்னரான காலத்தில் ஏற்பட்ட நிலமை ஏற்படுத்தியது.

கூடவே இதே காலத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னராக தென் இலங்கையில் ஜேவிபி இனரின் இது போன்ற ஒப்பந்தத்தை ஆதரித்தவர்களை காவு கொள்வதற்கு பிரேமதாசாவின் செயற்பாட்டாளர்களாக செயற்பட்டதால் தமிழ் சிங்களப் பிரதேசம் எங்கும் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானார்.

அது அவரை பிரித்தானியாவிற்கு இடம் பெயர வேண்டி சூழலை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவரின் மனித குலத்திற்கான விடுதலைக்கான பயணங்கள் தனது மரணம் வரை தொடர்ந்தே இருந்தது.

அவர் எப்போதும் ஒரு குழு நிலை வாதத்திற்கு உள்படாமல் சிந்தாத்தன் வழியல் பலருடனும் இணைந்து பயணிக்கும் பண்பைக் கொண்டிருந்தார் என்பது அவரின் இறுத்திக் காலங்களில் அவரின் பராமரிப்பு என்பது கருணையுடன் பலராலும் உள்வாங்கப்பட்டது கவனிக்கப்பட்டது.

இலங்கை திரும்பிய மரணத்தின் சற்று முன்பான காலங்களில் இவ்வாறு செயற்பட்ட அனைத்து கருணை உள்ளங்களுக்கு இவ்விடத்தின் நன்றியை தெரிவிப்பதே சிறந்து பண்பாகும்

மருத்துவ விஞ்ஞானத்தால் மாற்ற முடியாது என்று அறிந்த நிலையில் இதில் அதிகம் கவனத்தை செலுத்தாது தனது மரணத்திற்கான நாட்கள் தெரிந்தும் அதனை பொருட்படுத்தாது வாழ்ந்து தனது தாய் மண்ணில் மரணத்தை தழுவிக் கொண்டவர்.

அவர் ஒரு சித்தாந்தம் அதன் அடிப்படையாக கொள்கை என்றாக வாழ்ந்தபடியால் அதன் அடிப்படையான சிந்தனையாளர்களுடன் இறுதிவரை இணைப்பில் குழப்பமான மனநிலையில் இல்லாமல் மக்களுக்காக வாழ்ந்து சிந்தனையை நிறுத்தியவர் சிந்தன் டி சில்வா.

உரிமையை வழங்குதல் என்பதற்குள் ஒரு மேலாண்மைச் சிந்தனை இருக்கின்றது……

உரிமைகளை பகிர்வது என்பதற்குள் ஒரு சமத்துவச் சிந்தனை இருக்கின்றது…..

இது இரண்டையும் வழங்க…. பகிர… மறுக்கும் போது….. உரிமை மறுக்கப்படும் சமூகத்தின் உறுப்பினரான ஒருவர் தமது உரிமைக்காக எல்லா எல்லைகளையும் கடந்து போராட முனைவது என்றான ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் இணைந்தவராகத்தான் நான் சிந்தன் டி சில்வாவை பார்க்கின்றேன்.

இதுதான் ஒரு உச்சக் கட்ட போராடும் உரிமையைப் புரிந்து கொண்ட போராளி ஒருவரிடம் வெளிப்படும் இயல்பாக நான் பார்க்கின்றேன்.
இதனை நான் சிந்தன் டி சில்வாவிடம் கண்டேன்.

அதனை அவர் தனி நபர் உணர்வாக வெளிப்படுத்தாது ஒரு அமைப்பாக அது ‘விகல்ப கண்டாயம’ என்ற அரசியல் அமைப்பாக இலங்கையின் பெருமான்மை சமூகத்தில் செயற்பட்ட தலை மறைவு இயக்கமாக ஈழ மக்களின் உரிமையிற்காக குரல் கொடுக்க போராட எம்முடன் இணைந்து செயற்பட வைத்தாக சிந்தன் டி சில்வாவைப் பார்க்க முடிகின்றது

ஈழ விடுதலைப் போராட்த்தில் யுத்தங்கள் நடைபெற்று பேச்சுவார்த்தை என்று வந்து இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபை என்றாகி இடைக்காலத் தீர்வாக அமைந்த அதிகாரப் பரவலாக்கம் என்ற போதும் அதனுடன் இணைந்து பயணித்தவர் சிந்தன் டிசில்வா.

இவ்வாறு செயற்படுவது தான் சார்ந்த சிங்கள சமூகத்தில் தனக்கான இடம் மறுதலிக்கப்படலாம் என்று தயான் ஜெயத் திலகா போன்றவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபை அமைச்சர் பதவியை ஏற்று பின்பு விலகியதான செயற்பாடுகளுக்கு மத்தியில் அவ்வாறு செயற்படாது இறுதி வரை எம்முடன் இணைந்து பயணித்தவர் தோழர் கமல்

அது மட்டும் அல்ல இந்த இடைக்காலத் தீர்வு ஏற்புடையது அல்ல என்று தமிழர் தரப்பின் ஏக போக தலமையாக தம்மைப் பிரகடனப்படுத்தி 1990 களின் பின்பு புலிகள் செயற்பட முற்பட்ட போதும் தான் எடுத்த முடிவில் பின்வாங்காமல் பயணத்தவர்.

அது 2009 ஆண்டு புலிகளின் அழிவிற்கு பின்னர் யுத்தம் முடிவுற்ற பின்பும் அணிமாறாது தான் கொண்ட கொள்கையின் அடிப்படையில் ஈழத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் குரலாக போராளியாக தனது மரணம் வரை வாழ்ந்தவர்.

தனக்கான தனியான வாழ்வை எப்போதும் அவர் உருவாக்கியவர் அல்ல. அந்த வாழ்வு மக்களுக்கான சேவை செய்தல் அதுவும் இலங்கையின் அதிக ஓடுக்கு முறைக்கு உள்ளாகும் சமூகத்திற்கானதாக தன்னை அர்ப்பணித்து வேலை செய்த ஒருவரை……

ஈழத்தின் வரலாற்றில் இலங்கையின் வரலாற்றில் ஏன் உலக வரலாற்றில் நாம் பதிந்துதான் ஆக வேண்டும்.

இந்த பதிவுகள் இல்லாவிட்டாலும் அவரின் மரணத்தின் பின்பு வாழ்வு உண்டு என்பது நம்பப்பட்டாலும் அது அதிகம் பொது வெளியிற்கு முன் நகர்த்தப்படாமல் நீறு பூத்திருக்கலாம்.

ஆனால் வரலாற்றில் என்றோ ஒரு நாள் அது நெருப்பாக கனற்று வெளிசத்தை மனித குலத்திற்கு கொடுக்கும் என்பதை இயல்பாக விடாமல் இதனை ஊதி நெருப்பாக ஏற்றி வெளிச்சத்தை கொடுக்க வேண்டியது மனித குலத் தலைவன் ஒருவருக்கான நினைவலையாக நாம் செய்தாக வேண்டும் என்ற வரலாற்றுக் கடமையாக என் பதிவை நான் பார்க்கின்றேன்.

தோழர் சிந்தன் டி சில்வா (தோழர் கமல்)(ஜனவரி 20, 2024) எமது மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.