தமிழரசுக் கட்சி ஏன் இப்படிச் செயல்பட்டு வருகிறது?

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பொழுது தனது கொள்கை சமஸ்டி அரசியலமைப்பைப் பெறுவது என்று சொல்லிக்கொண்டது. இடையில் சிறிது காலம் சமஸ்டியைக் கைவிட்டு தனித் தமிழீழமே தமது கொள்கை என்றனர் தமிழரசுக் கட்சியினர். தமிழீழம் பெறுவதற்குப் போராடிய புலிகள் 2009இல் அழிக்கப்பட்ட பின்னர் ‘வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய’ கதையாக தமிழரசுக் கட்சியினர் மீண்டும் தமது சமஸ்டிக் கொள்கையைத் தூசு தட்டிக் கையில் எடுத்துள்ளனர். ஆனால் இவர்களது அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால்தான் இவர்கள் விசுவாசமாக சமஸ்டி பெறுவதற்காக உழைத்தார்களா என்று தெரிய வரும்.

ஆரம்பத்தில் இவர்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து சத்தியாக்கிரகப் போராட்டங்களையும், சட்ட மறுப்புப் போராட்டங்களையும் நடத்தியது ஓரளவு உண்மைதான். ஆதனால் 1956இல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க இவர்களை அழைத்துப்பேசி, 1957இல் இவர்களது தலைவர் செல்வநாயகத்துடன் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்ற பெயரில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தார். அந்த ஒப்பந்தப் பிரகாரம் வடக்கு கிழக்கில் பிராந்திய சபைகள் உருவாக இருந்தது.

இதை விரும்பாத சிங்களப் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி, “பண்டாரநாயக்க தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் போகிறார்” எனப் பிரச்சாரம் செய்து பௌத்த பிக்குமாரைத் தூண்டிவிட்டுக் குழப்பம் செய்தது. இருந்தும் தனது அமைச்சரவையில் இருந்த சில இனவாத, வலதுசாரி அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் பண்டாரநாயக்க உறுதியாக இருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சியினர் என்ன செய்தனர்?

பண்டாரநாயக்கவுக்கு கைகொடுத்து உதவி ஒப்பந்தத்தை அமுல் செய்வதற்கு ஒத்துழைப்பதற்குப் பதிலாக, வடக்கு கிழக்கில் ‘சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டம்’ என்ற போர்வையில் தேவையற்ற ஒரு போராட்டத்தை ஆரம்பித்து, சிங்கள இனவாதிகளின் கையைப் பலப்படுத்தி, பண்டாரநாயக்க ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாத சூழலை உருவாக்கினார்கள். இது “பண்டா – செல்வா ஒப்பந்தம்” நடைமுறைக்கு வராமல் இருப்பதற்கு ஐ.தே.கவும் தமிழரசுக் கட்சியும் சேர்ந்து போட்ட நாடகம் என்பது பின்னர்தான் வெளிச்சத்துக்கு வந்தது.

பின்னர் 1965இல் ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தபோது பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்த அதே ஐ.தே.க. அரசில் தமிழரசு கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கொண்டனர். இணைந்தது மட்டுமின்றி, சமஸ்டி பேசிய தமிழரசுக் கட்சி, அதைக் கைவிட்டு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக எந்தவிதமான அதிகாரங்களும் அற்ற ‘மாவட்ட சபைகள்’ அமைப்பதற்கு செல்வநாயகம் ஐ.தே.க. பிரதமர் டட்லி சேனநாயக்கவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அதைக்கூட டட்லி அரசு நடைமுறைப்படுத்தாமல் 5 வருடங்கள் ஏமாற்றிவிட்டு இவர்களை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தது.

1970 பொதுத் தேர்தலில் ;மக்கள் முன்னணி’ வெற்றி பெற்று சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அரசு அமைந்தது. இந்தத் தேர்தலில் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் தலைகள் எல்லாம் மண் கவ்வியதைத் தொடர்ந்து மக்களை ஏமாற்றப் புதிய உத்தியொன்றை வகுத்தனர். அதன்படி இரண்டு கட்சிகளும் இணைந்து ‘தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி’ (தமிழர் கூட்டணி) என்ற அமைப்பை உருவாக்கி, 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி, “இனி தனித் தமிழீழம் அமைப்பதுதான் எமது ஒரே கொள்கை” எனப் பிரகடனம் செய்தனர். சிறீமாவோ அரசுக்கு எதிராகப் பல சட்டவிரோதமான போராட்டங்களையும் நடத்தினர்.

அதன் மூலம் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று 1977 பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்த அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று, எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் (அமிர்தலிங்கம்) பெற்றுக் கொண்டனர்.

அதேநேரத்தில், தமது தனிநாட்டுக் கொள்கையை மூட்டைகட்டி ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஆட்சியில் இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துடன் தேன்நிலவு கொண்டாடி, எந்தவிதமான அதிகாரங்களும் அற்ற ‘மாவட்ட அபிவிருத்தி சபைகள்’ அமைப்பதற்கு உடன்பட்டனர். ஆனால் 1965 டட்லி செய்தது போல மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நடைமுறைப்படுத்தாது தமிழரசுக் கட்சியினரை மீண்டுமொருமுறை எமாற்றிவிட்டது ஜே.ஆரின் ஐ.தே.க. அரசு.

இடையில் தமிழ் இளைஞர் இயக்கங்களின் ஆயுதப் போராட்டம் வலுவடைந்து, புலிகள் இயக்கம் தனிக்காட்டு ராஜாவாக ஆனபின்பு சிறிது காலம் பெட்டிப்பாம்பாக அடங்கி ஒடுங்கி இருந்தனர் தமிழரசுக் கட்சியினர். ஆனாலும் ஆட்சிக்கு வந்த சந்திரிக அரசாங்கம் தமிழ் தலைமைகளுடன் ஒப்பந்தம் எதுவும் செய்யாது, தானாகவே முன்வந்து 2000 ஆண்டில் சமஸ்டிக்கு ஒப்பான நல்ல தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைத்தார். அந்தத் தீர்வுக்கும் ஐ.தே.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஒப்பந்த நகலை பாராளுமன்றத்தில் தீயிட்டுக் கொளுத்தியது.

ஒப்பந்தத்தை ஆதரித்திருக்க வேண்டிய தமிழ்த் தலைமை, புலிகளின் கட்டளைப்படி ஐ.தே.கவுடனும், இன்னொரு இனவாதக் கட்சியான ஜே.வி.பியுடனும் சேர்ந்து சந்திரிக அரசின் தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் முறியடித்துவிட்டனர்.
இப்படியாக, இனப் பிரச்சினைத் தீர்வுக்காக நல்ல திட்டங்களை முன்வைத்த பண்டாரநாயக்க, சந்திரிக போன்றவர்களை செயற்பட விடாது ஐ.தே.கவுடன் இணைந்து குழப்பிய தமிழரசுக் கட்சி, அதேநேரத்தில் டட்லி, ஜே.ஆர். போன்ற ஐ.தே.க. தலைவர்கள் வழங்கிய உப்புச்சப்பற்ற போலி வாக்குறுகளுக்கு தலையசைத்து அவற்றையும் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டு நின்றதுதான் வரலாறு.

அதுமாத்திரமின்றி, சந்திரிக ஆட்சியிலும், ராஜபக்ஸ ஆட்சியிலும் கொடுக்கு கட்டிக்கொண்டு மல்யுத்தம் புரிந்த தமிழரசுக் கட்சியினர், 2015இல் மேற்கத்தைய நாடுகளின் உதவியுடன் ரணில் தலைமையில் ஐ.தே.க. அரசாங்கம் அமைந்த பொழுது, தமது கொடுக்குகளை அவிழ்த்துவிட்டு ரணில் அரசின் கால்களில் சாஸ்டாங்கமாக விழுந்து அந்த அரசுக்கு முண்டுக் கொடுத்தனர். அப்பொழுது இவர்களுக்கு தமிழர் பிரச்சினைகள் எல்லாம் மறந்து போயிற்று.

ஆனால், 2019இல் மீண்டும் ராஜபக்ஸாக்கள் ஆட்சி ஏற்பட்டதும், தமிழரசுக் கட்சியினருக்கும் ஏனைய தமிழ் இனவாதக் குழுக்களுக்கும் மீண்டும் ‘தமிழர் பிரச்சினை’ என்ற ஜூரம் பிடித்து, ஜெனீவா வரை வைத்தியர்களை நாடி ஓடுகின்றனர். ஐ.தே.க. ஆட்சிபீடம் ஏறும் நேரங்களில் இவர்கள் நோய் அற்று நலமாக இருப்பதும், அதற்கு எதிரான கட்சி ஆட்சிபீடம் ஏறும் நேரங்களில் இவர்களுக்கு தமிழரின் இனப்பிரச்சினை என்ற நோய் உருவாவதும் ஒரு தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றது.

ஆனால் அது அவர்களின் பிழை அல்ல. தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கத்தான் தாம் செயல்படுகிறோம் என்று இந்த கபடதாரிகள் சொல்வதை நம்பி இவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் சோணகிரித் தமிழ் சமூகத்தின் பிழை.