தமிழ் மக்களின் இன்றைய அரசியல் கோரிக்கை

இதனால்தான் தேர்தல் அரசியல் கூட்டணிகளுக்கப்பால் சகலவிதமான ஒன்றிணைந்த செயற்பாடுகளையும் தமிழ் கட்சிகள் நிராகரிக்கிறார்கள்.
2009ம் ஆண்டிலிருந்து – வெவ்வேறு பெயர்களில் – தமிழ் அரசியல் பரப்பை கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்த “தேசிய தரப்பினர்” – தமிழ் மக்களின் சமூக – அரசியல் – பொருளாதார நிலை படிப்படியாக நிர்மூலமாக்கப்பட்டு வருவதை – உணர மறுக்கிறார்கள் அல்லது அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

2001இல் கூட்டமைப்பாகியவர்கள் இன்று – 9 அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள் – மாவை(FP) – செல்வம் (TELO ) – கஜேந்திரன் (TNPF ) – சுரேஷ் (TPNA )- CV விக்னேஸ்வரன்(TPA ) – சிவாஜிலிங்கம் -(தேசியக்கட்சி) – பசுமை (ஐங்கரன்) – அனந்தி (சுயாட்சி) – ஜனநாயக போராளிகள் (LTTE ) .

உண்மையில் தேர்தலை மாத்திரம் நோக்கமாக கொண்ட தரப்பினர்களுக்கிடையே தெளிவான – நடைமுறைசாத்தியமான – அரசியற் கோரிக்கையின் அடிப்படையில் ஒற்றுமை என்பது சாத்தியமில்லை என்பதை கடந்த 14 வருட தமிழர் அரசியல் நிரூபித்துள்ளது. தவிர்க்கமுடியாத, சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டுகள் மாத்திரமே சாத்தியமாகும்.

இதுபற்றி தெரிந்தோ தெரியாமலோ – தமிழ் பத்திரிகைகள், புத்திஜீவிகள் சிலர் , மற்றும் புலம் பெயர்ந்த சில தரப்பினர் – நடைமுறையில் இல்லாத ” தேசிய தரப்பினர்” என்கின்ற கருத்துருவாக்கத்தை தொடர்ச்சியாக தக்க வைப்பதில் கரிசனையாக இருக்கிறார்கள்.

இந்த நிலைமையில் – மாற்றம் தேவையெனில் – தமிழ்மக்களின் “தேசிய நலன்” பாதுகாக்கப்படல் வேண்டுமாயின் – இன்றுள்ள – யதார்த்தங்களை விளங்கிக்கொண்டு – தேர்தல் அரசியலுக்கு அப்பால் – நடைமுறை சாத்தியமான அரசியற் கோரிக்கை என்ன என்பதை முதலில் விளங்கிக்கொள்ளவும் வரையறுக்கவும் வேண்டும்.

13வது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலும் – மாகாணசபைகளை மேலும் காலம் தாழ்த்த அனுமதிக்காமல் – நடைமுறைப்படுத்த கோருவதுமே தமிழ் மக்களின் தேசிய நலனை பாதுகாக்க கூடிய ஒரே கோரிக்கை.

இதனை புரிந்துகொண்டு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும், சிவில் சமூகத்தினரும் இதற்கான மக்கள் இயக்கத்தை உருவாக்கி பலப்படுத்துவதே அரசிலுள்ள இனவாத சக்திகளின் தொடரும் ஆக்கிரமிப்பு திட்டங்களை முறியடிப்பதற்கான ஒரே வழிமுறையாகும்.