தரப்படுத்தல்: பார்க்கத் தவறிய பக்கங்கள்

தரப்படுத்தல் பற்றிப் பேசுவோர், இவை குறித்துப் பேசுவது அரிது. இவை பற்றி விரிவாக நோக்குவது, சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கை சமூகங்களின் இருப்பையும் இயல்பையும் இயக்கத்தையும், குறித்தவொரு சித்திரத்தைத் தரவல்லன.

இலங்கையின் புவியியல் நிலைமைகள், விவசாயம், தொழிற்றுறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருந்தபோதும், வடக்கில் போதுமான நிலங்கள் இல்லாமையும் நீடித்துவந்த நிலப்பிரபுத்துவத்தின் எச்சங்களும், ஆங்கிலேயர் காலத்தில் தமிழர்கள், கல்வியைத் தங்கள் வாழ்வுக்கான பிடிமானமாகக் கொண்டனர்.

அமெரிக்க, பிரித்தானிய மிஷனரிகளின் வருகை, இலங்கையின் வடபுலத்தில் தரமான கல்விக்கும் ஆங்கில அறிவுக்கும்  வாய்ப்பானது. இந்த வாய்ப்புகள்  மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு, இலங்கையில் அரச சேவைகளில் வேலைவாய்ப்பு பெற வழி பிறந்தது.  
இதன் காரணமாக, அரசு பணிகளில் தமிழர்கள் அதிக அளவில் முக்கிய பதவிகளை வகிக்க முடிந்தது. கொலனிய இலங்கையில்,  தமிழ் மக்கள் தொகை விகிதாசாரத்தை விட, அதிக எண்ணிக்கையில் அரசாங்க வேலை வாய்ப்புகளைப் பெற்றனர்.

இதை மாற்றியமைக்கும் முனைப்புகள், சுதந்திர இலங்கையில் தொடங்கினாலும், 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம், அதற்கு புதிய வடிவத்தையும் வாய்ப்பையும் கொடுத்தது. அரசின் பிரதான கொள்கைகளில் ஒன்றாக, ‘சிங்களவர்களுக்கு முன்னுரிமை’ என்ற சிந்தனை வலுப்பெறத் தொடங்கியது.

கல்வி ரீதியாகச் சிறுபான்மையினரைக் குறிவைப்பது குறித்துப் பேசப்பட்டாலும், அது, மைய அரசியல் நீரோட்டத்தின் பகுதியாகவில்லை. இப்பின்னணியிலேயே 1970களில் அறிமுகமான பல்கலைக்கழக அனுமதிக்கான புதிய முறைகள், இலங்கையின் முக்கிய தருணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இது சமூக நீதியின் முன்னோடியான செயற்பாடல்ல. பல்கலைக்கழக அனுமதிக்கான அளவுகோல்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்த எதிர்வினைகள், சிங்கள சமூகத்துக்கு எதிரான, உறுதியான நடவடிக்கைகள் என நியாயமற்ற முறையில் விளங்கப்பட்டது. இது உயர்கல்வியில் நிரந்தர நெருக்கடி நிலைமைக்கு வழிவகுத்தது. அவற்றின் தாக்கம், மிகவும் சிக்கலானதாகவும் பிராந்திய ரீதியாகவும் இன ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் வேறுபட்டிருந்தது.

முதலில் அறிமுகமான தரப்படுத்தலின் நியாயமின்மையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தரப்படுத்தல் நியாயமற்றதுடன் பெரும்பான்மை சமூகத்துக்குச் சார்பானது என்ற பார்வையை மாற்றவில்லை.

இலவசக் கல்வியின் விளைவாக, 1960களின் பிற்பகுதியில், இலங்கை கிட்டத்தட்ட முழுமையான கல்வியறிவை அடைந்தது. வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக, 1959ஆம் ஆண்டு தொடக்கம் சிங்களம், தமிழ் மொழிகளில் பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கப்பெற்றது. இருப்பினும் ஏற்றத்தாழ்வுகள் மறையவில்லை.

‘கற்பித்தல் மொழிகளில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் பல்கலைக்கழக முறைமையின் விரிவாக்கம், கிராமப்புற சிங்கள பௌத்தர்களுக்கு அளவு அடிப்படையில் பயனளித்தது. ஆனால், தரமான அடிப்படையில் அல்ல’ என்பதை, பல ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. சமூக விஞ்ஞான கற்கைகள் மற்றும் மனிதநேய கற்கைநெறிகளைப் போன்று அல்லாமல், வேலைவாய்ப்புக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் விஞ்ஞான திட்டங்களில், சிங்கள மாணவர்கள் இன்னும் குறைவாகவே  பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.

1970ஆம் ஆண்டில் ஒரு சதவீத இளைஞர்கள் மட்டுமே, பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்தனர். குறிப்பாக, பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளில் பல்கலைக்கழகத்துக்கு நுழைவதில், மிகப்பெரிய சமூக கௌரவம் இருந்தது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில், மாணவர்களின் பரீட்சை முடிவுகளில், இடைநிலைப் பாடசாலைகளின் தரத்தின் அடிப்படையில், தெளிவான பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.

இடைநிலைப் பாடசாலைகள், தென்மேற்கு கரையோரத்தில் (கீழ்நாட்டு சிங்களவர்கள் வசிக்கின்ற) மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் அதிகம் காணப்பட்டன.

இதற்கு நேர்மாறாக, உள்நாட்டில் முக்கியமாக, கண்டி சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் (அவர்களில் பலர் கிழக்குக் கரையோரத்தில் வாழ்ந்தவர்கள் அல்லது தீவின் பிற பகுதிகளில் சிதறி வாழ்ந்தவர்கள்) ஆகியோருக்கு இடைநிலைக் கல்விக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.

1960 வரை, அனைத்துப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளும் ஆங்கிலத்தில் இருந்தன. இதனால் பல்வேறு இனக்குழுக்களின் மாணவர்களுக்கு, விருப்பமான வாய்ப்புகள் குறைந்தன. இடைநிலைப் பாடசாலைகளில் கற்பித்தல் மொழி ஆங்கிலத்திலிருந்து சிங்களம், தமிழ் ஆகிய சுதேச மொழிகளுக்கு மாறியபோது, ​​இடைநிலைப் பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது. 

பல்கலைக்கழக கல்விக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, இரண்டு புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. எவ்வாறாயினும், பல்கலைக்கழக மட்டத்தில் விரிவாக்கம் முக்கியமாக, கலை மற்றும் மனிதநேயங்களுடன் மட்டுமே இருந்தது. அதேநேரத்தில், பல்கலைக்கழக நுழைவுக்கான போட்டியின் பெரும்பகுதி, அறிவியல் அடிப்படையிலான படிப்புகளில் நுழைவதாக இருந்தது.

1970களில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்திய 70சதவீதமான பாடசாலைகளில், உயர்தர மட்டத்தில் அறிவியலைக் கற்பிக்கக்கூடிய வகுப்புகள் இருக்கவில்லை. அதேநேரத்தில், இனக்குழுக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. பல்கலைக்கழகத் தேர்வில் அறிவியல் பாடங்களில், தமிழர்கள் குழுவாகச் சிறப்பாகச் செயற்பட்டனர்.

இதற்குப் பல காரணங்கள் இருந்தன: ஆங்கிலத்தில் அதிக கல்வியறிவு, யாழ்ப்பாணத்தில் அறிவியல் கற்பிப்பதற்கான விரிவான வசதிகள், வாழ்வாதாரத்துக்கான வேறு வாய்ப்புகள் இல்லாத பகுதியில் அறிவியலைக் கற்க உந்துதல், சனத்தொகையில் 12 சதவீதமான இலங்கை தமிழர்கள், 1970 இல் 35.3சதவீத விஞ்ஞான அடிப்படையிலான பாடநெறிகளுக்கு அனுமதி பெற்றனர்.

பொறியியல் துறையில் 40.8சதவீத இடங்களும் மருத்துவத்தில் 40.9சதவீத  இடங்களும் அவர்களுக்குக் கிடைத்தன. மாறாக, சனத்தொகையில் 75சதவீதமான சிங்களவர்கள், விஞ்ஞான அடிப்படையிலான பாடநெறிகளுக்கு 60.6சதவீத அனுமதியைக் கொண்டிருந்தனர். இதில் 55.9சதவீத பொறியியல் மற்றும் 53.5சதவீத இடங்கள் மருத்துவத்தில் அடங்கும்.

1970ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட தரப்படுத்தலின் விளைவால், மருத்துவ பீடத்துக்கான வெட்டுப்புள்ளி, ​​சிங்கள மூலமானவர்களுக்கு 229 ஆகவும், தமிழ் மூலமானவர்களுக்கு 250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர் சிங்களவரா அல்லது தமிழரா என்பதைப் பொறுத்து, ஆங்கில மூலத்திற்கும் இதே குறைந்தபட்ச மதிப்பெண்கள் பயன்படுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த முறை அடுத்த ஆண்டே கைவிடப்பட்டது. தமிழர்களில் பல்கலைக்கழகத்துக்குத்  தெரிவாவோரின் அளவில், மாற்றங்கள் பெரிதாக நிகழவில்லை. மாறாக, அரசாங்கம் எதிர்பார்த்த சிங்களவர்களை அதிகளவில் பொறியியல், மருத்துவக் கல்விக்கு அனுமதிப்பது சாத்தியமாகவில்லை. 

எவ்வாறாயினும், பேரினவாதத்தின் அரசியல் அதிகாரம், சிறுபான்மையினரைப் பழிவாங்குவதற்குக்  களமிறங்கியுள்ளது என்பதை உணர்ந்த தமிழரின் எதிர்ப்புணர்வு முக்கியமானது.

தரப்படுத்தல் என்பது, தமிழர்கள் தங்கள் சொந்த மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்ற இனவெறி குற்றச்சாட்டுகளுக்கு தவறானதும்  அவசரமானமான பதில் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது.

அறிவியல், மருத்துவப் படிப்புகளில் தமிழ் மாணவர்களின் ‘நியாயமற்ற’ நுழைவு என விவரிக்கப்பட்டதை மட்டுப்படுத்துவதே அதன் நோக்கம் என்பது புலனானதோடு, அது வெளிப்படையாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் சிங்கள நடுத்தர மாணவர்களுக்கு அதிக இடத்தை வழங்குவதாகவும் இருந்தது.

ஒரு வருடம் கழித்து, ஒரு புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது. அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலச்சூழல் முக்கியமானது. மாற்றங்கள், 1971 ஜே.வி.பி கிளர்ச்சியின் விளைவிலானவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இக்கிளர்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் படித்த, வேலையற்ற சிங்கள இளைஞர்கள். கல்வி முறையானது, சமூக மேல்நிலையாக்கத்தை எளிதாக்குவதிலும், உயரடுக்கு குழுக்களுக்கான கல்வி அணுகலை வழங்குவதிலும் பங்கை வகிக்கவில்லை என்று ஜே.வி.பியினர் உணர்ந்தனர்.

ஜே.வி.பி கிளர்ச்சியால், கிராமப்புற சிங்கள நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டது. இது இலங்கையின் கல்விமுறையில் இன்னோர் அத்தியாயத்தைத் தொடக்கிவைத்தது.