தேர்தல் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பது: மக்களின் விருப்பு வாக்கா…? வேறு சிலரின் விருப்பங்களா…?

இத்தனைக்கும் தேர்தல் முடிவுகள் பற்றிய பலரின் எதிர்வு கூறல்களை உண்மையாக்கிய முடிவுகள் வந்திருந்தாலும் முடிவுகள் வந்த பின்பு இதன் பரபரப்பு குறையவில்லை. இது ஒரு அசாத்தியமான நிலமைதான்.

காரணங்கள் பல இருந்தாலும் பாரம்பரிய வலதுசாரிக் கட்சி ஜ.தே கட்சியின் ஒரு ஆசனம் கூட தெரிவு மூலம் பெறாத தோல்வி. அடுத்து பாரம்பரிய கட்சியான சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவிற்குள் ஐக்கியமானாலும் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தை மட்டும் பெற்ற நிகழ்வு.

சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் இன்றியே ஜனாதிபதியாகலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய தேர்தலின் பின்பு பாராளுமன்னத் தேர்தலிலும் பெரும்பான்மையை பெறமுடியும் இதே மாதிரியாக என்பதுவும். மேலும் மூன்றில் இரண்டை அண்மிக்கலாம் ஆதரவுடன் அடையலாம் என்ற தீர்புகள்.

ஜேவிபி போன்ற கட்சிகளின் தேய்வுகள்…வலதுசாரி ஐ.தே கட்சியின் பிரதியீடாக பிரேமதாசாவின் புத்திரரின் ‘எழுச்சி” என்ற விடயங்களையும் குறிப்பிடலாம். இவை எல்லாம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய காரணிகள்.

தமிழர் தரப்பில் 70 வருட சிறப்பாக 40 வருட தமிழ் தரப்பு ஏகபோகம் உடைக்கப்பட்டு ஒரு வகையில் பலதரப்பட்ட (பன்முகப்படுத்தப்பட்ட அல்ல) தெரிவுகளை ஏற்படுத்தியருக்கும் தேர்தல் இது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது முதுகெலும்பை தானே உடைத்த நிலமைகள்.

முஸ்லீம், மலையக கட்சிகள் தமது தனித்துவத்தை இழந்து தேசியக் கட்சிகளுடன் தம்மை அதிகம் அடையாளப்படுத்தி மட்டும் வெற்றிகளைப் பெற்ற விடயம்.

எல்லாவற்றிற்கு மேலாக தேசியக் கட்சிகள் வடக்கு உட்;பட கிழக்குவரை தமது ஆதரவுதளத்தை பெருக்கி வெற்றி பெற்ற நிலமைகள். ஒரு காலத்தில் தேசியக் கட்சிகளின் உறுப்பினர் எனறாலே “துரையப்பா” ஆக பார்க்கப்பட்ட முகத்தை மாற்றி மக்களிடம் ‘ஏற்புடைமைகள்” என்று களங்கள் மாறி இருக்கின்றன.

கூடவே 10 கோடி ரூபாய் செலவு செய்தால்தான் பாராளுமன்ற உறுப்பினரை பெறமுடியும் என்ற பணம் இல்லாவிட்டால் வெல்ல முடியாது என்ற சாமான்ய மக்கள் தேர்தலில் பங்கு பற்றி வெல்லமுடியாத பணக்கார விளையாட்டாக முதலீடாக மாறி அபத்தங்கள் என்பன இந்தப் பரபரப்புகளுக்கு காரணங்கள் ஆகும்.

தேர்தல் நடைபெற்ற ஆகஸ்ட் 5ம் திகதிக்கு மறுதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்கு எண்ணும் பணி மாலை 7 மணிக்கு பெரும்பாலும் முடிவுற்று வெற்றியாளர்களை அறிவித்திருக்கும் நிலமைகள்.

இலங்கையின் எந்தப் பாகத்திலும் இந்த முடிவுகள் பற்றி சச்சரவுகள் சந்தேகங்கள் எழாது..? இருந்த போதும்… யாழ்ப்பாணத் தேர்தல் முடிவுகள் பல சந்தேகங்களை கிளப்பி இருக்கின்றது.

குறிப்பாக ஆகஸ்ட் 6ம் திகதி மாலை 7 மணியளவில் உத்தியோகப்பற்ற முறையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சிறீதரன், தபேந்திரன், சசிகலா என்ற மூவரும் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறியப்படட்டது.

சுமந்திரனின் சாமம் கடந்து 2 மணியளவில் எண்ணும் இடத்திற்கு வந்த பின்பு சிறீதரன், சித்தார்த்தன் சுமந்திரன் என்று அறிவிக்கப்பட்டதாகவும்.. இதுதான் இறுதியானது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு மற்றைய எவரையும் விட சுமந்திரன் மீது அம்பாக பாய்ந்தது
இதற்கு கடந்த தேர்தலிலும் இதே மாதிரியான குழறுபடி நடந்ததாகவும் இம்முறை அவர் சசிகலாவின் வெற்றியை தனதாக்கி கொண்டதாகவும் ஊடகங்கள், இணையங்கள், சுமந்திரன் வெறுப்பாளர்கள் என்று பெண்ணை வஞ்சித்துவிட்டதாக இன்று வரை பாய்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

வாக்கு எண்ணும் நிலையத்தில் பிரசன்னமாக இருந்த தபேந்திரனும், சசிகலாவும் தாம் ஏமாற்றப்பட்டதாக அடித்துக் கூறும் நிலையில் சசிகலாவின் ஊடகப் பிரபல்யம் (உபயம் மாமனிதர் ரவிராஜ்) அதிகம் பேசப்பட்டாலும் தபேந்திரனின் சமூகப் பின்புலமும் ஊடகம் மறுத்த பிரபல்யமும் அவரின் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட்டதை அதிகம் பிரபல்யப்படுத்தவில்லை.

ஆனாலும் இருவரும் தமது தோல்வியை மீள்பரிசீலனை செய்யுமாறு சட்டத்தை அணுகி இருந்தாலும் இதில் வெற்றியை பெறுவது கடினம் என்று திருகோணமலையை சேர்ந்த தேர்தல் சம்மந்;தமான நிபுணத்துவம் பெற்ற ஒருவர் கூறியுள்ளார். அவரை தபேந்திரன் இது விடயமாக அணுகியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

சுமந்திரனின் வெற்றி புலிகளை நிராகரித்துக் கொண்டு வெற்றி பெறலாம் என்பதை நிறுவி விடும் என்பதினால் இதன்பால் வெறுப்பில் உள்ளவர்களும், சசிகலாவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கினாலும் மாவையின் தோல்வியிற்காக யாரும் பேசாது இருப்பது தமிழரசுக் கட்சியின் உண்மை முகத்தை காட்டி நிற்கின்றது.

இரணைமடு நீரை கடலுக்குள் அனுப்பினாலும் அனுப்புவேன் யாழ்ப்பாணியளுக்கு தரமாட்டேன் என்று கூறியவர் அதிக விருப்பு வாக்குகளை மக்கள் வழங்கியிருப்பது பல கேள்விகளை எழுப்பாமல் இல்லை.

யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அப்பால் அவர்களில் பிரிந்து சென்றவர்கள,; தேசியக் கட்சி அங்கஜன் ஈபிடிபி இன்; இந்த முறையும் ஒரு உறுப்பினர் வெற்றி பெற்றது என்பதை வைத்துக் கொண்டும்… இதே போல் மட்டக்களப்பிலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கு அப்பால் வியாளேந்திரன், புலிகளில் இருந்து பிரிந்துவந்த சந்திரகாந்தனின் வெற்றியும் கருணாவினால் தடைப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை வெற்றியையும் வைத்துக் கொண்டு மாற்றம் நிகழ்ந்து விட்டதாகவும்… பன்முகத்தன்மை உருவாகியுள்ளதாகவும் கூறுவதும் சரியா என்றால் இல்லை என்பதே என் பதில்.

பல தரப்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பது பன்முகத் தன்மை என்பதல்ல.

இவர்கள் யாவரும் மேட்டுக்குடி சிந்தனையாளர்களின் பிரநிதிகள். மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகாளகவும் தெரிவு செய்யப்படவில்லை. குறிப்பாக சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை கொண்டவர்களும் அல்ல.

அடிமட்ட மக்களின் பிரச்சனை தன்னகத்தே காவித்திரிந்து தீர்க்கும் புதிய தலமையை நோக்கிய நகர்வா இந்த பலதரப்பட்டவர்களின் வெற்றி என்றால் இல்லை என்பேன்.

வன்னியல் ஈபிடிபி இற்கு கிடைத்த வெற்றி அவர்களின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு சிறப்பாக தேர்தலில் தோன்றி கி.பி இற்கு கிடைத்திருந்தால் சற்றேனும் மாற்றம் பற்றி பேசி இருக்கலாம். கிடைத்திருப்பது முன்னாள் புலிகளின் உறுப்பினருக்கே என்பது இங்கு கவனத்தை பெறுகின்றது.

உறுப்பினர்கள் கட்சி மாறி.. மாறி.. பல கட்சிகளிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் அதுவும் ‘தேசியம்” என்று குறும் தேசியவாதம் பேசுபவர்களும் இணக்க அரசியல் என்று பேசும் இன்னொரு தரப்பிற்கும் அப்பால் ஒன்றும் புதிதாக இம்முறை நடைபெறவில்லை. 40 வருட அரசியலின் பொதுப் போக்கு இதுதான்.

இவர்கள் தமக்கு பிளந்து… பிரிந்து தனித் தனியாக நின்று ஒருவர் இருவராக வென்றுள்ளனர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அதிக ஆசனம் என்பதை எண்ணிக்கையில் குறைவாக பெற்றிருக்கின்றது. அவ்வளவே.

வரும் காலங்களில் இவர்கள் யாவரும் மக்களுக்கான சேவையில் தேவையில் வரும் நிதியில் 40 வீதத்தை தனது பாக்கெட்டுக்குள் வைத்துவிட்டு செயற்படுவார்களா…? அல்லது எல்லாம் மக்களுக்கு என்று செயற்படுவார்களா…? என்பதை பொறுத்தே ஏதாவது..? மாற்றத்தைப் பற்றி பேசமுடியும்.

10 கோடி வரை தேர்தல் வெற்றியைப் பெற இம்முறை செலவு செய்தவர்கள் இதனை மீள் பெறுவதற்கும் அடுத்து வரும் தேர்தல்களில் இந்த அளவிற்கு அல்லது இதற்கு மேலாகவும் செலவு செய்து வெற்றி வாய்பை உறுதி செய்யும் முறமைகளைத்தான் தேர்தல் தொடர்ந்திருக்குமானால் எப்படிக் கூற முடியும் மாற்றம் வந்துவிட்டது என்று. ம்… பார்ப்போம்.

இடதுசாரி சிந்தiனாளர்களை, செயற்பாட்டாளர்கள்(அப்படி யாரும் இருக்கின்றார்களா..? என்று கேட்பதுவும் கேட்கின்றது) ஆதரவுத் தளத்தை மக்கள் பெருக்கி இருந்தார்கள் ஆகின் மாற்றம் ஆரம்பித்துவிட்டது என்று கூறலாம்.

அன்றேல் ‘பழைய குருடி கதவை திறவடி” தான் இத் தேர்தல் முடிவுகளும்.