யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை

இதொன்றும் ஆருடமல்ல. அவதானத்தின்பாற்பட்ட கணிப்பு. அனுப அறிவின் வெளிப்பாடு. இதை மறுத்துரைப்போர் தங்களுடைய தருக்க நியாயங்களை முன்வைக்க வேண்டும். 

நம்முடைய அவதானத்தின் வரைபடம் இங்கே முன்வைக்கப்படுகிறது. 

தற்போதிருக்கும் அரசியற் கட்சிகளும் சரி, அரசியற் தலைவர்களும் சரி இலங்கையில் நல்ல –முன்னேற்றகரமான – மாற்றங்களை உருவாக்கக் கூடிய அடிப்படைப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை. அதற்கான வினைத்திறனும் சிந்தனையும் இந்தத் தரப்புகளிடம் இல்லை. 

இனமுரண்பாட்டுக்கான தீர்வு, பொருளாதார நெருக்கடி, ஜனநாயக மேம்பாடு, நாட்டின் இறைமை என்பவற்றில் நிலைபேறுடைய மாற்றத்துக்கான அரசியல், அதை முன்னெடுக்கக் கூடிய துணிச்சல், அதற்கான அர்ப்பணிப்பு, பிறரையும் பிறவற்றையும் அரவணைத்துச் செல்லக் கூடிய திறன், அதற்கான சிந்தனை, இணைந்து செயற்படக்கூடிய மன விரிவு, ஜனநாயகத்தின் மீதான பிடிமானம் என எவையுமே எந்தத் தரப்பிடமும் இல்லை. (அப்படி எவற்றிடமாவது அல்லது எவரிடமாவது இருந்தால் அதை யாரும் குறிப்பிட வேண்டும்). 

குறைந்த பட்சம் கடந்த காலத்தைப் பற்றிய பரிசீலனையையோ, அதிலிருந்து படிப்பினைகளையோ, நிகழ்காலத்தைப் பற்றிய மதிப்பீட்டையோ கூட இந்தத் தரப்புகள் செய்யத் தயாரில்லை. இன்று ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல், அதிலே ஆர்வமின்றியே உள்ளன. 

பதிலாக வழமையான பசப்பு வார்த்தைகளை – ஏமாற்றுக்களை – அள்ளி இறைப்பதிலேயே  கவனம் கொண்டிருக்கின்றன. 

இத்தகைய நிலையில் எப்படி நாட்டில் மாற்றம் நிகழும்? 

2. 

நாடு இன்று மிகமிக நெருக்கடியான அரசியற் பொறிக்குள்ளும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் சிக்குண்டுள்ளது. இதற்குத் தனியே தற்போது அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்டித் தப்பிவிட முடியாது. தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் –ஆட்சித்தரப்புகள் – ஒவ்வொன்றும் விட்ட குறைபாடுகளும் செய்த தவறுகளுமே இன்று மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. தற்போதைய அரசு இதில் உச்சத்தில் உள்ளது. 

ஆகவே இவற்றின் தவறான அரசியல் கையாள்கையினால்தான் இன்று பொருளாதார நெருடிகளின் மத்தியில் மீளவும் அந்நிய சக்திகளின் பிடிக்குள் நாடு சிக்க வேண்டி வந்துள்ளது. இதுவே இந்தியா, சீனா மற்றும் மேற்குலகு போன்ற வெளிச்சக்திகளின் கீழ் நாட்டை நேரடியாகக் கொண்டு போய் விட்டுள்ளது. 

1948க்கு முன்பு, ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளாக வெளிச்சக்திகள் இலங்கையைத் தமது அதிகாரத்தின் கீழ் நேரடியாக வைத்திருந்தன. அப்பொழுது நமது மக்கள் அந்த அந்நிய சக்திகளுக்காக  உழைத்துக் களைத்தனர். இப்பொழுது நாமே வெளியிலுள்ள ஆதிக்கத் தரப்புகளின் கால்களில் நாட்டைக் கொண்டுபோய் கையளித்திருக்கிறோம். இந்தப் பேரவலத்தையும் மூடத்தனத்தையும் என்னவென்று சொல்வது? 

இதை கவிஞர் திருமாவளவன் அருமையாகச் சொல்லியிருக்கிறார் – 

முந்நூறு ஆண்டுகளின் முன்னே 

எங்கள் நிலத்தில் அவர்களுக்காய் உழுதோம் 

முன்னூறு ஆண்டுகளின் பின்னே 

நாங்கள் உழுகிறோம் அவர்கள் நிலத்தில் அவர்களுக்காய் 

இது புலம்பெயர்ந்தும் அடிமை நிலையை வெளிப்படுத்தும் துயரவரிகள். 

ஆனால் இங்கே நாட்டிலும் இதுதான் நிலைமை. 

முந்நூறு ஆண்டுகளின் முன்னே 

எங்கள் நிலத்தில் அவர்களுக்காய் உழுதோம் 

முன்னூறு ஆண்டுகளின் பின்னே (சுதந்திரம் கிடைத்த பிறகும்) 

நாங்கள் உழுகிறோம் எங்கள் நிலத்தில் அவர்களுக்காய்” 

இது எவ்வளவு வேடிக்கை? எத்தகைய பலவீனம்? என்னமாதிரியான முட்டாள்தனம்! 

3. 

1948க்குப் பின்பு இலங்கை சுதந்திரமடைந்தது. சுதந்திர இலங்கையில் என்ன நடந்தது? 

நாட்டைச் சுயாதீனமான விடுதலைப்பாதையில், முன்னேற்றப்பாதையில் வழிநடத்தவில்லை. பதிலாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வசதியாக இனவாதம் முதலீடாக்கப்பட்டது. சமத்துவத்துவமும் பன்மைத்துவத்துவமும் நிராகரிக்கப்பட்டது. அதிகாரத்துக்கு வந்தோர் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளத் தவறினர். பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த மக்களை மேலும் ஒடுக்க முற்பட்டனர். 

அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறையைக் குறித்த மக்களின் மாற்று அபிப்பிராயங்களையும் எதிர்ப்புணர்வுகளையும் படைகளைக் கொண்டு அடக்க முற்பட்டனர். எல்லாவற்றுக்குமான தீர்வாக இராணுவச் சிந்தனையை முன்னிறுத்தினர். 

இதை எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், 1948க்குப் பிந்திய வரவு செலவுத்திட்டத்தை ஆராய்ந்து கொள்ளுங்கள். உற்பத்திக்கும் சேவைத்துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை விட, அவற்றின் மீது செலுத்தப்பட்ட கவனத்தை விட படைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட –பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட நிதி விகித அடிப்படையில் அதிகமானது. 

இது தவறுகள் எல்லாவற்றையும்  படைகளின் மூலமாகச் சரியாக்கி விடலாம் என்ற இராணுவச் சிந்தனையின் வெளிப்பாடாகும். 

இதற்குச் சமாந்தரமாக மறுபுறத்தில் மோசமான அரசியலமைப்பு வலிந்து உருவாக்கப்பட்டது. 

இதற்கெல்லாம் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ ஆதரவளித்தனர். மக்களின் இந்தத் தவறுதான் மிகப் பெரிய தவறும் இன்றைய தண்டனையுமாகும். 

இதனால் பிரிவினைக் கோரிக்கை வலுப்பெற்றது. கூடவே அரசுக்கும் ஆட்சிக்கும் எதிரான ஜே.வி.பியின் போராட்டம் தொடக்கம் தமிழ் இயக்கங்களின் போராட்டம் வரை உருவாகின. விளைவாக லட்சக்கணக்கான இளைய தலைமுறையினர் (சனங்களின் ஒரு பகுதியினர்) கொன்று குவிக்கப்பட்டனர். அல்லது அரசியற் போராட்டங்களில் தங்கள் இன்னுயிரை இழந்தனர். மட்டுமல்ல, பல ஆயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில் முடக்கமாகினர். ஏனையோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதற்கு நிகராக இன்னொரு தொகுதியினர் – லட்சக்கணக்கானோர் படைகளில் குவிக்கப்பட்டனர். 

ஒரு சின்னஞ்சிறிய நாடு தன் சக்திக்கு மீறியதாக இத்தகைய இழப்பைச் சந்தித்தது. பாருங்கள், மக்களுடைய தவறான அரசியல் ஆதரவு எவ்வளவு மோசமான எதிர்விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்று. 

இது இலங்கையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்திப் பின்தள்ளியது. ஆற்றலும் திறனும் ஆளுமையும் கொண்டோரை உற்பத்தியில் இருந்து விலக்கியது. இங்கே நாம் மிக ஊன்றிக் கவனிக்க வேண்டிய விசயம் ஒன்றுண்டு.  

ஒரு நாட்டின் முக்கியமானவளங்கள் இரண்டாகும். ஒன்று அதனுடைய இயற்கை வளம். இரண்டாவது,அதனுடைய  மனித வளம். இந்த மனித வளமே இயற்கை வளத்தைப் பயன்பொருத்தமாகப் பயன்படுத்தக் கூடியது. அதற்குப் பெறுமானத்தைச் சேர்க்கக் கூடியது. இதிலும் இளைய தலைமுறையின் ஆற்றலும் அறிதிறனும் முக்கியமானது. 

இங்கே 1970க்குப் பின்னர் நடந்த போராட்டங்களிலும் போரிலும் பல லட்சக்கணக்கான இளையோரின் ஆற்றல் வீணடிக்கப்பட்டது. அல்லது திசைமாற்றப்பட்டது. அதாவது உற்பத்திக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் பயனாக அமையவில்லை. 

இதனால் நாடு பிற சக்திகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஒரு பக்கம் போரினால் உண்டான கடன். மறுபக்கம் உற்பத்தியற்ற நிலை. இது இரண்டும் நாட்டுக்குப் பாதகமான சூழலை உருவாக்கியது. 

இதன் இறுதி விளைவாக இன்று  சுதந்திரத்துக்குப் பிந்தி ஆட்சி நடத்தியவர்கள் மீளவும் நாட்டை வெளிச்சக்திகளின் கீழ் கொண்டுபோய் விட்டுள்ளனர். 

இப்பொழுது  இலங்கையில் சீனாவும் இந்தியாவும் நேரடியாக –பகிரங்கமாகவே –  முதலீடுகளைச் செய்கின்றன. நிலத்தைக் குத்தகைக்கு எடுக்க முற்படுகின்றன. இதன் அண்மைய நிகழ்ச்சியாக வடக்குக் கடலில் சீனாவும் இந்தியாவும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதிலும் ஆழக்கடலில் இந்தியாவும் கரையோரக் கடலில் சீனாவும் பங்குகளைப் பெற்றுக் கொள்வதற்குப் போட்டியிடுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. நாம் கடலில் மீன் கூடப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

ஆகவே இதை உணர்ந்துகொண்டு, இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு, எதிர்கால இலங்கையைக் கட்டமைப்பது எப்படி? அதற்கான அடிப்படைகள் என்ன? அதனை முன்னெடுப்பது எப்படி? மாற்ற வேண்டிய விடயங்கள் எவை? அதற்கு மக்களையும் பிற சக்திகளையும் எப்படித் தயார்ப்படுத்துவது? இதற்கான தலைமை எது? அந்தத் தலைமையின் குணாம்சமும் கடமைகளும் (பொறுப்புகளும்) எப்படியிருக்க வேண்டும்? என்றெல்லாம் சிந்திக்கக் கூடிய நிலையில் எந்தத் தரப்பும் இல்லை. 

இன்று நாட்டிலே நான்கு பெரிய தரப்புகள் ஆட்சி அதிகாரத்தை அமைக்கக்கூடிய நிலையில் உள்ளன. ஒன்று ஐ.தே.க. மற்றது சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி. மூன்றாவது, சு.க. நான்காவது பொதுஜனபெரமுன. 

இந்த நான்கிலும் வழமையான சிந்தனைக்கு அப்பால் புதிய மாற்றுக்கள் – மாற்று முறைமைகள் உண்டா? 

ஐதேகவின் மறுபதிப்பே ஐக்கிய மக்கள் சக்தி. சு.கவின் மறுபதிப்பே அல்லது பிந்திய வடிவமே பொதுஜன பெரமுன. 

பிந்தியவை ஐ.தே.கவையும் சு.க வையும் கடக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை. அதிகாரப் போட்டியின் விளைவாக புதிய தோற்றத்தில் உள்ளனவே தவிர, புத்தாக்கமாக இல்லை என்பது நிரூபணம். 

இலங்கையின் தேசிய நெருக்கடிகளான இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி, அந்நிய ஆதிக்கத்துக்கு இடமளியாதிருத்தல் என்பவற்றில் இவை ஆற்றற் குறைவையே கொண்டுள்ளன. 

ஐந்தாவது தரப்பான ஜே.வி.பி இன்னும் ஒரு தேசிய சக்தியாகப் பரிணமிக்கவில்லை. அரை நூற்றாண்டு அரசியற் பாரம்பரிமுடைய அதன் வரலாறு இன்னும் மங்கலாகத்தான் உள்ளது. 

இதே நிலைதான் தமிழ்த்தரப்பிடத்திலும் காணப்படுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக விக்கினேஸ்வரன். விக்கினேஸ்வரனுக்குப் பதிலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி…. என இப்படியே ஒன்றின் மறுபதிப்பாக மற்றது என்ற வகையில் ஒவ்வொன்றும் உள்ளன. 

இதைக் கடந்து சிந்திக்கக் கூடிய நிலையில் எந்தக் கட்சியும் இல்லை. 

ஆகவே தமிழ்ப்பரப்பிலும் மாற்றங்கள் –முன்னேற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளில்லை. 

இதைப்போலவே இன்றுள்ள எந்தத் தலைவர்களும் நாட்டின் எந்த நெருக்கடிக்கும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக் காணக் கூடிய நிலையில் இல்லை. ஐம்பது ஆண்டுக்கும் அதிமான அரசியல் வாழ்வையும் அதிகாரத்தில் 40 ஆண்டுகளுக்கும் குறையாத பொறுப்பைக்கொண்டவர்கள் ரணிலும் மகிந்த ராஜபக்ஸவும் மைத்திரிபால சிறிசேனவும். 

இதைப்போலவே சம்மந்தனும் மாவை சேனாதிராஜாவும். 

இதற்கு அடுத்தாக வரக் கூடியவர்கள் என்று எதிர்பார்க்கக் கூடியவர்களும் போதாமைகளோடுதான் உள்ளனர். சஜித், சம்பிக்க ரணவக்க, நாமல் ராஜபக்ஸ எனச் சிங்களத் தரப்பிலும் சுமந்திரன், சாணக்கியன், கஜேந்திரகுமார்  எனத் தமிழ்த் தரப்பிலும் உள்ளவர்களின் மனப்பாங்கையும் ஆற்றலையும் நன்கறிறோம். இவர்கள் புதிதளிக்கும் திறனுடையோரில்லை. இப்போதிருக்கும் அரசியலின்  – சிந்தனையின் தொடர்ச்சியாக இருக்கிறார்களே தவிர, புதிய போக்கொன்றை உருவாக்கக் கூடியவர்களாக இல்லை. பழைய –பழகிய வழித்தடத்தில் ஓட விரும்பும் குதிரைகளே! 

விலக்காக இருந்திருக்க வேண்டிய ஜே.வி.பி தனக்குள் உட்சுருண்டு கொண்டிருக்கிறது. அது விரிந்து ஒரு தேசிய சக்தியாக மாறியிருக்க வேண்டும். அதற்கான பக்குவத்தையும் ஆற்றலையும் அது இழந்து விட்டது. அனுரகுமார புதிய உள்ளடக்கமொன்றுக்குச் செல்ல வேண்டும். அவர் நேர்மையான தலைவராக இருக்கிறார் என்பது உண்மை. ஆனால் தன்னையும் தன்னுடைய கட்சியையும் விரித்து இலங்கைக்கான சக்தியாக மாற்ற வேண்டும். மாறிக் கொள்ள வேண்டும். 

ஆனால், இதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. 

ஆகவே சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கை, வரவர பிற சக்திகளின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது என்ற எளிய உண்மையைக் கூட –ஆபத்தான யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் எவையும் இல்லை என்பதே உண்மையாகும். 

இன்று வெளிப்படையாக இந்தியாவும் சீனாவும் ஆக்கிரமிப்பதற்கான பொறிகளை முன்னிறுத்திச் செயற்படுகின்றன. பிற வல்லாதிக்கச் சக்திகளும் தங்கள் கரங்களை இலங்கையில் வலுப்படுத்த முயற்சிக்கின்றன. இது ஒரு கூட்டு நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதை எப்படித் தடுப்பது என்பதில் திறனுள்ள எந்தப் பொறிமுறையும் எவரிடத்திலும் இல்லை. 

ஆனால் என்னதான் அழிவு வந்தாலும் நமக்குள்ளே ஒரு போதும் இணங்கிக் கொள்ள மாட்டோம். பதிலாக உலகச் சக்திகளிடம் அடிமைப்பட்டுக் கொள்வோம் என்பதே இலங்கையர்களின் கொள்கை. 

இதையே வெளிச்சக்திகள் தமக்கு வாய்ப்பாக்கிக் கொள்கின்றன. 

முக்கியமாக பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்ற புரிதலே பல தரப்புகளிடமும் இல்லை. அதிலும் முதல்நிலை அரசியற் சக்திகளாக உள்ள எந்தத் தரப்பிடத்திலும் இந்தப் புரிதல் இல்லை. இருப்பதெல்லாம் இனவாதம் மட்டுமே. அதிலிருந்தே ஒவ்வொரு தரப்பும் தம்மைக் கட்டமைத்துள்ளன. அதிலிருந்தே தமக்கான தருக்க நியாயங்களை உருவாக்கிக் கொள்கின்றன. 

இப்படியான சூழலில் எப்படி மாற்றங்கள், நல் விளைவுகள் உருவாகும்? 

இப்பொழுது சம்பிக்க ரணவக்க புதியதொரு சக்தியாக முன்னெழுவதற்கு முயற்சிக்கிறார். மாற்றத்தின் புதிய நாயகன் என்று ஒரு தரப்பு சம்பிக்கவைக் கட்டமைக்க முயற்சிக்கிறது. 

இதைப்போலவே சஜித் பிரேமதாசவும் நாடு முழுவதிலும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அவருக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் திரள்கிறது. 

இருவரிடத்திலும் ஒரு புதிய சேதியைக் காண முடியவில்லை. ஆனால் நாட்டில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடியையும் அரச எதிர்ப்புணர்வையும் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விளைகிறார்கள். இதற்கு வாய்ப்பாக தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க விரும்பும் பிற சக்திகளும் பின் தூண்டல்களைச் செய்கின்றன. 

இதொன்றும் புதியதல்ல. 

கடந்த காலத்திலும் இதைப்போல நெருக்கடிகளின்போது அதிகாரத்திலிருக்கும் அரசுக்கு எதிராக மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்ற குரலோடு பல சக்திகள் எழுந்து வந்திருக்கின்றன. 

அண்மைய உதாரணம், கடந்த நல்லாட்சிக்கான அரசாங்கமாகும். 

இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு, நல்லிணைக்கம், பகை மறப்பு, பொறுப்புக் கூறல், புதிய அபிவிருத்திப் பாதை என்று பல அழகிய பிரகடனங்களோடு அதிகாரத்துக்கு வந்தது. 

இதற்குச் சர்வதேச ஆதரவு என்ற வகையில் இந்தியா – மேற்குலக ஆதரவும் இருந்தது. 

ஆனால், இறுதியில் என்ன நடந்தது? என்பது எல்லோருக்குமே தெரிந்த சங்கதி. 

நான்கு ஆண்டுகாலமாக நடந்த காலம் கடத்தல், இழுத்தடிப்பு என்பதற்கு அப்பால் எதுவுமே நிகழவில்லை. 

அதைப்போன்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்கவே – மாற்றத்தின் நாயகர்களாக உருவாகி விடலாம் என்றே சம்பிக்கவும் சஜித்தும் முயற்சிக்கிறார்கள். 

இதெல்லாம் எதைத் தரப்போகின்றன? 

இவ்வாறே தமிழ் அரசியலும் நாறிப்போய்க் கிடக்கிறது. 

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட ஒன்றிணைய முடியாமல் தமிழ்க் கட்சிகள் உள்ளன. 

இந்தச் சீரில் 13க்கு மேலே சென்று சமஸ்டி, தனிநாடு என்ற கனவுகள், கூவுதல்கள்  வேறு. 

இதையிட்டுச் சிரிப்பதா? அழுவதா?