சியோனிசத்தை முற்றாகத் தோற்கடிக்க பலஸ்தீனியர்கள் ஐக்கியப்பட வேண்டும்

இந்த மேற்குக்கரை நிர்வாகம் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கீழுள்ளது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட முன்னர், தற்போதைய இஸ்ரேல் உள்ளடங்கிலான பலஸ்தீனம் என்ற மண்ணில் பரந்து வாழ்ந்த மக்கள், தற்போது காசாவிலும் மேற்குக்கரையிலுமே வாழ்கிறார்கள். பலஸ்தீன மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, அந்நிலங்களில் யூதர்கள் குடியேற்றப்பட்ட தற்போதைய இஸ்ரேலின் நிலப்பரப்பு 22145 சதுர கிலோமீற்றராக உள்ளது என்றால், பலஸ்தீன மக்கள் எவ்வளவு சிறிய நிலப்பரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பது புரியும்.


ஹமாஸ் அமைப்பின் இராணுவம் ஒக்ரோபர் 7ந் திகதி இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடாத்தினார்கள். இந்தத் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவமும் பொதுமக்களுமாக குறைந்தது 1400 பேர் உயிரிழந்தும் 4000 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், காசா மற்றும் மேற்கு கரையோரம் வாழும் பலஸ்தீன மக்கள் மீது பல ஆயிரக்கணக்கான விமானக் குண்டுகளையும் எறிகணைகளையும் வீசி வருகின்றது.

இதன் உச்சக்கட்டமாக ஒக்ரோபர் 17ந் திகதி காசாவின் மருத்துவமனையொன்று எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி 471 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 13 நாட்களாகத் தொடரும் இஸ்ரேலின் கண்மூடித்தனமான இத்தாக்குதல்களில் (இத்தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கும் கணம்வரை) மொத்தமாக 4200 பேர் கொல்லப்பட்டும் 14300 பேர் வரையில் காயமடைந்துமுள்ளனர்.


பலஸ்தீன மண்ணில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்களினதும், அவர்களை சூழ்ந்து வாழ்ந்த அரபு மக்களினதும் அனுமதியின்றி, உலக வல்லரசுகளினால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக, 75 ஆண்டுகளாக பலஸ்தீன மக்கள் போராடி வருகின்றனர். இஸ்ரேலிற்கு பக்கபலமாக எப்போதுமே அமெரிக்கா இருப்பதால் பலஸ்தீன மக்களால் எதுவுமே செய்ய முடியாதிருக்கின்றது. அத்தோடு பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸ்ரேலிற்கு உறுதியாக தமது ஆதரவையளித்து வருகிறார்கள்.


இரண்டாம் உலகமகாயுத்தத்தில் ஹிட்லரின் நாசிப்படைகள் ஐரோப்பாவில் 6 மில்லியன் மக்களைக் கொன்றதற்கு பரிகாரமாகவே ஆயிரக்கணக்கான வருடங்களிற்கு முன்னர் யூதர்கள் வாழ்ந்த மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூறி வந்தாலும், உண்மை அதுவல்ல. 1917 ஆம் ஆண்டிலேயே பலஸ்தீனத்தை காலனியாக வைத்திருந்த பிரித்தானியா யூதர்களுக்கு என்றொரு நாட்டினை பலஸ்தீனத்தில் உருவாக்கித் தருவதாக பிரகடனம் செய்திருந்தது.


முதலில் அரபு மற்றும் பல முஸ்லீம் நாடுகள் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்காது, பலஸ்தீன மக்களுக்கு ஆதரவினை வழங்கி வந்தார்கள். ஆனால் அமெரிக்கா அந்நாடுகளிடையேயும் பிளவுகளை ஏற்படுத்தி தன்வசப்படுத்தியதோடு, இஸ்ரேலை அங்கீகரிக்கப் பண்ணி பலஸ்தீன மக்களின் போராட்டத்தையும் தன்னால் முடிந்தளவிற்கு பலவீனப்படுத்தி வருகின்றது.


போராட்டம் என்று வந்தால் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தவிர்க்க முடியாதது. இதனால் பலஸ்தீன மக்களுக்காக பல்வேறு குழுக்கள் ஜனநாயக ரீதியாகவும் ஆயுதமேந்தியும் போராடி வருகின்றன. இவற்றுள் பலஸ்தீன விடுதலை இயக்கமும் ஹமாஸ் இயக்கமும் ஒப்பீட்டளவில் பெரிய அமைப்புகளாக உள்ளன. 10 ஆயுதப் போராட்ட அமைப்புகள் இணைந்து 1964 ஆம் ஆண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தை உருவாக்கினார்கள்.

இஸ்ரேலை அழித்து பலஸ்தீன தேசத்தை உருவாக்குவதையே பலஸ்தீன விடுதலை இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது. பின்னர் 1993 இல் இஸ்ரேலுடன் ஒஸ்லோவில் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டு, பலஸ்தீன மண்ணில் இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்தார்கள்.

இப்போது பலஸ்தீன விடுதலை இயக்கம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் செல்வாக்கைப் பெறுவதற்காக தன்னை ஒரு ஜனநாயக அமைப்பாக நிலை நிறுத்தியுள்ளது. பலஸ்தீன விடுதலை இயக்கம் வன்முறைப் பாதையை கைவிடும் காலகட்டமாகிய 1987 ஆம் ஆண்டிலேயே, ஹமாஸ் என்ற புதிய ஆயுதப் போராட்ட இயக்கம் தோன்றியது. தற்போது ஹமாஸ், காசாப்பபகுதியில் மாத்திரமன்றி மேற்கு கரையிலும் பலஸ்தீன மக்களின் அதிக ஆதரவு கொண்ட அமைப்பாக விளங்குகின்றது.

பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த மேற்குலக நாடுகள், ஒரு போராட்டத்தை பலவீனப்படுத்தி தம்வசப்படுத்த, அதனையே பிரயோகிக்கின்றனர். முதலில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செல்வாக்கை முறியடிக்க ஹமாஸை பயன்படுத்த முயற்சித்தார்கள். இதனால் இரு பகுதியினருக்குமிடையே அவ்வப்போது வன்முறை மோதல்களும் நிகழ்ந்தன. இப்போது ஹமாஸின் வளர்ச்சியைப் பார்த்து, அதற்கெதிராக பலஸ்தீன விடுதலை இயக்கத்தை நிறுத்தியுள்ளனர்.

அதாவது ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி, பலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக பலஸ்தீன விடுதலை இயக்கதத்துடன் மாத்திரமே ராஜதந்திர உறவுகளை பேணி வருகின்றனர்.
ஹமாஸின் பாரிய தாக்குதலால் இஸ்ரேல் மாத்திரமன்றி இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் நிலைகுலைந்து போயுள்ளனர். காசா மீது தரைமார்க்கமான தாக்குதலை விரைவில் மேற்கொள்ளப் போவதாக இஸ்ரேல் பயமுறுத்திய வண்ணமுள்ளது.

அதே நேரத்தில் பலஸ்தீனியர்களும் இஸ்ரேலுக்கு சமபலமாக ஆயுதந்தாங்கி போராட முடியும் என்ற உத்வேகத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. அதாவது 75 வருட கால பலஸ்தீன மக்களின் துயரங்களுக்கு முடிவு காணும் தருணம் நெருங்கிவிட்டதாகவே அவர்களும், அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் உலக நாடுகளில் வாழும் மக்களும் நம்பத் தொடங்கி விட்டார்கள். இந்நேரத்தில் பலஸ்தீனியர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தமது கருத்து வேறுபாடுகளை மறந்து உறுதியாக ஐக்கியப்பட்டுப் போராட வேண்டும் என்பதே.

வானவில் இதழ் நூற்றுஐம்பத்துநான்கினை முழுமையாக வாசிப்பதற்கு:

https://manikkural.files.wordpress.com/2023/10/vaanavil-154_2023-2.pdf