சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் மீண்டும் ஒருமுறை உலக அளவில் பேசுபொருளாகியது!

சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் காலனில் பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார் பகவந்த் மான். அதனால் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் மீண்டும் ஒருமுறை உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எமது வீட்டில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் படம் உள்ளிட்ட இந்திய சுதந்திர போராட்ட வீர்கள் பலரது படங்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த நூல்கள் இருந்தமையும், தந்தையார் பண்டிதர் நடராஜா, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஸ் சந்திரபோஸ், சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் ஆகியோர் மீது அதீத பற்றுக்கொண்டிருந்தமையும், அதுபற்றி எம்மோடு உரையாடுவதும், ஞாபகங்களாக நினைவில் வருகின்றன. (என் அண்ணா குமரனுக்கு மற்றுமொரு பெயர் சுபாஸ் சந்திரபோஸ்)

இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளர் ஆகவும் இருந்தவர் பகத் சிங் (Bhagat Singh, 28 – 09 1907 – 23 – 03 – 1931). அதனால் அவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவரை சில வரலாற்றாசிரியர்கள், இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் குறிப்பிடுவார்கள்.

பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய இந்திய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங், இளவயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்கள் பற்றிய தேடலில் ஈடுபட்டு, பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டதோடு, பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டவர்.
அதனால் விரைவாகவே, இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.

பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.

இத்தகைய சிறப்புறு மாந்தரின் கிராமத்தில் இன்று நடக்கும் பகவந்த் மானின் பதவியேற்பு நிகழ்வில் 4 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

ஊழல் ஒழிப்பை கையிலெடுத்து அதற்கான போராட்டங்களை நடாத்தி, ஆம் ஆத்மி ஊடாக டில்லியில் ஆட்சியை பிடித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்.
லாப் சிங்கின் தாயும், துப்புரவுத் தொழிலும் துடைப்பமும்…

பஞ்சாப்பின் பதார் தொகுதியில் 37,558 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் செல்போன் திருத்துணரான ஆம்ஆத்மி வேட்பாளர் லாப் சிங்கிடம், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னி தோல்வியடைந்தார்.
லாப்சிங் அரசியல் பின்புலம் இல்லாதவர், கோடீஸ்வரரும் அல்ல. எனினும் பெரு மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களையும், கொண்டிருந்த முன்னாள் முதல்வரை தோற்கடித்துள்ளார்.

அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து கிராம மக்களுடன் லாப்சிங் தொடர்பில் இருந்து மக்கள் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி இருந்தார். லாப் சிங்கின் தாய் பல்தேவ் கவுர், உகோக் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக இருக்கிறார்.

இந்த நிலையில் ‛‛பணம் சம்பாதிக்க நாங்கள் எப்போதும் கடினமாக உழைத்து வருகிறோம். எனது வாழ்க்கையில் துடைப்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில் எனக்கு வாழ்வளித்த இந்த துடைப்பம் (ஆம்ஆத்மி சின்னமும் துடைப்பம் தான்) தற்போது என் மகனை சட்ட மன்ற உறுப்பினராக மாற்றியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதல்வரை எதிர்த்து மகன் நிறுத்தப்பட்டாலும் அவன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது வெற்றி பெற்றுள்ளான். ஆனாலும் நான் தொடர்ந்து பள்ளியில் துப்புரவு பணி செய்வேன்” என அந்ததாய் கூறுகிறார்.

அரசியலில் குதித்தால், அதுவும் MP ஆக, பிரதேச, நகர, மாநகர, மாகாண சபை உறுப்பினர்களாக – அமைச்சர்களாக வந்தால், அப்பன், பெரியப்பன் சித்தப்பன், மாமன், மச்சான் என்று குடும்பங்களாக, தடி எடு தண்டெடு என கோலோச்சகிற காலத்தில் ”வாழ்க்கை கொடுத்த துடைப்பத்தை கைவிடேன்” என்கிற தாயும் இருக்கிறார் என்பது அதிசயமே!