பாலஸ்தீன விடுதலைக்கான போரின் புதிய பரிமாணம்: பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம்

அல் அக்சா ப்ளட் – Al Aqsa Flood என்று பெயரிலியே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியது. காஸா மக்களின் புனிதத்தலமான அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலிய இராணுவப் பொலிஸார் நுழைந்து சோதணை நடத்திய அத்துமீறலுக்காகவே இத்தாக்குதல் நடத்தப்படுவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் நுழைந்து இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்காகவே அன்றைய பிரதர் இந்திராகாந்தி சீக்கிய மெய்பாதுகாப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அல் அக்சா மசூதி மட்டுமல்ல தொடர்ச்சியான மிக மோசமான அடக்குமுறை இத்தாக்குதலுக்கு காரணமாய் அமைந்துள்ளது.

1948 மே 14இல் அமெரிக்காவின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப் பாரிய தாக்குதல் இதுவாகும். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கி மதில்களை எழுப்பி இருந்தது. இம்மதில்கள் உடைக்கப்பட்டு தரையாலும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியும் கடலாலும் ஹமாஸ் தாக்குதலை நடத்தி இருந்தது. இத்தாக்குதல்களில் 25க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினர், பொலிஸார் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னும் பல நூறுபேருக்கு என்ன நடந்தது என்பது உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.

இஸ்ரேலின் வரலாற்றில் இவ்வாறான பெரும் தொகை இழப்பு அந்நாட்டுக்கு முன்எப்போதும் ஏற்பட்டதில்லை. உலகின் பாதுகாப்பு மிக நவீனமயமாக்கப்பட்டு, மிகப் பலமான, மிக வலுவான புலனாய்வு கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருக்கும் இஸ்ரேல் முற்றிலும் எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். அவர்கள் புலனாய்வுக்கும் பாதுகாப்புக்கும் கொட்டிய பில்லியன் டொலர்கள் எவ்வித பயனுமற்றதாக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதரவையும் ஈரானின் ஆதரவையும் தவிர தொழில்நுட்பமோ பணபலமோ இல்லாமல் மிக இரகசியமாக இவ்வளவு பெரிய தாக்குதலை உலகின் மிகப் பலமான பாதுகாப்பான நாட்டுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல் இஸ்ரேலையும் அதன் ஆதரவு சக்திகளான அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் உலுப்பியுள்ளது என்றால் மிகையல்ல. மனித உரிமைகள் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இஸ்ரேலின் பாலஸ்தினியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பை கண்டிப்பதில்லை. ஹமாஸ் றொக்கட் தாக்குதலை நடத்தி ஓரிரு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டால் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடாத்தி பல நூறு பலஸ்தீனியர்களை படுகொலை செய்வர். இப்பலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது பற்றி மேற்கு நாடுகள் அலட்டிக்கொள்வதில்லை. இப்பலஸ்தினியர்களுக்கு மனித உரிமைகள் இருப்பதாகவே மேற்கு நாடுகள் கருதுவதில்லை.

தற்போதைய தாக்குதல் தொடர்பில்: இஸ்ரேல் மிக மோசமான பதில் தாக்குதலை நடத்தும் என்றும் தங்கள் பதிலடியில் ஹமாஸின் இடங்களை சுக்குநூறாக்குவோம் என்றும் ஆட்சியில் உள்ள வலதுசாரி இனவாதத் தலைவரான பிரதமர் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காஸாவில் உள்ள மக்களை வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் காஸா உலகின் சனத்தொகை அடர்த்தி மிகக் கூடிய இடம் மட்டுமல்ல கடந்த 17 ஆண்டுகளாக இஸ்ரேலின் முற்றுகைக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலையாகவும் சர்வதேசத்தினால் உணரப்படுகிறது. இஸ்ரேலிய இனவாதப் பிரதமர் காஸாவை முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு அவர்களை வெளியேறும்படி கோரியதை எந்த மேற்கு நாடுகளும் கண்டிக்கவில்லை.

இனவாதப் பிரதமர் நெத்தன்யாகு காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு தயாராகுனிறார் என்கின்ற அச்சம் அரபுலக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அண்மைய தாக்குதலில் ஹமாஸ் படையினர் தாங்கள் இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவில்லை என்றும் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களையே தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்கள் அல்ல என்றும் ஆயதம் தாங்கிய ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் அவர்கள் சர்வதேச வரையறுப்புகளின் படி பொதுமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்றும் ஹமாஸ் தனது தாக்குதலையும் படுகொலைகளையும் நியாயப்படுத்தி உள்ளது. இத்தனை வருடங்களாக இஸரேலிய படைகள் பாலஸ்தினியர்களை வகைதொகையில்லாமல் படுகொலை செய்து வருகின்றது. அதற்கு இவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்றும் ஹமாஸ் கேள்வி எழுப்புகின்றது.

பாலஸ்தினிய – இஸ்ரேல் யுத்தத்தின் பின்னணி:

யுதர்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்த யுதர்களுக்கு பாலஸதீனத்தில் ஒரு நாட்டை உருவாக்க சியோனிச இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலேயே பாலஸ்தீனமும் இருந்தது. காலனித்துவ நாடுகள் அனைத்தும் கூறுபடுத்தப்பட்டு சூறையாடப்பட்டும் தங்கள் கால்களில் நிற்க முடியாமல் பலவீனப்படுத்தப்பட்டும் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஆக்கப்பட்டமை வரலாறு. இந்த காலனித்துவ சுரண்டலின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் இன்றும் மூன்றாம் உலக நாடுகள் யுத்தம், வறுமை போன்றவற்றினால் சீரழிந்து கொண்டிருக்கின்றது. ஆபிரிக்க கவிஞனொருவன் சுட்டிக்காட்டியது: அவர்கள் வரும்போது எங்களிடம் எல்லாம் இருந்தது. அவர்கள் பைபிளைக் கொண்டு வந்து தந்துவிட்டு எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இப்போது எங்களிடம் பைபிள் மட்டும் தான் இருக்கின்றது. வேறு எதுவும் இல்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவ்வாறு பாதிக்கப்பட்ட பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாலஸ்தினத்தில், அமெரிக்காவின் உதவியுடன் 1948 மே 14 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. பாலஸ்தின மண் பறிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் மத்திய கிழக்கு நாடுகள் மிகுந்த அதிருப்தியடைந்திருந்தன. அன்று முதல் மதிய கிழக்கு மிகப் பதட்டமான யுத்தப் பிரதேசமாகவே இருந்து வருகின்றது. இப்பகுதி பல யுத்தங்களைக் கண்டுள்ளது. ஆனால் இந்த யுத்தங்கள் எதிலுமே இஸ்ரேலியர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் 24 மணி நேரத்தில் இவ்வளவு பெரும் இழப்பையோ தாக்குதலையோ சந்தித்து இருக்கவில்லை. இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே நடந்த யுத்தத்தை ஹமாஸ் தற்போது இஸ்ரேலுக்கு உள்ளேயே கொண்டு சென்றுள்ளது.

பாலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் அம்மண்ணில் வாழ்ந்த பாலஸ்தினிய மக்களை இஸ்ரேல் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தி வந்தனர். அப்பகுதியில் வாழ்ந்த பாலஸ்தினியர்கள் வேறுநாடுகளுக்கு கல்வி மற்றும் நோக்கங்களுக்காகச் சென்ற போது அவர்கள் மீண்டும் தங்கள் பிரதேசங்களுக்கு வரும் உரிமை மறுக்கப்பட்டது. இஸ்ரேல் கடந்த 75 ஆண்டுகளாக பலஸ்தினியர்களை இனச்சுத்திகரிப்புச் செய்வதிலேயே குறியாக இருந்தது. இன்றும் தொடர்கின்றது.

இஸ்ரேலினுடைய புலனாய்வுப் படை மொசாட் அதன் படுமோசமான கொலைத் திட்டமிடல்களுக்கு மிகப் பெயர்பெற்றது. அவர்களையே ஹமாஸ் உச்சிக்கொண்டு இத்தாக்குதலை ஏற்படுத்தியதுடன் தொடர்ந்தும் ஆயுத தளபாடங்களை மீள் விநியோகம் செய்து புதிய ஆக்கிரப்பு நகரம் ஒன்றைக் கைப்பற்றி உள்ளனர்.

ஐந்து தசாப்தங்களுக்கு முன் இஸ்ரேலின் யொம் கிப்பூர் பகுதியில் எகிப்தின் அன்வர் சதாத் யுத்தத்தைத் தொடுத்த அதே பாணியில் ஹமாஸ் அதே தினத்தில் யுத்தத்தைத் தொடுத்தனர். முன்னைய யுத்தத்தில் எகிப்து தோல்வியடைந்தது. இந்த யுத்தத்தில் ஹமாஸினால் ஒரு போதும் யுத்தத்தை வெல்ல முடியாது. ஹமாஸ் ஒரு ஆயத அமைப்பு மட்டுமே.

ஆனால் ஹமாஸ் பாலஸ்தினிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் உடனும் மேற்கு நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டிருந்த போதும் மத்திய கிழக்கு அராபிய மக்கள் பாலஸ்தினியர்கள் அனைவருமே ஹமாஸின் தாக்குதலைக் கொண்டாடுகின்றனர். பாலஸ்தின மக்களை தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கினால் இவ்வாறான தாக்குதல் தவிர்க்க முடியாது என்றும் இந்தப் பிரச்சினையின் காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழும்ப ஆரம்பித்துள்ளது.

மூனிச் ஒலிம்பிக் தாக்குதல்:

இஸ்ரேலின் கறுப்பு சனி ஆன தாக்குதலை ஹமாஸ் மிக நிதானமாக பதிவு செய்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டது. தற்போது உலகின் அனைத்து ஊடகங்களின் கவனமும் திசை திருப்பப்பட்டுள்ளது. உக்ரைன் யுத்தத்தைப் பற்றியோ, அப்கானிஸதான் நிலநடுக்கத்தில் இரண்டாயிரம் பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டது பற்றியோ ஊடகங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஹமாஸ் உலகத்தை பாலஸ்தீனியர்களின் ஒடுக்குமறை மீது மிகத் திட்டமிட்டு திருப்பியுள்ளது.

இவ்வாறான செயலை பாலஸ்தீன விடுதலை அமைப்பு சார்ந்த குழவொன்று 1972இல் மேற்கொண்டது. 8 கறுப்பு செப்ரம்பர் படையணி ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற மூனிச் நகர விளையாட்டுத் திடலுக்குள் புகந்து இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை படுகொலை செய்து 11 வீரர்களை பணயக்கைதிகளாக கைப்பற்றினர். இறுதியில் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சி தோல்வியடைய பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர். கறுப்பு செப்ரம்பர் படையினர் ஐவரும் கொல்லப்பட்டனர். மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் சில வாரங்களில் பாலஸ்தினிய படைகள் ஜேர்மனியின் லுப்தான்ஸா எயர்லைனைக் கடத்தி வைத்து தங்கள் வீரர்களை மீட்டனர்.

இவ்வாறு ஒரு இஸ்ரேலிய இராணுவ வீரரைக் கடத்தி சில நூறு தங்கள் வீரர்களை ஹமாஸ் மீட்டிருந்தது. தற்போது பிந்திக் கிடைக்கும் செய்திகளின் படி ஹமாஸ் 50 இராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். இது இஸ்ரேலிய இராணுவத்துக்கும் மொசாட்டுக்கும் மிகப்பெரும் தலையிடியாக அமைய உள்ளது.

பாலஸ்தீனப் போராட்டமும் ஈழப் போராட்டமும்:

அன்றைய இலங்கை ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஜே ஆர் ஜெயவர்த்தன மிகுந்த இனவாதி என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இனவாதக் கட்சியாகவே தன்னை கட்டமைத்திருந்தது. ஜே ஆருக்கும் அவரது படைக்கும் ஆலோசனையும் உதவியும் நல்கியது மொசாட். அன்றும் இன்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கு நாடுகளின் சார்பையே எடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இவர்களின் நெருங்கிய நட்புகள். நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் கொல்லப்படுவான் என்ற மொசாட்டின் ஆலோசனை எண்பதுக்களில் அன்றைய பத்திரிகைகளில் இடம்பிடித்திருந்தது. இந்தத் தந்திரத்தைத் தான் மொசாட் பாலஸ்தினியர்கள் மீது இன்றும் மேற்கொள்கின்றது. ஜே ஆர் ஜெயவர்த்தனவின் காலத்திலேயே மிக மோசமான இனப்படுகொலைகளும் இனச் சுத்திகரிப்பும் இடம்பெற்றது.

மாறாக இடதுசாரி நிலைப்பாட்டோடு செயற்பட்ட ஈரோஸ் (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை அமைப்பு) அமைப்பின் லண்டனில் வாழ்ந்த ஸ்தாபகர் இரத்தினசபாபதி மற்றும் புளொட் (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) செயற்பாட்டாளர் மகா உத்தமன் ஆகியோர் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு தொடர்பைப் பெற்று தங்களுடைய வீரர்களை பயிற்சிகளுக்காக பாலஸ்தீனம் அனுப்பி வைத்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு சிலரும் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஈரோஸ் அமைப்பில் அன்றைய நாட்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் இல்லாததால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே கூடுதலாக இப்பயிற்சிகளைப் பெற்றனர்.

இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் பிஎல்ஓ பயிற்சி எடுத்தனர். அவர்களில் சிலர் இன்னமும் மேற்குநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். இவர்களுடைய பெயர்களுக்கு முன் பிஎல்ஓ என்ற அடைமொழியும் இருக்கும். பாலஸ்தீனத்தில் முதலாவது இஸ்ரேலிய ராங்கை குண்டு வைத்து தகர்த்தது பயிற்சிக்குச் சென்ற புளொட் வீரர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கும் (ரெலோ) தவிர்ந்த ஏனைய இடதுசார்புடைய போராளிக்குழக்கள் மத்தியில் பாலஸ்தீன விடுதலைக்கு சார்பான நிலைப்பாடு இருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டமும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் சமாந்தரமாகப் பயணித்த காலம் அது. பாலஸ்தின விடுதலை அமைப்பின் அப்போதைய தலைவர் யஸீர் அரபாத் ஈழப்போராளிகள் மத்தியில் மதிக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்த காலம்.

ஈழப் போராளி அமைப்புகள் மத்தியில் இருந்த பிளவுகள் போன்ற பாலஸ்தீனப் போராளிகள் மத்தியிலும் பல பிரிவுகள் காணப்பட்டது. அவர்களிடையே முரண்பாடுகள் பகை முரண்பாடுகளும் இருந்தது. சில படுகொலைகளும் இடம்பெற்றுள்ளது. ஆனால் தமிழீ விடுதலைப் புலிகள் போன்று ஏனைய அமைப்புகளை முற்று முழுதாக துடைத்து அழிக்கின்ற அதிகார வெறி பாலஸ்தின விடுதலை போராட்டத்தில் இருக்கவில்லை. மேலும் அங்கு விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அளவுக்கு ஈழவிடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படவில்லை.

மக்கள் வேறு விடுதலைப் போராளிகள் வேறு என்ற நிலை எப்போதும் இருந்தது. சர்வதேசச் சூழல் அதனைக் கையாள்கின்ற அறிவுநிலை ஈழ விடுதலைப் போராட்டத்தை புலிகள் ஏகபோகமாக்கிய பின் இருக்கவில்லை. 1991ற்கு முன் புலிகள் அனைத்து ஈழ விடுதலை அமைப்புகளையும் இல்லாதொழித்து முஸ்லீம்களையும் விரட்டியடித்து இனச்சுத்திகரிப்புச் செய்தனர். அதனால் 2009இல் புலிகளைக் காப்பாற்ற எவரும் இருக்கவில்லை.

தற்போது ஹமாஸ் உடைய தாக்குதலை வரவேற்று இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் முட்டாள்கள் என்று குறிப்பிட்ட ஹிஸ்புல்லா லெபனானின் எல்லையில் இருந்த இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தாங்கள் இந்த யுத்தத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும் ஹமாஸின் தாக்குதலை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளனர். பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏனை பாலஸ்தீன விடுதலை குழுக்களும் இத்தாக்குதலை கொண்டாடுகின்றனர். இத்தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலின் மிக முக்கிய எதிரியான ஈரான் இருப்பது பரகசியமானது. ஈரான் இத்தாக்குதல்களைக் கொண்டாடுகின்றது.

மொசாட் புலிகள் இலங்கை இராணுவம்:

இஸ்ரேல் என்ன தான் பாலஸ்தினியர்களை அழித்து அவர்கள் மண்ணில் நாட்டை உருவாக்கி அவர்களை அகதிகளாக வாழ நிர்ப்பந்தித்த போதும் அதே அடக்குமுறைக்கு உள்ளான கணிசமான தமிழர்கள் மத்தியில் யுதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் ஆதரவான நிலை எப்போதும் இருந்து வந்தது. இஸ்ரேலினுடைய அறிவு, வளம், பலம், எதிரியை அழிக்கும் கைங்கரியங்கள் பற்றி அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. உலகில் தங்களை விடுதலைப் போராளிகளாகக் காட்டிக்கொண்ட புலிகள் மொசாட் இடமும் பயிற்சிகள் பெற்றனர். அதில் ஆச்சரியம் என்னவென்றால் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கு ஒரே காலகட்டத்தில் ஒரே இடத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இத்தகவல் ஆதாரபூர்வமாக நூலில் பதிவு செய்யப்பட்டும் உள்ளது.
உலகின் பல பாகங்களிலிருந்தும் நாடற்ற யூதர்கள் கப்பலில் கொண்டு வந்து பாலஸ்தீனத்தில் இறக்கப்பட்ட பாணியில் இதனையொத்த ஒரு முயற்சியை லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மேற்கொண்டனர். அதுவே ‘வணங்கா மண்’ கப்பல் பயணம். இதனை ஆரம்பித்தவர்களில் காலாநிதி நித்தியானந்தனும் ஒருவர். இவர்களின் முட்டாள்தனம் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்ட தினங்களிலேயே கைவிடப்பட்டு நபர்கள் பயணிப்பதில்லை என்றும் பொருட்களை ஏற்றிச் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இக்கப்பல் பல மாத இழுபறியின் பின் கொழும்புத் துறைமுகத்தையடைந்து கொண்டு சென்ற பொருட்கள் பழுதடைந்த நிலையில் குப்பையாகக் கொட்டப்பட்டது வரலாறு.

பாலஸ்தின – இஸ்ரேல் யுத்தத்தின் உயிரிழப்புகளும் காயப்பட்டவர்களும் கடத்திச் செல்லப்பட்டவர்களும் இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போதே அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இரும்புக் கரம் கொண்டு இராணுவ தாங்கிகளைக் கொண்டு அடக்கி, நவீன தொழில்நுட்பத்தையும், புலனாய்வையும் கொண்டு ஒடுக்கி ஆள முடியாது என்பதை பாலஸ்தினிய விடுதலை போராளிகள் நிரூபித்துள்ளனர். பாலஸ்தினியர்களுடைய பிரச்சினையின் வேரை அறிந்து அவர்களுடைய சுயாட்சியை உறுதிப்படுத்துவதைத் தவிர இஸ்ரேல் சுமூகமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை இஸ்ரேலியர்களும் இஸ்ரேலும் உணர்ந்து கொள்வது தவிர்க்க முடியாது. இத்தாக்குதல்களுக்கு பழிவாங்க இஸ்ரேல் பல ஆயிரம் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்யலாம்.

ஆனால் அவை இப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. இஸ்ரேலின் சமாதானத்துக்கு பாலஸ்தினியர்களின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும்.